பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், சமர்ப்பித்திருக்கிறது ம ஹிந்த ராஜபக்ஷ ஆதரவு, ஒன்றிணைந்த எதிரணி.
இந்தமாத முற்பகுதியில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது அதை அவர்கள், சபாநாயகரிடம் கையளித்திருக்கிறார்கள்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, வெற்றி பெறுமா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்படுவாரா என்ற கேள்விகள், அரசியல் வட்டாரங்களில் மாத்திரமன்றி, மக்களிடமும் எழுந்துள்ளன.
225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில், 113 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மாத்திரமே, ரணில் விக்கிரமசிங்கவைப் பதவிநீக்கம் செய்ய முடியும்.
ஆனால், 52 உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றிணைந்த எதிரணி, எவ்வாறு 113 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்தே, இந்தப் பிரேரணை வெற்றிபெறுமா என்பது தெரியவரும்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு நாடாளுமன்றத்தில் 107 ஆசனங்கள் இருக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 44 உறுப்பினர்கள் உள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும் ஜே.வி.பி ஆறு ஆசனங்களையும் கொண்டிருக்கின்றன.
106 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடன் தான், அரசாங்கத்தை அமைத்திருந்தது.
கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என்பது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினரின் கருத்தாக உள்ளது. ஏற்கெனவே இவர்கள், அரசை விட்டு விலகப் போகதாகக் கூறியிருந்தனர். எனினும், பின்னர் ஒரு மாத காலஅவகாசம் கொடுத்து, அந்த முடிவைக் கைவிட்டனர்.
கூட்டு அரசாங்கத்தில் இருந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதிகாரபூர்வமாக விலகிக்கொண்டால், ஐ.தே.க அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை இழந்து விடும்.
ஆனால், அவ்வாறானதொரு முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுப்பாரா என்பதுதான் முக்கியமான பிரச்சினை. அதற்கான வாய்ப்புகள் தற்போது தென்படாத நிலையில்தான், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி கவிழ்ப்பதற்காக, ஒன்றிணைந்த எதிரணி, அடுத்த அஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கிறது,
ஒன்றிணைந்த எதிரணி, தன்னிடம் உள்ள 52 உறுப்பினர்களை மாத்திரம் நம்பி, நம்பிக்கையில்லாப் பிரேரரணை என்ற அஸ்திரத்தைக் கையில் எடுக்கவில்லை. ஏனென்றால், ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களால் மாத்திரம், ரணில் விக்கிரமசிங்கவைக் கவிழ்த்து விட முடியாது,
113 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால் தான் அது சாத்தியம். அவ்வாறாயின், எஞ்சிய 61 உறுப்பினர்களின் ஆதரவை, ஒன்றிணைந்த எதிரணி, எவ்வாறு பெறப் போகிறது என்பதே முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்படும் உள்ளகக் குழப்பங்களைப் பயன்படுத்தி, ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான ஒரு குழுவினரை வெளியே எடுத்து, அவருக்கு எதிராக வாக்களிக்க வைப்பது முதல் திட்டம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் இருக்கும், 44 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது இரண்டாவது திட்டம்.
இந்த இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றுவதன் மூலம், 113 வாக்குகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது ஒன்றிணைந்த எதிரணியின் கணக்கு.
ஆனால், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஏகப்பட்ட குழப்பங்களும் இருக்கின்றன.
இந்தக் குழப்பங்களைக் கடந்தால் தான், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, 113 வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இரட்டை வேடம் போடுவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
அவர் வெளிப்படையாகப் பிரதமரைப் பதவி நீக்கப்போவதாகக் கூறிக் கொண்டிருந்தாலும், அவர் உள்ளூர ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாக்க முனைகிறார் என்ற சந்தேகங்களும் இருக்கின்றன.
சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேணையில், மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்து இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாம், பிரதமர் பதவியைக் கைப்பற்ற நினைக்கவில்லை என்றும், மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவரைப் பிரதமராக நியமித்தால், ஆதரிக்கத் தயார் என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
இதிலிருந்து, தற்போதைய சூழ்நிலையில், குட்டையைக் குழப்பிக் கொள்வதுதான், மஹிந்த ராஜபக்ஷவின் திட்டமா என்ற சந்தேகமும் உள்ளது.
மஹிந்த, ஏன் இந்த இரட்டை நிலைப்பாட்டை எடுக்க முனைகிறார், அரசாங்கத்தைக் குழப்பத்தில் வைத்திருக்க முனைகிறார் என்பது முக்கியமான விடயம்.
இதை ஒரு செயலற்ற அரசாங்கமாக, இன்னும் வெளிப்படுத்துவதன் மூலம், வாக்காளர்களை முழுமையாகத் தன் பக்கம் திருப்பலாம் என்று அவர் கணக்குப் போடக்கூடும்.
ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருப்பது அவரது இப்போதைய உத்தியாக இருக்கலாம்.
அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்படுவது, இதுதான் முதல் முறையல்ல. அந்தக் கட்சிக்குள் பெரும்பாலான காலங்களில், இப்படியான குழப்பங்கள் தோன்றியிருக்கின்றன.
இத்தகைய பல குழப்பங்களை வெற்றிகரமாகச் சமாளித்து வந்தவர் ரணில் விக்கிரமசிங்க. அவரது பதவி, பறிபோகப் போகிறது என்ற கட்டம் வரை சென்ற பல சந்தர்ப்பங்களும் இருந்தன. ஆனாலும், கட்சிக்குள் அவர் தன்னை வலுப்படுத்தி வந்திருக்கிறார்.
அவருக்கு இப்போது மீண்டும் சோதனை வந்திருக்கிறது. பாலித ரங்க பண்டார, வசந்த சேனநாயக்க உள்ளிட்ட பலரும், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.
இவர்களில் ஒரு பகுதியினரின் ஆதரவைப் பெற்றே, நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு முயல்கிறது ஒன்றிணைந்த எதிரணி. அதை அடிப்படையாக வைத்துத்தான், ரணிலை ஐ.தே.கவினரே பதவி கவிழ்ப்பார்கள் என்று மஹிந்த ராஜபக்ஷவே கூறியிருந்தார். ஒன்றிணைந்த எதிரணியின் இந்தத் திட்டத்தைத் தெரிந்து கொண்டதை அடுத்தும், உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்தும் ஐ.தே.க தலைமை, அவசர அவசரமாக உள்ளக மறுசீரமைப்பு முயற்சிகளில் இறங்கியிருக்கிறது.
தலைமைப் பதவியை விட்டுக்கொடுக்க, தான் தயாராக இருப்பதாக, ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, தனக்குப் பின், யாரைத் தலைவராக நியமிப்பது என்ற பரிந்துரையைச் செய்யுமாறு ரணிலினால் கோரப்பட்டிருக்கிறது.
இவ்வாறாக, ஐ.தே.கவுக்குள் அவசர மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டத் தலைவர்களைத் திருப்திப்படுத்தும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் மூலம், ரணிலுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியவர்கள், தமது முடிவை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. இது ஒன்றிணைந்த எதிரணிக்குச் சாதகமானதாக இருக்காது.
அடுத்து, மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கப்போகும் முடிவு, இதில் முக்கியமானது.
சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைப் பிரதமராக நியமித்தால் ஆதரவு தருவோம் என்று மஹிந்த ராஜபக்ஷ ஆசை காட்டுகிறார். இதன் மூலம், ரணிலுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி, அரசாங்கத்துக்குள் வலுவான அணியை உருவாக்க, அவர் முனைகிறார். மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் உள்ள 44 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர், இன்னமும் ராஜபக்ஷ விசுவாசிகளாகத் தான் இருக்கிறார்கள். அவர்கள் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் இங்கு பிரச்சினையல்ல.
ஐ.தே.கவுக்குள் எவ்வாறு ஒன்றிணைந்த எதிரணியை ஆதரிக்கும் சிலர் இருக்கிறார்களோ, அதைப்போலவே ஐ.தே.கவை, ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றவர்கள், சிலரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருக்கிறார்கள்.
மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான 44 உறுப்பினர்களில் ஒரு சிலர், ஏற்கெனவே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டு விட்டாலும், மற்றொரு பகுதியினர் அதை வலுவாக எதிர்க்கிறார்கள்.
குறிப்பாக, சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசநாயக்க உள்ளிட்டவர்கள், இதை வலுவாக எதிர்க்கிறார்கள். ஒருவேளை, ஒன்றிணைந் எதிரணியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணையும் சூழல் ஏற்பட்டால், இவர்கள், ஐ.தே.க பக்கம் செல்வதற்கும் தயங்கமாட்டார்கள்.
ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள 44 உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளித்தாலும் மற்றொரு பகுதியினர் அதை எதிர்த்து வாக்களிப்பர் என்பதில் சந்தேகமில்லை.
இப்படியான குழப்பங்கள் எல்லா மட்டங்களிலும் உள்ள நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேணையை, ஒன்றிணைந்த எதிரணி எவ்வாறு நிறைவேற்றப் போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம்.