பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 29 )

குச்சவெளி டி.ஆர்.ஓ.அலுவலகத்துக்கு புதிதாக மயில்வாகனம் என்ற தலைமை லிகிதர் நியமிக்கப்பட்டார்.இவர் மூதூர் பகுதியைச் சேர்ந்தவர்.மிக நேர்மையும் திறமையும் மிக்கவர்.இதுவே அவருக்கு பல இடங்களில் மேலதிகாரிகளிடம் பிரச்சினைகளைக் கொடுத்தது.அவர் பொறுப்பேற்க வர முன் குடும்பம் சகிதமாக பற்குணத்தை சந்திக்க வந்தார்.தன்னைப்பற்றிய எல்லா விபரங்களையும் சுய விமர்சனமாக சொன்னார்.

பற்குணம் நிர்வாகத்துக்கு புதிது என்பதால் அவரையும் அனுபவங்களையும் மிகவும் பிடித்திருந்தது.அப்போது அவருக்கான அரசாங்க வீட்டில் வேறு ஒரு குடும்பம் இருந்தது.எனவே அவர்களை இடம்மாற்ற கால அவகாசம் கேட்டார்.அவர் தனக்கு வீடு தேவை இல்லை.அவர்கள் அங்கே இருக்கட்டும் என பெருந்தன்மையுடன் சொன்னார்.

மயில்வாகனம் பொறுப்பேற்றதும் பற்குணத்துக்கு உண்மையில் பல வேலைப்பழுக்கள் குறைந்தன.பல நுணுக்கங்களை அவர் மூலமாகவும் தெரிந்துகொண்டார் .முடிவெடுக்கும் போது பல நல்ல ஆலோசனைகளை வழங்கினார்.பற்குணமும் கண்டிப்பாக கலந்துரையாடுவார்.முன்னரைவிட டி.ஆர்.ஓ அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கியது.மயில்வாகனமும் மகிழ்ச்சியோடு பணியாற்றினார்.

இந்த அலுவலகத்தில் சபீதா உம்மா என்ற இளம் குடும்பபெண் பணியாற்றனார்.இவர் ஒரே ஒரு இஸ்லாமியர்,பெண் என்பதாலும் பற்குணம் மிக மரியாதை கொடுத்து நடத்தினார்.

ஒரு தடவை பற்குணம் அலுவலக விசயமாக கொழும்பு சென்றபோது மயில்வாகனம் நிர்வகித்தார்.அந்த நாட்களில் சபீதா உம்மா செய்து முடிக்கவேண்டிய வேலைகளை முடிக்கவில்லை .இதனால் மயில்வாகனம் அஅவரைகள் கண்டித்தார்.இது பொறுக்கமுடியாத சபீதா உம்மா தன் தவறை உணராமல் அவர்மீது கோபப்பட்டு திட்டினார்.இதனால் மயில்வாகனம் அவரை வெளியே அனுப்பிவிட்டார்.

இதை அறிந்த அவரினோ கணவர் சில ஆட்களுடன் வந்து அலுவலக வாசலில் தகாத வாரத்தைகளால் திட்டி வலுச்சண்டைக்கு அழைத்தார்.உண்மையில் அலுவலகமே ஆடிப் போனது.

ஓரிரு நாட்களில் பற்குணம் வந்துவிட்டார்.மயில்வாகனம் விசயத்தைச் சொன்னார்.பற்குணம் சபீதா உம்மாவின் கணவரின் அடாவடித்தனத்தை நிராகரித்தார்.முதலில் அந்த சம்பவங்களுக்காக சபீதா உம்மாவை மன்னிப்புக் கேட்கச் சொன்னார்.அவர் மறுத்துவிட்டார்.ஆயினும் சில நாட்கள் பொறுத்தார்.அவர் இறங்கிவருவதாக இல்லை.

அவர் அலுவலக பிரச்சினையை பெரிதாக எடுக்கவில்லை. நிர்வாகத்துக்கு சவாலான சண்டித்தனத்தை ஏற்கவில்லை.அரச அதிபருக்கு அறிவித்துவிட்டு வேலையை விட்டு நீக்கினார்.

சபீதா உம்மா அன்றைய மூதூர் பா.உ வும் பிரதி அமைச்சருமான மஜீத் இன் உதவியைக் கோரினார்.மஜீத் தொலைபேசி மூலம் அவரை பணியில் அமர்த்தும்படி வற்புறுத்தினார்.அவரிடம் விபரத்தை சொல்லிவிட்டு இனிமேல் என் நிர்வாகத்தில் தலையிடவேண்டாம் என அவரிடம் கூறினார்.மஜீத் கோபத்தில் போனை வைத்துவிட்டார்.

இந்தவிபரத்தை அரச அதிபருக்கு அறிவித்தார்.அரச அதிபர் தான் அதைக் கவனிப்பதாகவும் பற்குணத்தை யோசிக்கவேண்டாம் என கூறினார்.அரச அதிபரும் சபீதா உம்மாவுக்கு மீண்டும் வேலை வழங்க சம்மதிக்கவில்லை .

இதுதான் பற்குணத்தின் அரசியல்வாதியுடனான முதல் மோதல்.இதன் பின் பற்குணத்தை இடம்மாற்றுவதாக மஜீத் சவால் விட்டார்.சபீதா உம்மாவுக்கு ஆசிரிய நியமனம் பெற்றுக் கொடுத்தார்.

பல பினாமிகளை வைத்து போலி முறைப்பாடுகளை உள்துறை அமைச்சுக்கு மஜீத் அனுப்பினார்.அரச அதிபர்மூலம் அவை பற்குணத்தை வந்தடைந்தன.அனுப்பியவரகளைத் தெரிந்தும் காட்டிக்கொள்ளாமல் வேலை செய்தார்.

(விஜய் பாஸ்கரன்)
(தொடரும்…..)