பற்குணம் ஏ.ஜி.ஏ ( பகுதி 46 )

பற்குணம் தன் பதவி என்ற எல்லைக்கு அப்பால் சென்றும் அராஜகத்துடன் மோதியவர்.அன்றைய நாட்களில் பற்குணத்துடன் சமகாலத்தில். பல்கலைக் கழகத்தில் படித்த பொன்னையா,கணேசபிள்ளை,சின்னராசா ஆகியோர் வேலை கிடைக்காத காரணத்தால் ப.நோ.கூ சங்க பொது முகாமையாளர்களாக பணிபுரிந்தனர்.பொன்னையா குச்சவெளி (இவர் தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் உறவினர்)சின்னராசா தம்பலகாமம்- இவரின் சொந்த ஊரும் அதுவே.அடுத்தது கணேசபிள்ளை கந்தளாய்.

கணேசபிள்ளை கொடிகாமம் அய்யாவின் உறவினர்.பற்குணத்துடன் ஏழாவது வகுப்பு தொடங்கி பல்கலைக்கழகம் அவரை படித்தவர்.மிக கண்ணியமானவர்.பலமான சண்டித்தன பின்னணி கொண்டபோதும் எந்த வன்முறை கடுமையான சொற்பிரயோகங்கள் எதையும் விரும்பாத அப்பிராணி மனிதர்.இவரின் மனைவி யோகேஸ்வரி உசாரானவர்.மட்டுவில் மகாவித்தியாலயத்தில் நடந்த சரஸ்வதி பூசை பிரச்சினையில் சாதிவெறியர்களை எதிர்த்து போரிட்ட பெண்.ஆனால் கணேசபிள்ளை அமைதியின் உருவம்.

இவர் கந்தளாயில் முகாமையாளராக பணிபுரிந்தபோது சிங்களவரான அந்த கூட்டுறவு சங்க தலைவர் கடுமையாக மிரட்டி வைத்திருந்தார்.பிரச்சினைகளை விரும்பாத இவர் அமைதியாக வேலை செய்துவந்தார்.பற்குணத்தின் தம்பகாம வீட்டிற்கு இவர்கள் வந்தபோது யோகேஸ்வரி விசயத்தை சொன்னார்.பற்குணம் அப்படியா என கேட்டுவிட்டு அனுப்பிவிட்டார்.

பின்னர் அந்த தலைவர் பற்றி அவர் யார்,அரசியல் பின்னணி முகவரி எல்லாம் அறிந்தபின் திடீரென ஒரு நாள் கந்தளாய் சென்று கணேசபிள்ளையையும் அழைத்துக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றார்.அவரும் தமிழர்கள் அதுவும் முகாமையாளர் என கண்டபின் வரவேற்று உபசரித்தார்.எல்லாம் முடிந்த பின் பற்குணம் நீங்கள் இவரை மிரட்டுவதாக அறிந்தேன்.இனிமேல் இவரை மிரட்டினால் என் பதில் வேறுவிதமாக இருக்கும்.எச்சரிக்கை என அவர் வீட்டில் வைத்தே கூறினார்.இதை கொஞ்சமும் எதிர்பாராத அவர் பயந்துவிட்டார்.அவருக்கு கணேசபிள்ளையுடன் வந்தவர் யார் எனவும் தெரியாது .பற்குணமும யார் என சொல்லவில்லை.அதன்பின் கணேசபிள்ளையை அழைத்துச் கொண்டு வந்துவிட்டார்.

கணேசபிள்ளை பெரும் பதட்டம் அடைந்தார்.பற்குணம் அவருக்கு ஆறுதல்சொல்லி அவர் வீட்டில் இறக்கிவிட்டு வந்தார்.

அதன்பின் அந்த தலைவர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் மிராண்டா என்பவரிடம் விபரத்தை கூறியுள்ளார்.மிராண்டா அவசரப்படாமல் கணேசபிள்ளையை சந்தித்து விபரத்தைக் கேட்டார்.அப்பொது கணேசபிள்ளை வந்தவர் பற்குணம் தம்பலகாமம் ஏ.ஜி.எ என பதிலளிக்க இன்ஸ்பெக்டர் பயந்துவிட்டார்.அந்த நாட்களில் ஒரு ஏ.ஜி.எ அல்லது டி.ஆர்.ஓ வை மீறி பொலிஸ் எதுவும் செய்யமுடியாது.

அதைவிட பற்குணம் அன்றைய அரச அதிபர் திஸ்ஸ தேவேந்திராவுடன் நெருக்கமானவர் என அறியப்பட்டவர்.அவர் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்ப பின்னணி உடையவர்.

அதன்பின்னர் அந்த தலைவர் கணேசபிள்ளையுடன் மிக கண்ணியமாகவே நடந்தார்.அப்பாவிகளை அச்சுறுத்துவதை பற்குணத்தால் பொறுக்க முடிவதில்லை.

பற்குணம் தனது பணிகளில் அரசியல் மற்றும் சண்டித்தன சவால்களுக்கு துணிவாக முகம்கொடுத்தே தன் கடமைகளையும் நிறைவேற்றினார்.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)