வரணி மகாவித்தியாலயம் அவருக்கு ஓரளவு நிம்மதி கொடுத்தது.எமது பெரிய அண்ணன் பத்தாவது ஒருவாறாக சித்தியடைந்தார்.அம்மாவும் திரும்பி வந்துவிட்டார்.வீட்டு நிலைமைகள் ஓரளவு வழமைக்குத் திரும்பின. அம்மா இரண்டரை வருடம் காங்கேசன்துறை வைத்தியசாலையில் இருக்க வேண்டிய பிரதான காரணம் அங்கே கச நோய் பற்றிய விபரமான டாக்ட்ரை இல்லாமல் போனதே.பின்னாளில் லண்டனில் படித்து வந்த டாக்டர் ஒருவரே பல நோயாளிகளைப் பரிசோதனை செய்து வீட்டுக்கு அனுப்பினார்.அதுவரை காலமும் அந்த நோயாளிகள் சீமந்து ஆலையின் புகையை சுவாசித்ததே மிச்சம்.ஆயினும் அம்மாவை பூரண குணப்படுத்தியது தியாகேசர் என்கிற நாட்டு வைத்தியர்தான்.
இந்த காலத்தில் எமது ஊரில் ஒரு அதிசயம் நடந்தது.எமது ஊர் றோ.க. பாடசாலை 1921ல் தொடங்கப்பட்டு முதன்முதலாக ஒருவர் மதம் மாறினார்.அவரதான் க.நடராசா.அத்துடன் அவரின் தம்பி தங்கராசாவும் மதம் மாற்றப்பட்டு கோப்பாயில் படிக்க சேர்ந்தார்.நடராசாவுக்கு தொண்டர் ஆசிரிய நியமனம் கிடைத்தது.
எமது பெரிய அண்ணன் தொடர்ந்து படிக்க விரும்பவில்லை .வேலைகளை தேடத் தொடங்கினார்.எங்கள் அய்யா சிறுபான்மை தமிழர் மகாசபையின் உறுப்பினர்.முழுமையாக செயற்பட பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை .எம்.சி.சுப்பிரமணியத்தின் நல்ல நண்பர்.
வரணி மகாவித்தியாலயம் அண்ணன் பற்குணத்துக்கு நிறைய மாற்றத்தை உருவாக்கியது.பயம் கொஞ்சம் விலகத் தொடங்கியது.இவரது நண்பனாக இணைந்து கொண்ட கணேசபிள்ளை இளம் வயதில் சாஸ்திரங்கள் படிப்பார்.அவரின் சாஸ்திரப்படி அண்ணன் பெரிய நிலைக்கு வருவார் என எப்போதும் சொல்வாராம்.
மத நம்பிக்கைகள் அற்ற அண்ணன் தன் வாழ்நாளில் அவரைச் சந்திக்கும்போது சாஸ்திரங்கள் கேட்பார்.மற்றவரகள் சொன்னால் குறுக்குக் கேள்விகள் கேட்டு சாஸ்திர கார்ர்களை உண்டு இல்லை என்றாக்கி விடுவார்.
எமது நாலாவது அண்ணன் இரத்தினசிங்கம் படிப்பில் மிக மந்தமான ஒருவராக இருந்தார்.அதுவும் கணிதம் என்பது அவருக்குப் புரியாத ஒன்றாக இருந்தது.அவரின் படிப்பையாவது நிறுத்து என மாமா ஒருவர் கூற அதைக் கேட்ட அந்த அண்ணன் எல்லோரும் படிக்க நான் நிறுத்துவதா எனக் கேட்டாராம்.அப்போது அய்யா மாமாவை பேசி வெளியே அனுப்பிவிட்டார்.
அவருக்கு பின்நாட்களில் நான் ஆரம்ப கணிதம் என்னை விரட்டியே என்னிடம் இருந்து கற்றார்.வேடிக்கை என்னவெனில் அவர் இப்போது த.தே.கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்.இவர் ஒருவரே எமது வீட்டில் தமிழரசு ஆதரவாளர்.