பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 33 )

பற்குணம் இந்தக் காலங்களில் குச்சவெளி ப.நோ.கூட்டுறவுச் சங்க தலைவராக பொறுப்பேற்க நிர்பந்திக்கப்பட்டார்.இவர் பொறுப்பேற்ற பின் புதிய கட்டடம் ஒன்றுக்கு அலுவலகம் மாற்றப்பட்டது. இந்தக் காணியில் இந்தியாவிலிருந்து குடியேறிய ஏழைக்குடும்பம் வாழ்ந்து தோட்டம்செய்து வந்தனர்.அதே நேரம் மாடுவளர்ப்பும் அவர்களது தொழில்.இவரகளை சிலர் வெளியேற்ற விரும்பினர்.ஆனால் பற்குணம் அதை மறுத்துவிட்டார்.இதே போல ஒரிரு குடும்பங்கள் அரசாங்க காணிகளில் குடியிருந்தனர்.அவரகளுக்கு காணிகளை வழங்கமுடியாத போதும் அவர்களை பாதுகாத்து அங்கே இருக்க வழிசெய்தார்.

ப.நோ.கூ. சங்கத்தில் சில பதவிகள் காலியாக இருந்தன.எனது அண்ணன்கள் இருவர் வேலையின்றி இருந்தனர்.அவரகளை நியமிக்க சிலர் ஆலோசனை வழங்கினர்.பற்குணம் இந்தப் பிரதேசம் தவிர்ந்த எவருக்கும் நியமனம் வழங்கமுடியாது என உறுதிபடக் கூறினார்.இதன் முகாமையாளராக பொன்னையா என்பவர் இருந்தார்.இவர் மறைந்த தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் உறவினர்.

இவர் தலைவராக இருந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து விதை வெங்காயம் எடுப்பித்து குச்சவெளி பிரதேசத்தில் வெங்காய செய்கையை ஊக்குவித்தார்.இதற்கு அன்றைய மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ந. சண்முகம் நல்ல ஒத்துழைப்பை வழங்கினார் .

இந்த வெங்காய செய்கைக் காரணமாக்கி குச்சவெளி- திரியாய் இணைக்கும் கள்ளம்பத்தை பகுதியில் விவசாயிகளுக்கு காணிகளை வழங்கி குடியேற்றம் செய்தார்.இந்தப் பகுதியில் சிங்கள குடியேற்றம் உருவாக்க அன்றைய ஹொரவப்பொத்தானை எம்.பி முயன்றார்.இப்பகுதியில் குடியேற திரியாய் மக்களே அக்கறை காட்டினர்.வெங்காயச் செய்கை முயற்சி மிக வெற்றிபெற்றது.இதேபோல முஸ்லிம்களுக்கு புடவைக்கட்டை அண்மித்த பகுதிகளில் காணிகள் வழங்கப்பட்டன.அவரகளும் விவசாயத்தில் இறங்கினர்.

நான் படிக்கும் பாடசாலையில் ஒரு ஆசிரியை சில நேரங்களில் வீட்டில் என்ன சாப்பாடு மரக்கறி என விசாரிப்பார்.நானும் உண்மையைச் சொல்வேன்.ஒரு நாள் அவரே எங்கள் வீட்டில் சமைத்த காய்கறிகள் பெயரைச் சொன்னார்.இதை நான் அம்மாவிடம் சொன்னேன்.ஒரு நாள் அம்மா முருங்கைக்காய சமைத்தார். பற்குணம் விரும்பி சாப்பிட்டுக்கொண்டே அம்மாவிடம் எங்கே வாங்கினீர்கள் என்றார்.அப்போது அம்மா நீ கொடுத்துவிட்டதாக ஒருவர் வந்அது கொடுத்தார் என்றார். நான் கொடுத்துவிடவில்லை என்று கொடுத்தவர் பற்றி விசாரிக்க நானும் ரிச்சரினோ கதையைக் கூறினேன்.

பற்குணம் எவர் என்ன சாமான் கொண்டுவந்தாலும் இனி வாங்க வேண்டாம் என அம்மாவிடமும் என்னுடமும் கூறினார்.பின் காய் கறி கொண்டுவந்தவரை கண்டுபிடித்து பணத்தைக் கொடுத்து எச்சரித்து அனுப்பிவிட்டார்.அதன் பின் பொருட்கள் வாங்குவதை நானும் என்னுடைய நாலாவது அண்ணனும் செய்தோம்.பற்குணம் பொருட்களை வாங்கி அனுப்ப வேண்டாம் என அம்மா சொன்னார். பற்குணம் இலஞ்சம் எந்த உருவத்தில் வந்தாலும் அதை நிராகரித்தார்.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்…..)