1971 ஏப்ரல் கிளர்ச்சி தோல்விகண்டது. நாடு வழமைக்குத் திரும்பியது.இதன் பின் குச்சவெளியில் பொலிஸ் நிலையம் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இதன் பொறுப்புகள் பற்குணத்திடம் டி.ஆர் ஓ என்றவகையில் ஒப்படைக்கப்பட்டது .இதனை திறந்துவைக்க அன்றைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் திரு லஷ்மன் ஜெயக்கொடி வருகை தந்தார்.அன்று பாதுகாப்பு அமைச்சு பிரதமர் சிறிமா கையில் இருந்தது.இவரோடு கூடவே மூதூர் மஜீத் அவர்களும் வருகை தந்தார்.
இந்த திறப்புவிழாவை அரசியல் விழாவாக்காமல் அரச நிகழ்வாக மட்டும் ஒழுங்கு செய்து பொலிஸ்நிலையம் திறக்கப்பட்டது.இதில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அங்குள்ள போக்குவரத்து வசதியீனங்களை லஷ்மன் ஜெயக்கொடியிடம் பற்குணம் எடுத்துரைத்தார்.அதில் சலப்பை ஆற்றுக்கு பாலம் கட்ட ஏற்பாடு செய்வதாக லஷ்மன் ஜெயக்கொடி உறுதியளித்தார் .அவரோடு மஜீத்,அவர்களும் உறுதியளித்தார்.அன்றுதான் மஜீத் அவர்களை பற்குணம் முதல் தடவையாக சந்தித்தார்.லஷ்மன் ஜெயக்கொடி உறுதியளித்தபடி 1972இல் பாலம் கட்டும் வேலைகள் தொடங்கின.
குச்சவெளி பொலிஸ் நிலையம் வந்தபின் அதன் அருகே வாழ்ந்த ஏழை மீனவரகளுக்கு பெரும் தலையிடிகள் தொடங்கின.பொலிஸ்காரர்கள் தங்கள் புத்திகளை காட்ட தொடங்கினர்.அவரகள் இடத்தில் இருந்து பார்த்தால் மீனவர் வள்ளங்கள் கரை திரும்புவது தெரியும்.உடனே அவர்கள் வந்து தமக்கு பிடித்த மீன்களை கேட்காமலே எடுத்துச் சென்றனர்.
அந்தப் பகுதி அருகே அரச விருந்தினர் விடுதி இருந்தது. அங்கே பின்னேரங்களில் வெளியே இருந்து காற்று வாங்குவார்.பற்குணத்தைக் கண்டால் யாரும் வரமாட்டார்கள்.இந்த தகவலை சிலர் பற்குணத்திடம் தெரிவித்தனர்.பற்குணம் பொலிஸ் அதிகாரியிடம் பேசி இதை நிறுத்தினார்.ஆனாலும் சிலர் மறைமுகமாக தொடர்ந்தனர் .இதன் காரணமாக காலையிலும் மாலையிலும் அவ்வப்போது சென்று வருவார்.இதனால் பொலிசாரின் கெடுபிடிகள் குறைந்தன. பற்குணம் எந்தக் காலத்திலும் இலவசமாக எதையும் வாங்கியதில்லை.
(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)