இரண்டாவது, கற்பித்த ஆசிரியர்களும் பாடசாலைகளும் செய்ய வேண்டியவை. இம்முறை முடிவுகளில் இருந்து கற்ற பாடங்கள் என்ன? செய்ய தவறுகள் என்ன? செய்ய வேண்டியது என்ன என்பதை, சுயவிமர்சன நோக்கில் ஆராய்வதும் முன்னேற்றுவதற்கு வழிகாண்பதும் ஆகும்.
ஆனால், இவை இரண்டும் நடப்பதாகத் தெரியவில்லை. பரீட்சையில் தோற்ற மாணவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு, எல்லோரும் தப்பித்து விடுகிறார்கள். இது தீர்வல்ல; இது வளமான எதிர்காலச் சந்ததிக்கான வழியுமல்ல.
இலங்கையில் கல்வி, கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக, மிகுந்த நெருக்கடியை எதிர்நோக்குகின்றது. இந்நிலையில், ‘கல்வி எதற்காக’ என்ற வினாவையும், ‘கல்வி யாருக்காக’ என்ற வினாவையும் கேட்பது தவிர்க்க இயலாதது.
நம்முடைய கல்வி முறை, கடந்த 50 வருடங்களாகப் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இன்று நம்மிடையே உள்ள பாடசாலைக் கல்விமுறை, ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டது. கொலனியச் சூழலில், கொலனிய நிர்வாகத் தேவைகளை முதன்மைப்படுத்தி உருவான கல்வி முறை, கொலனியத்தின் கீழ் ஏற்பட்ட சமூக மாற்றங்களை உள்வாங்கியும் அதன் பின்பான மாற்றங்களுக்கு அமையவும் மாற்றங்களுக்கு உட்பட்டது.
எனினும், கல்வி புகட்டும் முறை, பாடசாலை வகுப்பறை சார்ந்தே பேசப்பட்டாலும், கடந்த 25 வருட காலத்துக்குள் பாடசாலைகள், கல்வி முறை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சீரழிவு காரணமாக, கல்வி முறையில் சீர்திருத்தத்தைப் புகுத்தினாலும் அது எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளது.
‘எல்லோருக்கும் இலவசக் கல்வி’ என்ற கொள்கையும் பல்கலைக்கழகம் வரையான அதன் நீடிப்பும், கல்வி வாய்ப்புகளைப் பரவலாக்கியது. இதனடிப்படையில், எழுதவும் வாசிக்கவுமான அறிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டால், நம் கல்வி முறை, ஆசியாவில் வெற்றிகரமான ஒன்றே! ஆனால், கல்வியை அவ்வாறு மதிப்பிடல் சரியாகாது.
ஏனெனில், அனைவருக்கும் கல்வி வாய்ப்பையோ, எல்லாப் பாடசாலைகளிலும் ஒப்பிடத்தக்க கல்வித் தரத்தையோ உறுதிசெய்ய, இலவசக் கல்விமுறையால் இயலவில்லை. சாதி, வர்க்க, இன அடிப்படைகளில் மக்கள் பிரிவுகளுக்கு நெடுங்காலம் மறிபட்ட கல்வி வாய்ப்பு, மிக மெதுவாகவே வந்து சேர்ந்தது.
எமது கல்விமுறையானது, சமூகப் பயனுள்ள மனிதர்களை உருவாக்குகின்றதா என்பது, நாம் எல்லோரும் கேட்க வேண்டிய அடிப்படையான வினா. இன்று நமது கல்வி முறை, நாட்டினதோ மக்களினதோ நலன்களை முதன்மைப்படுத்துகின்ற ஒன்றல்ல. அது எஜமானர்களது கட்டளைகளுக்கமைய இயங்கக் கூடிய, சிற்றூழியர்களை உற்பத்தி செய்யும் ஒரு கருவியாக மாறிவிட்டது.
இன்னொருபுறம் நமது கல்வி, வணிக மயமாகிவிட்டது. பரீட்சைப் பெறுபேறுகளே கல்வித் தொழிற்சாலைகளின் உற்பத்திப் பண்டங்களாகி விட்டன. பெறுபேறுகளே அனைத்தையும் தீர்மானிக்கின்றன. வெற்றி தோல்வியின் அளவுகோல் அதுவே! இது பிள்ளைகளையே பாதிக்கின்றது.
எமது பாடத்திட்டத்தில், விஞ்ஞானக் கற்பித்தலின் ஆய்வுகூடக்கூறு, மோசமாகக் குறைந்துள்ளது. ஆய்வுகூடங்கள் இன்மை, வளப்பற்றாக்குறை என்பன இதில் பிரதானமானவை.
பாடத்திட்டங்கள் மிகப்பெரியதாகவும் ஏராளமான தரவுகளை உடையதாகவும் அமைந்துள்ளன. மாணவர்கள் அவற்றைப் படிப்பதை விடுத்துத் தகவல்களை மனனஞ்செய்ய முற்படுகின்றனர். இது மாணவரின் ஆய்ந்தறியும் திறனைக் கெடுத்துள்ளது.
இணையத்தினூடு உடனடியாகத் தகவல்களைப் பெறக்கூடியமையும் கேள்வியின்றித் தகவல்களை ஏற்கும் போக்கும், பிரச்சினையை மேலும் மோசமாக்கியுள்ளது. இதன் மிகக்கேடான விளைவுகளை, பல்கலைக்கழகங்களில் கற்கின்ற மாணவர்களின் நடத்தை உறுதிசெய்கிறது.
ஒருபுறம் உலகமும் கற்றலும் வேகமாக நவீனமாகையில், நமது வகுப்பறைக் கல்வி, பாரம்பரிய அறிவு வழங்கல் மாதிரியில் இருந்து அதிகம் விலகவில்லை. இதைச் சாத்தியமாக்க, பாடசாலை ஆசிரியர்களை மீள்பயிற்சிக்கு உட்படுத்துகிற தேவை மிகமுக்கியமானது. ஆனால், அதில் கவனம் செலுத்தப்படுவதில்லை.
மேலும், பாடசாலைக் கல்வி முறையின் தொடர்ச்சியான உயர்கல்வியானது, எவ்வாறு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களுடன் பொருந்துகின்றது என்பது பற்றியோ, பாடசாலைக் கல்வியையும் பல்கலைக்கழகக் கல்வியையும் தொடர்ந்து, தொழிலொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவான, தொழில் பயிற்சிகளுக்கான திட்டங்கள் என்ன என்பது பற்றியோ, போதிய கவனம் எதுவும் இல்லாமலே, கல்விச் சீர்திருத்தங்கள் வருகின்றன.
ஏட்டுப்படிப்பைவிட, நடைமுறை சார்ந்த விடயங்களுக்கு அழுத்தம் தரவேண்டும் என்பது, இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், அதைச் செயற்படுத்துவதாகக் கல்விமுறையோ, பாடசாலைகளோ இல்லை. கற்றலுக்கு புறம்பான செயற்பாடுகளைப் பயனற்றதாக நோக்கும் போக்கு, ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் அதிகரித்துள்ளது.
இந்தக் கல்வி முறைமை, மாணவர்களது தனிப்பட்ட மேம்பாட்டுக்கோ, சமூக மேம்பாட்டுக்கோ போதியதுமல்ல; உகந்ததுமல்ல. இன்றைய பாடசாலைகள், சமூக மேம்பாட்டுக்கும் சமூக உணர்வுக்கும் ஆற்றும் பங்கு மிகவும் குறுகி விட்டது. பல்கலைக்கழகக் கல்வியும் அதே விதமாகச் சீர்குலைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
மாணவரின் பாடசாலை வேலைச் சுமை, முன்பை விட அதிகரித்துள்ளது. தனியார் கற்றலுக்கு (டியூசன்) போகுமாறு பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களை உந்துவது, சுமையை மோசமாக்குகின்றது. பரீட்சையை நோக்காகக் கொண்ட கல்வி அணுகுமுறை, கல்வித் தரத்தின் சரிவுக்கு ஒருபுறம் பங்களிக்க, மறுபுறம் மாணவர்கள் மீதான மிகையான சுமையும் காரணியானது. எமது கல்விமுறைச் சீரழிவுக்கு, மிகவும் பங்களித்த விடயங்களில் ஒன்று, தனியார் கல்வி நிலையங்களின் வருகையும் தனியார் கற்பித்தலும் ஆகும்.
பாடசாலைகளோடு ஒப்பிடக்கூடியளவு கல்வியில் ஈடுபடும் கட்டத்தை, தனியார் கல்வி நிலையங்கள் எட்டியுள்ளன. முழுமையாகப் பரீட்சையை மட்டுமே நோக்காகக் கொண்ட தனியார் கல்வி நிலையங்கள், மாணவர்களைப் பரீட்சைக்கு தயார்படுத்தும் தொழிற்சாலைகளாகி விட்டன. இது மாணவர்களின் சுயகற்றலையும் அறிவுத்தேடலையும் சிதைக்கின்றது; கற்றலைப் பரீட்சைக்குரியதாக மட்டும் சுருக்குகிறது.
தனியார் கற்பித்தல் என்பது, முறையான பாடசாலைக் கல்விக்கு மட்டுமன்றி, அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற இலக்குக்கும் குழிபறித்துள்ளது. பாடசாலை ஆசிரியர்கள், தனியார் கல்வி நிலையங்களையே நம்பி இருக்கிறார்கள். பாடசாலை மாணவர்கள், தனியார் கற்றலை மேற்கொள்வதால் பாடசாலையில் ஆசிரியர்கள் கற்பிக்காமல் இருப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
மறுபுறம், இதே ஆசிரியர்கள் இக்கல்வி நிலையங்களில் கற்பிப்பதன் மூலம் பணமீட்டுகிறார்கள். காலையில் பாடசாலையில் வெண்கட்டியைக் கையால் தொடாதவர்கள், மாலையில் தொண்டை கிழிய, ஆடையெல்லாம் வெண்கட்டித் துகள்கள் நிறைய, கற்பிக்கும் எத்தனையோ பேரை நாமறிவோமல்லவா? முதலில் பிள்ளைகளிடத்தில் குற்றம் காண்பதை நிறுத்துவோம்.
நல்ல பெறுபேறுகளைப் பெற்று, பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதால், வளமான சமூகம் உருவாகும் என்ற மாயையை நாம் முதலில் தகர்த்தெறிவோம். போட்டியும் பொறாமையும் குழிபறிப்புகளும் நிறைந்தவையாக எமது பல்கலைக்கழகங்கள் திகழ்கின்றனவே? பகடிவதை என்ற பெயரில், மனநோயாளர்கள் தங்கள் வக்கிரங்களை நிறைவேற்றுகிறார்களே? அதற்கு பல்கலைகழகமே, மறைமுகமாகத் துணை நிற்கிறதே? இவைதான் வளமான சமூகத்தின் அறிகுறிகளா?
இதிலிருந்து நாம் விடுதலை பெறுவது எவ்வாறு என்பதே, நம்முன்னுள்ள சவால். எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தவும் எதையும் ஆராய்ந்து அறியவும், எந்த நிபுணத்துவத்தையும் எதிர்த்து வாதாடவும் ஆற்றலும் உறுதியும் கொண்டஓர் இளம் தலைமுறை உருவாக, நாம் என்ன செய்யமுடியும்?
நமது கல்வி நிறுவன அமைப்புகளின் வரையறைகளுக்குள் இது இயலுமானதல்ல. பழைமையில் ஊறிச் சீரழிந்த ஓர் அமைப்பால், இதைச் செய்ய இயலாது. சமூக ஈடுபாடும் சமூக நீதிக்கான வேட்கையும் அநீதிகளுக்கு எதிரான கோப உணர்வும் விமர்சன மனோபாவமும் சமூக மாற்றத்துக்கான செயலூக்கமும் வெகுசனம் சார்பான நடைமுறையும் மாணவப் பருவத்திலே பயிராக்கப்பட வேண்டும்.
சமூக உணர்வற்ற கல்விமான்களும் தொழில் வல்லுநர்வுகளும் இயந்திரங்களைவிடக் கீழானவர்கள். இவர்களை பல்கலைக்கழகங்களிலும் சமூகத்திலும் நாம் அன்றாடம் சந்திக்கிறோம்.
பரீட்சைகளும் பெறுபேறுகளும் முடிவல்ல. உயர்தரப் பரீட்சை முடிவுகள் ஒரு மாணவனின் அறிவையோ திறமையையோ அளவிடும் அளவுகோல்களல்ல. இப்பரீட்சையின் வெற்றி தோல்விகள், ஒருபோதும் வாழ்க்கையின் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிப்பதில்லை.
பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று, உயர்பட்டங்களைப் பெற்றோர், வாழ்க்கையில் தோற்ற கதைகள் எம்மத்தியில் நிறைந்து கிடக்கின்றன. பரீட்சைகளையும் பெறுபேறுகளையும் ஒருபக்கமாக வையுங்கள். பிள்ளைகள் வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுப்போம். வாழ்க்கையை நேசிக்கவும் வாழவும் தெரிந்த பிள்ளைகளே, சகமனிதனையும் சமூகத்தையும் நேசிப்பார்கள்.