பற்குணம் (பகுதி 109 )

1989 பொது தேர்த்லில் ஈ.பி.ஆர் எல் எப் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அதன் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.இந்த தேர்தலில் இவர்களை வெல்ல விடாமல் தடுக்க புலிகள் முடிவு செய்தனர்.எனினும் தோல்வி பயம் காரணமாக தமது ஆதரவாளர்களை களம் இறக்கப் பயந்தனர்.எனவே அவர்களின் பினாமிகளாக ஈரோஸ் அமைப்பை களம் இறக்கினார்கள்.

இந்த தேர்தலில் ஈ பி ஆர் எல் எப். ஐ தோற்கடிக்க சாதியை ஆயுதமாக புலிகள் கையில் எடுத்தனர். ஈ பீ என்றால் ஈ ழத்துப் பள்ளர் என மறைமுகமாக ஈரோசும் புலிகளும் எதிர்ப்பு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டனர்.அப்படி செய்தும் பல நெருக்கடிக்கு மத்தியில் ஈ.பி ஆர் எல் உறுப்பினர் மூவர் வெற்றி பெற்றனர்.கிழக்கில் இவை எடுபடாத்தால் ஈ.பி ஆர் எல் எப் வெற்றிபெற்றது.கூட்டணி சின்னத்தில் ஒன்றாக போட்டியிட்டபோதும் மக்கள் கூட்டணியை நிராகரித்து ஈ பி ஆர் எல் எப் உறுப்பினர்களை தேர்வு செய்தனர்.இதன் காரணமாக மட்டக்களப்பில் தேசிய பட்டியல் ஆசனத்தை ஈ பி ஆர் எல் எப் தமக்கே உரியது என உரிமை கோரியது.ஆனாலும் இத்தேர்தலில் மட்டக்களப்பில் தோல்வியடைந்த அமிர்தலிங்கம் கட்சி தலைவர் என்ற முறையில் தானே எடுத்துக் கொண்டார்.இதன் காரணமாக ஈ பி ஆர் எல் எப் -கூட்டணியிடையே ஒரு முறுகல் நிலை உருவானது.

இந்த தேர்தலில் எமக்கு நெருங்கிய ஒருவர்(அரச பதவியில் உள்ளவர்) கூட்டணி,ஈ பி ஆர் எல் எப் ,ஐ.தே.க மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரே நேரத்தில் ஆதரவாளரான நடித்தார்.ஆனால் இவர் கூட்டணி ஆதரவாளர்தான்.கூட்டணிக்கு தெரிந்தே வேசங்களைப் போடுவார்.
இந்த பொதுத் தேர்தலின் பின்பாக இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு பொது இடத்தில் பகிரங்கமாக அன்றைய ஜனாதிபதி பிரேமதாசா அறிவித்தார்.புலிகளுடனும் நட்புறவை ஏற்படுத்தினார்கள் .

இந்த சூழலில் பற்குணம் ஒருநாள் கொழும்பு வந்தார்.கொழும்பு வந்தால் அவர் என்னை ஏற்றி இறக்குவது வழமையான ஒன்று.இதவே நாங்கள் பேசிக்கொள்ள கிடைக்கும் நேரம்.எனக்கென நேரம் ஒதுக்குவது இல்லை.இந்த தடவை வரும்போதும் என்னை ஏற்றி இறக்கும்போது நாளுக்கு இரவு வரமுடியாது.அரச பதவி வகிக்கும் கொழும்பு நண்பர் எனது வாகனத்தை இரவல் கேட்டுள்ளார் என்றார்.

நான் ஏன் என்றேன்.அவர் அமிர்தலிங்கம்,சிவசிதம்பரம் ஆகியோரை விருந்துக்கு அழைத்துள்ளார்..அவர்களை ஏற்றி இறக்க எனது ஜீப்பை இரவல் கேட்டுள்ளார் என்றார்.அவரின் நிறுவனத்தில் நிறைய வாகனங்கள் உண்டு.அவருக்கே சொந்த பாவனையில் வாகனம் உண்டு என சொன்னேன்.அவர் கேட்டுவிட்டார்.நான் ஓம் என்று விட்டேன் என்றார்.

நான் கேட்டது பற்குணத்துக்கு சந்தேகத்தை கிளப்பி இருந்தாலும் அவர் அதை காட்டிக்கொள்ளவில்லை .அவர் யாரையும் சந்தேகத்தின் அடிப்படையில்,அணுகுவதும் இல்லை.அவர் என்னை வீட்டில் இறக்கிவிட்டுப் போய்விட்டார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)