(இது ஒரு தனி நபர் பற்றிய பதிவாக பலராலும் பார்க்கப்படலாம். ஆனால் என்பார்வையில் ‘பற்குணம்’ என்பது ஒரு சமூகத்தின் குறியீடாகவே நான் பார்கின்றேன். இந்தப்பதிவு தமிழ் சமூகத்திற்குள் நிலவி வந்த வருகின்ற ‘சிறுபான்மை’ என்ற கருத்தியலின் உள் கட்டமைப்பை தெளிவுபடுத்த உதவும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு எனவே இதனைப் இங்கு தொடரந்தும் பிரசுரிக்கின்றேன் – ஆசிரியர்)
எங்கள் பிறப்புக்கும் அறிவுக்கும் மூலகாரணமான அய்யாவில் இருந்து ஆரம்பிக்கின்றேன். அய்யா மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தவர்.ஒரே சகோதரி.சிறுவயதில் தாயை இழந்து தனிமையில் துன்பப்பட்டவர்.அவருக்கு கல்விமீது தீராத ஆசை.எமது கிராமத்தில் அந்தக் காலத்தில் சிறுபாடசாலை இயங்கியது.அதில் உயர் சாதிமாணவரகளுக்கே கற்பித்தனர்.அதில் அய்யாவின் வயதை ஒத்த சிலர் படிக்க விரும்ப அவர்களும் அனுமதித்தார்கள்.ஆனால் வெளியே நின்றுதான் படிக்க வேண்டும்.கோடை காலம் வெயில்.மழைகாலம் வெள்ளம்.இதைச் சகித்தே படிக்கவேண்டும்.
இதை அவதானித்த கத்தோலிக்க மிசனறி 1921 இல் எமது சமூகத்துக்கு ஒரு பாடசாலையை அமைத்துக் கொடுத்தது.இங்கே சுதந்திரமாக கல்விகற்க முடிந்தாலும் மேற்கொண்டு படிக்க மதம் மாற வேண்டியிருந்தது.அய்யா கல்விக்காக அதை விரும்பினார்.ஆனால் அப்பு(அய்யாவின் தகப்பன்) விடவில்லை .அய்யாவுக்கு இருந்த ஒரே ஆதாரம் அப்பு.அவரை மீறமுடியாமல் படிப்பை இழந்தார்.அந்தப் பாடசாலையால் ஒருவரைக்கூட மதம் மாற்றமுடியவில்லை.நமது கிராம்மும் கல்வியை நோக்கி நகரமுடியவில்லை.
எமது கிராமத்தில் எமது முன்னோர்கள் காலம் காலமாக நாட்டுக்கூத்து போடுவார்கள்.இதன் காரணமாக ஆரம்ப பள்ளி அறிவை வைத்து புராணங்கள்,இலக்கியங்களை தெரிந்து வைத்திருந்தார்.அம்மாவும் அப்படித்தான் அறிவை வளர்த்தார்.அவரகளுக்கு புராண இதிகாசங்களின் குட்டிக் குட்டிக் கதைகள் கூட தெரியும்.இந்த நாட்டுக்கூத்து பரம்மபரை அய்யாவின் காலத்தோடு முடிந்துவிட்டது.அய்யாவின் தலைமுறையில் நடந்த நாட்டுக்கூத்துகளுக்கு ஒரு இளைஞன் ஆர்மோனியம் வாசிப்பதற்கு வந்தார்.அவர்தான் பின்னாளில் பிரபலமான மயான காண்டம் வி.வி.வைரமுத்து அவர்கள்.
அய்யா தான் படிக்காவிட்டாலும் அடுத்த தலைமுறை தவறிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.அவர் திருமணம் முடித்து பெரிய அண்ணன் 1939 இல் பிறந்தார்.சின்ன அண்ணன் பற்குணம்1944 இல் பிறந்தார்.வறுமையான குடும்பங்கள் என்றபோதும் பலருக்கு இவரகள் இருவருமே முதல் பேரப்பிள்ளைகள் ,மருமக்கள் என்பதால் அதிகம் செல்லமாகவே வளர்ந்தனர்.
அய்யா ஏற்கனவே பலரிடம் நான் என் பிள்ளைகளை கண்டிப்பாக படிப்பிப்பேன்.என் பிள்ளைகள் என்னைப் போல மரம் ஏறவோ,கூலிவேலை செய்யவோ விடமாட்டேன் சொல்லுவார்.இவன் படிப்பித்து பிள்ளைகளுக்கு கொறணமேந்து வேலையா கிடைக்கப் போகுது என்று உறவினர்கள் மாமாக்கள் கூடவே கேலி பண்ணுவார்களாம்.
எங்களுக்கு பூட்டப்பா என்று இருந்தார்.பற்குணம் பிறந்தபோது அவரின் சாதகத்தைக் கணித்து இவர் ஏழு ஊரை ஆள்வான் எனக் இருக்குது கொஞ்சம் கவனமாக வளர்.அவரின் கணிப்பு ஊர் சண்டியன் ஆகிவிடுவான் என்பதே. இதை அய்யா அப்படி வந்து சொல்லிவிட்டு அவன் அப்படி வரமாட்டான்.மணியகாரனாக சிலவேளை வருவான் என்றாராம்.
ஏற்கனவே படிப்பிக்கப் போகிறேன் என்ற சொல்ல கிண்டலடிக்கிற ஊர் இதையும் சொன்னால் எப்படி இருக்கும்.பேசாமல் வாயை வைத்துக் கொண்டிருங்கோ என சொல்லிவிட்டார் .
அய்யா மௌனமாக இருந்தாலும் அவரின் கனவும் எண்ணங்களும் விரிந்து கொண்டே இருந்தன.அதை நோக்கியே குடும்பத்தை நகர்த்திக் கொண்டிருந்தார்.
(தொடரும்…..)
(விஜய பாஸ்கரன்)