இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்;, கொழும்புக்கு வந்து முக்கியமான சில பேச்சுக்களில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பியிருக்கிறார். இலங்கையின் கடந்த நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக தோற்றம்பெற்றபோதும் அதன் அதன் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டபோதும்கூட, எந்த அசுமாத்தமும் காட்டாமல் இலங்கையின் நகர்வுகளை மதிப்பிட்டுக்கொண்டிருந்த இந்தியா, முதன் முதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் நேரடியாக சந்தித்துப் பேசியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், கடந்த தடவை ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரை சந்திக்க கிடைத்த பரந்த வாய்ப்பு போல அல்லாமல், குறுகிய சந்திப்பாக இருந்தாலும்கூட கிடைக்கப்பெற்ற நேரத்தில் முக்கியமான விடயங்களை பேசியுள்ளார்கள் என்று அறியவருகிறது.
இந்தியாவின் ஒரே நோக்கமாகவிருந்த இலங்கையின் ஆட்சி மாற்றம் நினைத்ததுபோல நடந்துமுடிந்துவிட்ட நிலையில், தற்போது தீர்வு முயற்சிகளின் பாதையில் எவ்வகையான இராஜதந்திர அழுத்தங்களை பயன்படுத்தலாம். அதுபோன்ற அழுத்தங்களை அவசரப்பட்டு பிரயோகிப்பது தற்போது அவசியம்தானா? தமிழகத் தேர்தல் நெருங்கிவருகின்ற வேளையில் என்ன மாதிரியான இந்திய வியூகம் மத்தியில் தங்களுக்கு சார்பாக அமையும் போன்ற பல நுணுக்கமான ஆய்வுகளின் பின்னரே, சுஷ்மாவின் விஜயத்தின்போது, தமிழர் தரப்புடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின் உள்ளடக்கங்கள் இந்தியாவினால் தீரமானிக்கப்பட்டிருக்கின்றன.
பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த முக்கிய பிரமுகரான சுஷ்மா சுவராஜுக்கு, வரவிருக்கும் தமிழக தேர்தல்தான் மிகமுக்கிய விவகாரமாக விஸ்வரூபமெடுத்துள்ளது. அதற்கு பிறகுதான் சகலதும். தமிழகத்தில், இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் கிளம்பியுள்ள அலையை லாவமாக தமக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்வதற்கு அதற்கு வாய்ப்புள்ள கட்சிகள் அனைத்தும் சேர்ந்து கூட்டணி அமைத்துக்கொள்வதிலும் முக்கிய அரசியல் முன்னணிகள் அனைத்தும் ஏட்டிக்கு போட்டியாக பணியாற்றி வருகின்றன. இம்மாதிரியான ஒருநிலையில், தமிழகத்தில் ஆட்சிக்கு வருகின்ற கட்சியுடன் உறுதியான கூட்டொன்றை உருவாக்குவதானால், அதற்கு இப்போதே தங்களது செல்வாக்கை தமிழகத்தில் ஆழமாக விதைக்கவேண்டும் என்ற வியூகத்துடன் பிரதமர் மோடி உட்பட பல்வேறு பா.ஜ.க. தலைவர்கள் கடந்த சில மாதங்களாக தமிழகத்தையே மொய்த்தவண்ணமுள்ளனர்.
இந்தப் பின்னணிகளின் அடிப்படையில்தான், சுஷ்மாவின் இலங்கை விஜயத்தின்போது, தமிழர் விவகாரம் தொடர்பாக பேசப்பட்ட விடயங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பிரதமர் ரணிலுடன் நடத்திய பேச்சுக்களின்போது, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினாரால் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்ற விடயத்தை பேசியிருக்கிறார். அத்துடன், தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது குறித்த ஏதுநிலைகள் குறித்தும் சம்பந்தனுடனான பேச்சுக்களின்போது கலந்தாலோசித்திருக்கிறார். தமிழகத்திலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பினருடனும் இதுவிடயம் சம்பந்தமாக பேசி, எத்தனை அகதிகள் தமிழகத்தில் உள்ளார்கள், சொந்த விருப்பத்தின் அடிப்படையில் ஊர் திரும்ப விரும்புபவர்களை எவ்வாறு அனுப்பி வைப்பது போன்ற விவரங்களையும் அவர்களை கோரியிருக்கிறார்.
ஆக, தமிழகத்தை மையமாக கொண்ட சாதகமான விடயங்களை பேச்சுக்காவது அரசு மட்டத்தில் முன்னெடுக்கவேண்டும் என்பது, சுஷ்மாவின் இலங்கை விஜய நிகழ்ச்சி நிரலில் முதன்நிலை வகித்ததில் இருந்து, தமிழகத் தேர்தல் தொடர்பான அவரது கரிசனையை ஓரளவுக்கு புரியக்கூடியதாயுள்ளது. அதனைவிட, இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு இந்தியா எப்போதும் பக்கபலமாக இருக்கும், போர் முடிந்த சூழலில் அனைத்து இன மக்களுக்கு மத்தியிலும் மேம்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகள் நம்பிக்கையை தருகின்றன போன்ற இராஜதந்திர முலாம்பூசிய பேச்சுக்களுக்கு அப்பால், தமிழர்களுக்கான தீர்வு என்ற விடயத்தில் வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற விடயம் சம்பந்தமாக இந்தியா இம்முறை ஆழமாக கரிசனை கொள்ள ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது.
தான் உறுதியளித்தது போலவே, மைத்திரி அரசு நாடாளுமன்றத்தினை அரசமைப்பு அவையாக மாற்றுகின்ற நகர்வுகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்ற இந்த வேளையில், மறுபுறம் தமிழர்களுக்கான தீர்வு சம்ஷ்டியின் அடிப்படையில் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கோட்பாட்டினை செயற்படுத்துவதற்கான நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்கொட்லாந்து வரையான பயணங்களில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், இந்திய – இலங்கை ஒப்பந்த அடிப்படையிலான தீர்வை நோக்கி தமிழர் தரப்பை நகர்த்துவதற்கு பெரிதும் கரிசனை கொண்டுள்ள இந்தியா, அதற்கு முதற்கட்டமாக பிரிந்துபோயுள்ள வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும் என்ற யதார்த்தத்தையும் அதன் அவசரத்தையும் உணர்ந்துள்ளது. அந்த இணைப்பை ஏற்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் சுஷ்மா இம்முறை விரிவாக பேசியதாக தெரியவருகிறது.
இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்படும் சுயாட்சி அடிப்படையிலான தீர்வு என்ற பிரகடனத்தில் முஸ்லிம் மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், எதிர்ப்புக்கள் எவை என்பது கருத்தில்கொள்ளவேண்டிய முக்கிய விடயம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துக்கூறியுள்ளது. வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆகையால் கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு தனி அலகொன்றை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் முஸ்லிம் அரசியல்தலைவர்கள் சிலர் முன்னர் விடுத்த கோரிக்கை இன்னமும் உயிர்ப்புடன் உள்ளதா என்ற விடயத்தையும் சுஷ்மா கேட்டறிந்துள்ளார்.
முஸ்லிம்களின் தனி அலகு கோரிக்கை என்ற பிரிவினைவாத பிரசாரம் ஒன்று, சிங்கள இனவாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்தது. ஆனால், கிழக்கில் முஸ்லிம்கள் கோரியது, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களை அடக்கிய தனி நிர்வாக மாவட்டமே என்று முஸ்லிம் அரசியல்வாதிகளால் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இது கிட்டத்திட்ட அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தேவைப்படும்போதெல்லாம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தமது பிரசார ஆயுதமாக சிங்கள தீவிரவாத சக்திகளால் பயன்படுத்தப்பட்ட விடயமே ஆகும்.
ஆனால், தற்போதைய உள்நாட்டு அரசியல் சூழலில், பூகோள அரசியல் சூழலில், முஸ்லிம் மக்களுக்கு இவ்வாறான நிர்வாக மாவட்டம் ஒன்றைக்கூட ஏற்படுத்திக்கொடுப்பதற்கு இலங்கை அரசு விரும்பினாலும் வெளிநாட்டு சக்திகள் அனுமதிக்குமா என்பது கேள்விக்குறிதான். அதேவேளை, எந்த அடிப்படையிலும் அது சரியோ பிழையோ, தனித்துவமானதொரு கோரிக்கையை முன்வைக்கின்றபோது, அதனை மிக இலகுவாக பிரிவினைவாத கோரிக்கையாக பிரசாரப்படுத்துவதிலும் அதனை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி, ஏனைய அரசியல் – இராஜதந்திர அடைவுகளை நோக்கி காய்களை நகர்த்தி நசுக்கிவிடுவதும் தற்போதைய உலக ஒழுங்கில் மிகவும் பிரபலமான அணுகுமுறை. இது முஸ்லிம் அரசியல்தலைமைகளுக்கு புரியாததும் அல்ல.
ஆகவே, தற்போதைய சூழலில், தமிழ் – முஸ்லிம் மக்களின் இணைந்த சக்தியே சிங்கள பேரினவாதிகளுக்கு எதிரான உறுதியான எதிர்ப்பாக இருக்கமுடியும். மஹிந்தவுக்கு எதிரான வியூகத்தில் இரண்டு இனமக்களும் ஒருங்கே மேற்கொண்ட முயற்சி என்ன பலாபலனை தந்தது என்பது கண்ணெதிரெ உள்ள சிறந்த எடுத்துக்காட்டு. ஆகவே, இந்த விடயத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் முஸ்லிம் காங்கிரஸிடமும் சுஷ்மா விரிவாகக் கேட்டறிந்திருக்கிறார். தமிழக தேர்தலுக்கு பின்னர் இது விடயத்தில் இந்தியாவின் இன்னமும் ஆழமான கரிசனையை எதிர்பார்க்கலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுருக்கமாக சொன்னால், தங்களது வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கு மத்தியிலும் வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற விடயத்துக்கு இப்போதைக்க பரிசம் போட்டுவிட்டு சென்றிருக்கிறார் சுஷ்மா.
– தெய்வீகன் –