எனக்கு இரண்டு வயதில் பற்குணம் பல்கலைக்கழகம் சென்றுவிட்டார்.இதன் காரணமாக நான் அவரோடு சேர்ந்து வாழ்ந்த நாட்கள் குறைவு. ஆனாலும் அவரே எனக்கு மிகப் பிடித்த அண்ணனாக இருந்தார்.நான் குழப்படி காரப் பிள்ளை.குழப்படியை நமது சமூகம் ஒழுக்கக் குறைவாகவே கருதியது.ஆனால் பற்குணம் அப்படியான குழந்தைகளை,சிறுவர்களை செயற்திறன் மிக்க பிள்ளைகளாகவே கருதினார்.எனவே அவர் என் குழப்படிகள் பற்றி கவலை கொள்ளவில்லை.மேலும் என்னைச் சீண்டி ஒருமையான வார்த்தைகளால் என்னிடம் பேச்சு வாங்குவார்.இதுவும் என்னையும் அவரையும் நன்கு இணைக்க காரணமானது எனலாம்.
நான் சிறுவயதில் இருந்து பத்திரிகைகள் படிப்பவன்.உலகின் தலைநகரங்கள் தலைவரகள் என்பன பற்றி வயதுக்கு மீறி தெரிந்து வைத்திருந்தேன்.இதை எவரும் எனக்கு திணிக்கவில்லை.ஆனால் கதைகள்,படிப்பதில்லை.
ஒரு நாள் தம்பலகாமத்துக்கு விடுமுறையில் சென்றபோது உனக்கு ஒரு வேலை தருகிறேன் என்று அகிலன் எழுதிய வெற்றித் திருநகர் என்ற புத்கத்தைத் தந்தார்.இதைப் படித்து இந்த கதை சொன்ன பின்பே நீ எங்கேயும் போகலாம் என்றார்.இவ்வளவு பெரிய புத்தகத்தை நான் எப்படி படிப்பது என்றேன்.
பள்ளிப்படிப்பு மட்டும் படிப்பு அல்ல.இதையும் படிக்க வேண்டும்.எனக்கு வேறு வழியில்லை.ஒருவாறாக மூன்று நான்கு நாட்களில் படித்து முடித்தேன்.அதன் பின் கதையைக் கேட்டார்.சொன்னேன்.நல்லது,ஆனால் திரும்பவும் இன்னொரு முறை படி என்றார் .எனக்கோ என்னடா இது தொல்லை என யோசித்தேன்.வேறு வழியின்றி திரும்பவும் படித்து முடித்தேன்.
கதையைக் கேட்டார்.சொன்னேன்.நீ என்ன விளங்கினாய் அடுத்த கேள்வி.கதையை மீண்டும் சொன்னேன்.எனக்கு எம்.ஜி.ஆர் படம் பார்த்து கதை சொன்ன மாதிரி சொல்லாதே.விளங்கிச் சொல் என்றார்.அதன் பின் உனக்குத் தெரியுமா தமிழில் ஒரு பழமொழி – தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்றார்.ஓம் என்றேன்.ஆனால் அப்போது சிந்திக்கவில்லை.
அதன் பின் அவர்மீதான எரிச்சலுடன் வழியின்றி கதை படித்தேன்.அதன் பின்பு அண்ணி அந்தக் கதை பற்றிக் கேட்டார்.எனக்கு கதையின் அர்த்தம் தெளிவாக விளங்கியதால் அண்ணியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.அதைக் கேட்டுக் கொண்டிருந்த அவர் இதைத்தான் நான் எதிர்பார்த்த பதில் என்றார்.அதன்பின்பே அவர் கேட்ட பழமொழி நினைவுக்கு வந்தது.
அதன்பின் சித்திரப்பாவை என தொடர்ச்சியாக பல நாவலகளைப் படிக்கத் தந்தார்.இறுதியாக ஜெயகாந்தன் எழுதிய வாழ்க்கை அழைக்கிறது என்ற நாவலை படிக்க வைத்து எப்படி என்றார்.அப்போது சொன்னேன் எல்லோரும் கதைகளை எழுதுகிறார்கள் .இவர் சமூகத்தின் அவலங் களை கதையாக தருகிறார் என்றேன்.அவரின் முகத்தில் சந்தோசம்.அவர் ஏன் எனக்கு திணித்தார் என அப்போது விளங்கிக் கொண்டேன்.
அப்போதுதான் பேராசிரியர் கைலாசபதி பற்றி எனக்குச் சொன்னார்.அவரின் விமர்சனங்களைப் பற்றி பெருமையாக கூறினார்.அதன் பின் ஜெயகாந்தன் கதைகளைவிட முகவுரைகளை ரசிக்கத்தொடங்கினேன்
அவரின் எல்லாச் செயற்பாடுகளிலும் உள்ளேயும் வெளியேயும் சமூகப் பார்வையே இருந்தது.அதற்கு அவர் கடந்து வந்த பாதைகளும் கற்பித்த பல்கலைக்கழக பேராசிரியர்கள்,மற்றும் தெரிவு செய்த அரசியல் பாதைகளுமே காரணம்.
(Vijaya Baskaran)