குச்சவெளியில் நாங்கள் இருந்த பங்களாவின் பின்னால் ஒரு அரசாங்க நெற் களஞ்சியம் ஒன்று கட்டப்பட்டு வந்தது.இந்த நெற் களஞ்சியத்தை அண்மித்த பகுதியில் கரடிமலை பக்கமாக ஒரு சைவ கோவிலை மீனவர்கள் கட்டியிருந்தார்கள்.அந்த கோவிலுக்கான சிலை மட்டும் வர தாமதமானதால்அது உடனடியாக இயங்கவில்லை .அந்த கோவில் அமைந்த இடம் அரசாங்கத்துக்கு உரியது.
(இந்த இடத்தில் உள்ள மலையில் இப்போது விகாரை அமைக்கப்பட்டுள்ளது.சிறுவனாக இருந்த காலத்தில் நாங்கள் இந்த மலைமேல் விளையாடினோம்)
அரசாங்த்தால் அமைக்கப்பட்ட நெற் களஞ்சியத்தை அமைச்சர் ஹெலிகொப்டரில் பார்வையிட வருகிறார் என்ற செய்திகள் பத்திரிகைகளில் வந்தன.அந்த அமைச்சர் ஹெக்டர் கொப்பேகடுவ என நினைக்கிறேன்.
ஆனால் டி. ஆர்.ஓ என்ற முறையில் பற்குணத்துக்கு ஒரு தகவலும் கிடைக்கவில்லை.இறுதி நாள்வரை பொறுமையாக மௌனமாகவே நின்றார்.குறிக்கப்பட்ட நாளின் முதல்நாள் அரச அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்டார்.அதற்கு அவரும் தனக்கு எந்த தகவலும் அனுப்பவில்லை.எனவே நான் வரமாட்டேன் என்றார்.நாங்கள் வராமல் ,அதிகார பூர்வ அனுமதி தராமல் நான் போக மாட்டேன் என்றார்.அரச அதிபரும் சரி என்றார்.
மறுநாள் அமைச்சர் வந்து இறங்கினார்.பாடசாலை மாணவரகளான நாங்கள் முதல் முதலாக ஹெலிகொப்படரைப் பார்த்தோம்.அமைச்சரை கிராம சேவையாளர் அண்ணன் லத்தீப் வரவேற்றார்.டி.ஆர. ஓவைக் கேட்டார்.எமது வீட்டின் பின் புறம் என்பதால் சிலர் வந்து பற்குணத்தை அமைச்சர் கேட்பதாக அம்மாவிடம் கேட்டார்கள்.அம்மா நிலாவெளி போய்விட்டதாக சொன்னார்.ஆனால் அவர் வீட்டிலேயே இருந்தார்.
அமைச்சர் நெற்களஞ்சியத்தையும் அண்மித்த பகுதிகளையும் அங்கிருந்தே பார்வையிட்டார்.அவர் ஹெலி பறந்தபின் பற்குணம் அலுவலகம் போனார்.
அமைச்சரின் வருகை குறித்து தனக்கு ஏன் முன் அறிவித்தல் தரவில்லை என விளக்கம் கேட்டு அரச அதிபருக்கும் உள்ளூராட்சி அமைச்சுக்கும் கடிதம் அனுப்பினார்.இதை எதிர்பார்த்த அரச அதிபர் பற்குணத்தை பாராட்டினார்.
அவரின் கடிதத்துக்கு பதில் வராமல் வேறு ஒரு கடிதம் வந்தது.அங்கே கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் சைவக் கோவிலை தடுக்கும்படி கடிதம் வந்தது.கம்யூனிசவாதியான பற்குணத்தை இனவாதம் தாக்கியது.இக் காலத்திலேயே சிங்கள வர்த்தகர்கள் திருகோணமலை பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து வியாபாரம் தொடங்கினர் .
(இந்த குச்சவெளி நெற்களஞ்சியப் பொறுப்பாளர் பின்னர் நிர்வாக சேவையில் சேரந்தார்.அவர்தான் வட கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர் தியாகலிங்கம் )
(விஜய் பாஸ்கரன்)
(தொடரும்….)