அம்மா பற்குணத்தின் திருமணத்தின் பின் மந்துவிலில் இருப்பேன் என்றார்.அம்மா அதிகம் படிக்காதவர் .ஆனாலும் கூட்டுக்குடும்ப வாழ்வு அவருக்கு விருப்பம் இல்லை.அம்மா தன் தாய்,சகோதரர்களுடனும் அப்படித்தான் வாழ்ந்தார் .அம்மாவின் கருத்து சரி என்றாலும் பற்குணம் அம்மாவைவிட விரும்பவில்லை.
1971 செப்டெம்பர் 11 பற்குணத்தின் திருமணம் நடந்தது.அதன் பின் வாகனங்களில் இடம் இல்லாததால் நானும் எனது மூன்றாவது அண்ணன் வேலையாவும் பஸ்சில் குச்சவெளி வந்தோம்.அங்கே பற்குணத்தை வரவேற்பதற்காக சலப்பை ஆற்று முகத்துவாரம் தொடங்கி குச்சவெளி அவரது பங்களாவரை வரவேற்பு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.நான் பயண அலுப்பில் தூங்கிவிட்டேன்.அவரை வழியெங்கும் பொதுமக்கள் வரவேற்பு கொடுத்ததாக அம்மா சொன்னார்.வீட்டில் ஆடம்பரமான சோபா உட்பட பல பரிசுப்பொருட்களை பொதுமக்களும் அவருடன் பணியாற்றுபவர்கள்,கூட்டுறவுச் சங்கம் என நிறையவே வழங்கியிருந்தனர்.இதுவே பற்குணம் தவிர்க்க முடியாமல் மற்றவர்களிடம் வாங்கிய பொருட்கள்.
திருமணமாகி வந்தபின்னர் சில வாரங்களில் ஒரு பாடசாலைகளுக்கிடையேயான விளையாட்டுவிழா நடந்தது.இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக பற்குணம் தம்பதிகள் அழைக்கப்பட்டனர்.இது குச்சவெளியில் நடந்தது. அங்கே எனக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருப்பதால் பற்குணத்தோடு எந்த விழாக்களுக்கும் நான் போவதில்லை .
இந்த விழாவில் உரைகள் எல்லாம் முடிந்த பின் வீரர்களுக்கு பரிசளிக்க திருமதி பற்குணம் அழைக்கப்பட்ட போது அவர் எழும்ப முன் அங்கிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த கல்வி அதிகாரி எழுந்து தான் பரிசுகளை வழங்குவதாக அறிவித்தார்.அப்போது சிலர் அவரை எதிர்க்க முற்பட பற்குணம் சைகையால் அனைவரையும் அமைதியாக்கினார்.
விழா முடிந்தபின் பலர் பற்குணத்திடம் மன்னிப்புக்கேட்டனர்.யாழ்ப்பாண கலாச்சாரத்தை எள்ளி நகையாடினார்கள்.மறுநாள் வீட்டிற்கும் வந்து நடந்த சம்பவத்தைப் பற்றி பேசினார்கள். பற்குணம் அதைப் பற்றி கவலைகொள்ளவில்லை. இது திருமதி பற்குணத்துக்கு புது அனுபவம் என்பதால் மனக்கவலை அடைந்தார்.
அந்த கல்வி அதிகாரி பெயர் தங்கராசா என நினைக்கிறேன்.யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்தவர்.
அந்த நிகழ்வின் பின் கும்புறுப்பிட்டி ,நிலாவெளி,பறண மதவாச்சி, தென்னமரவாடி ஆகிய இடங்களுக்கும் திருமண வரவேற்புக்காக அழைக்கப்பட்டனர்.
இறுதியாக புல்மோட்டை இஸ்லாமிய மக்கள் பிரமிப்பான வரவேற்பை கொடுத்தது மட்டும் அல்ல விலையுயர்ந்த வானொலிப்பெட்டி பல சுவர் கடிகாரங்கள் என அன்பளிப்புகளை வழங்கினர்.ஜே.வி.பி கலவரத்தின்போது பற்குணம் நேரடியாக இறங்கி அஅந்த ஊர்மக்களை காப்பாற்றியதற்கான நன்றியின் வெளிப்பாடு.அன்பு.
இறுதியாக குச்சவெளி இஸ்லாமிய மக்கள் தாங்களும் தனியாக ஒரு வரவேற்பை வழங்கினர்.இந்த வரவேற்பே எங்கள் அம்மா பற்குணத்துடன் கலந்துகொண்ட கடைசி பொது வைபவம்.இதில் அழகான மெட்டுடன்
ஏழைகளின் தோழன் எங்கள் டி.ஆர்.ஓ அய்யா
மக்கள் நலம் காக்கும் எங்கள் பற்குணம் அய்யா
என்ற பாடலுடன் வரவேற்றனர்.அம்மாவின் முகத்தில் ஆனந்த கண்ணீர் சிந்த வைத்த பாடல்.இது பல காலமாக சினிமா பாடல் போல எனது இஸ்லாமிய பாடசாலை நண்பர்கள் பாடுவார்கள்.
தன் வாழ்நாள் சந்தோசமாக இந்தப் பாடலை அம்மா ரசித்தார்.