அய்யா அம்மா வீட்டில் எவ்வளவோ கஷ்டங்கள் வந்தபோதும் அண்ணன் பற்குணத்தின் பணத்தேவைகளை எப்படியோ கடன்பட்டு சமாளித்தனர்.அய்யா ஊரில் இல்லாதபோது ஏதாவது பணம் தேவையான நேரங்களில் எமது உள்ளூரில் சிறிய பலசரக்குக் கடை நடாத்தி வந்த வேலன் என்கிற வேலப்பா அவசர தேவைகளுக்கு கை கொடுப்பார்.இவர் தன் பொருட்களுக்கு ஒரு சில சதங்களை ஆதாயமாக வைத்து வியாபாரம் செய்தபோதும் ஊரில் சிலர் விளக்கமின்றி கொள்ளை வேலன் என்பார்கள்.ஆனால் அவர் நல்ல மனிதர்.நாணயமானவர்.எங்களுக்கு உணவுத்தேவைகளுக்கு கூட கடன் தந்தவர்.ஒரு நாளும் கடனை திருப்பிக் கேட்டு தொல்லை தந்தது இல்லை.
பற்குணம் விடுமுறை காலங்களில் ஊருக்கு கண்டியில் இருந்து மரக்கறிகள் வாங்கிவருவார்.இவர்மூலமே எங்களுக்கு கோவா கறிமிளகாய் லீட்ஸ் மற்றும் பழவகைகளை கண்டோம்.எமது ஊர் பாடசாலைக்குள் இரவு நேரங்கள் விடுமுறை நாட்களில் உயர்வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார்.எங்கள் ஊர் மந்துவிலில் படு மொக்கன் என கருதப்பட்டு பின்னாளில் மத்திய கல்லூரி அதிபராக இருந்த இராசதுரைக்கு உற்சாகம் கொடுத்ததில் பற்குணத்தின் பங்களிப்பே அதிகம்.இவரே அதிக தடவை க.பொ.த சாதாரண தரம் பரீட்சை எடுத்தவர்.அதுபோல சி.தங்கராசா என்பவரும் பற்குணத்தால் உயர்ந்தவர.இவர்கள் பற்றி பின்னர் வரும்
பற்குணத்துக்கு ஊரில் நண்பர்கள் அதிகம்.எல்லோரிடமும் பழகும் சுபாவம் இயல்பில் உண்டு.இவர்களில் நடராசாவின் தம்பி கே.வி. தங்கராசாவும் ஒருவர்.இவரும் ஒரு சிலருமே உயர்தர பாடசாலைகளில் படித்தவர்கள்.மற்றவரகள் பாமரர்கள்.
அண்ணன் பற்குணம் தன் 19 வயதில் பல்கலைக்கழகம் புகுந்தவர்.ஒரு வருடத்தின் பின்பாக தை மாதம் அளவில் விடுமுறையில் வந்து நின்றார்.இரண்டு நாட்களின் பின்பு அவரைக் காணவில்லை .யாருக்கும் தகவல் தெரியாது. பொதுவாக அம்மாவிடம் சொல்லாமல் எங்கேயும் போவதில்லை .இறுதியாக தங்கராசாவை தேடினார்கள்.அவர் கண்டாவளைக்கு அறுவடை வேலைக்குப் போய்விட்டதாக்கிய அவர் அம்மா சொன்னார்.அன்றைய சூழல் அமைதியானது ஆகையால் பதட்டப்படவில்லை.
இவ்வாறு தேடிக்கொண்டு இருக்கும்போது எமது பேரனார் சடையப்பா என்பவர் வீட்டுக்கு வந்தார்.அப்போது எங்களின் பரபரப்பை அறிந்த அவர் நேற்று சின்னராசன் (பற்குணத்தை உறவினர் நாங்கள் அழைக்கும் பெயர்)என்னபட்ட அருவாளை வாங்கிக்கொண்டு போனான் என்றார்.அப்போதுதான் விசயம் விளங்கியது.அவரும் தங்கராசா மூலம் வயலுக்கு கேலிக்கு அருவி வெட்ட சென்றுவிட்டார்.
இதை அறிந்த அம்மா வேதனப்பட்டார்.அய்யாவுக்கு கடிதம்போட்டார்.அய்யாவுக்கும் கவலை.ஆனால் பற்குணம் இதை தனக்காக தன் காசு தேவைக்காக செய்யவில்லை .எங்களுக்கு அய்யா அம்மாவுக்கு கொஞ்சம் ஓய்வ கொடுக்கவே கூலிக்குப் போனார்.இந்தக் கூலியானது நெல்லாக அப்பசி மாதங்களில் வீட்டில் கொண்டு வந்து கொடுப்பார்கள்.
இந்த வேலை சுலபமானதல்ல.காலை ஆறுமுக தொடங்கி இரவு அவரை வயலில்தான்.இது அவருக்கு புது அனுபவம் ஆனபோதும் சலிக்காமல் அந்த படிக்காத தொழிலாளர்களோடு தொழிலாளியாக பட்டதாரி மாணவன் வயலில் நின்றார்.இவர் பட்டதாரி மாணவன் என்னும் விசயம் கூட இரகசியமாக பாதுகாத்தனர்அவரது நண்பர்கள்.அங்குள்ள எல்லா அசௌகரியங்களையும் பொறுத்து அந்தக் களத்தில்,நின்றார்.
வீடு திரும்பியபோது அம்மா அழுதுவிட்டார்.அப்போது எந்த தொழில் செய்வதும் கேவலமில்லை.உழைக்காமல் இருப்பதே கேவலம் என்றாராம்.எங்கள் குடும்ப பாரத்தைக் குறைக்க இதுவும் ஒரு வழி என்றாராம் .படித்து வேலை தேடுபவர்கள் இதை அறிவது நல்லது.
(விஜய் பாஸ்கரன்)
(தொடரும்….)