பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 37 )

பற்குணத்தின் திருமணம் உறுதிசெய்யப்பட்டது .இது எங்கள் பெரிய அண்ணனுக்கு ஏமாற்றமாக இருந்தது.அவர் சீதனம் வாங்கி செய்துவைக்கவே விரும்பினார்.பற்குணம் சீதனத்தை அறவே நிராகரித்தார் . நாங்கள் இவ்வளவு காலமும் மண்குடிசையில் இருந்ததால் வீடு ஒன்றை கட்டும் முயற்சி எடுக்கப்பட்டது.அதே நேரம் பற்குணம் தன் படிப்புக்காக வாங்கப்பட்ட கடன்களை திருமணத்தின் முன்பாக அடைக்க விரும்பினார்.இதில் பெரிய கடன்களாகும் ருபா 2000,2000 ஆக இருவரது கடன்கள் இருந்தன. ஒன்று உறவினர்கள் எங்கள் காணியை அடமானமாகப் பெற்றுத்தந்த பணம்.அவரகளிடம் இதுபற்றிக் கேட்டபோது வட்டியும் முதலுமாக 4800 தரும்படி கூறினார்கள்.இது காணியின் பெறுமதியைவிட கூடியதுதான்.

இதற்காக பற்குணமோ எங்கள் குடும்பமோ கொஞ்சமும் வருத்தப்படவில்லை.ஏனெனில் அந்தப் பணம்தான் பற்குணம் டி.ஆர்.ஓவை உருவாக்க உதவியது.ஆனால் அன்றைய சூழ்நிலையில் மிக பெரியதொகைப் பணம்.நாங்கள் பிறந்து வளர்ந்த காணி என்பதால் அதை விடாமல் பற்குணம் மீட்டார்.

இன்னொரு தொகைப் பணம் உயர்சாதி எனக் கருதப்படும் ஒரு குடும்பத்திடம் வாங்கியது.இதற்கும் அதே அளவு வட்டியை எதிர்பாரத்தோம்.ஒரு சதம் கூட மேலதிகமாக அவர்கள் வாங்கவில்லை என அய்யா சொன்னார்.உன் பிள்ளைச் படித்து வந்தது சந்தோசம் என்றார்களாம்.இந்த மனிதாபிமானம் வியப்புக்குரியது .

வீடுகட்டும் முயற்சி எடுக்கும்போது பெரிய அண்ணன் தனக்கு நிறைய கடன் இருப்பதாகவும் பற்குணத்தின் கல்யாணத்துக்கு தன்மனைவிக்கு வர நகைகள் இல்லை. பணம் தராவிட்டால் வரமாட்டேன் என அம்மாவிடம் முரண் பிடித்தார்.

பற்குணம் கடன்களை அடைத்தே பணம் நெருக்கடியில் இருந்தார்.அம்மா இதைச் சொன்னதும் அவர் மறுத்துவிட்டார்.அதற்குப் பெரிய அண்ணன் கல்யாணத்தை 30 வயதுவரை தள்ளலாம் என யோசனை கூறினார்.அம்மா இரண்டு பிள்ளைகளுக்கும் இடையில் சராசரி தாயாக திணறினார்.பெரிய அண்ணன் பற்குணத்துக்கோ குடும்பத்துக்கோ எந்த உதவியும் செய்ததில்லை.

அம்மாவுக்கு கல்யாணத்தை பின்போட விருப்பம் இல்லை.இறுதியாக கொஞ்சப் பணத்தை பற்குணத்திடம் வாங்கி பெரிய அண்ணனிடம் கொடுத்தார்.வீடு கட்டும் திட்டம் நிறுத்தப்பட்டது .

எந்தக் குடிசையில் பிறந்தாரோ அதே குடிசையில் வைத்து கல்யாணம் நடத்த அம்மா தீர்மானித்தார்.பற்குணமும் எந்த தாழ்வுமனப்பான்மை இன்றி ஒத்துக்கொண்டார்.

பற்குணத்தின் பதிவவுத்திருமணம் 1971 ஏப்ரலில் நடந்தபோது ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தது.யாழ்பாணம் என்றபடியால் ஓரளவு நடத்த முடிந்தது.

(எமது ஊரில் இன்னொரு பட்டதாரி இருந்தார்.அவர் பல்கலைக்கழகம் போனபின் சாரம் வேட்டி கட்டுவதில்லை.தன் வீட்டுக்குப் போவதையே கேவலமாக நினைத்தார்.அவரின் திருமணத்தை வேறு ஊரில் வேறொருவர் வீட்டில் வைத்தே நடாத்தினார்.திருமண நாளன்று அவரின் தாயை பெண்ணின் தாய்க்கு இன்னொரு பெண்ணே அறிமுகப்படுத்தினார் .

அந்த தாய் ஊருக்கு வந்து தன் உறவினர்களிடம் சொன்ன வார்த்தை உந்தப் பெரிய பதவியில் இருந்த பற்குணம் தன் வீட்டில் வைத்து கல்யாணவீடு செய்தான்.என் மகனால் மட்டும் முடியவில்லை .என் சம்பந்திக்கு என்னை இன்னொரு பெண் அறிமுகம் செய்தபோது அழுகையை வந்தது என்றார் இது பொய் இல்லை.அந்த புண்ணிய மகான் இன்னமும் இருக்கிறார்)
பற்குணம் வறுமையில் வாழந்தபோதும் தாழ்வு மனப்பான்மை கொள்ளவில்லை.படிப்பு பதவியில் உயரந்தபோதும் கர்வம் அகம்பாவம் கொண்டதில்லை.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)