இடைச் செருகலாக
பண்டாரநாயக்க இறந்தாலும் அவரின் திட்டங்களை அரசு தொடர்ந்து முன்னெடுத்தது. இதன் பிரகாரம் வடபகுதியில் பல பாடசாலைகளை சிறுபான்மை தமிழர்களுக்காக மகாசபை மூலமாக நிறுவியது. இதன் மூலம் படித்த சிறுபான்மை தமிழ் இளைஞர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்குவதாக அறிவித்தது. இதனால் எம்.சி. சுப்பிரமணியம் தலைமையிலான மகாசபை தீவிரமாக இயங்கியது. 1960 இல் தனியார் பாடசாலைகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்டன. எமது கிராமப் பாடசாலையும் அரசு மயமானது. நடராசா அங்கு கற்பித்த போதும் நிரந்தர நியமனம் கிடைக்கவில்லை.
எமது கிராமத்திலும் அயற்கிராமங்களிலும் சிறுபான்மைத் தமிழர்களுக்கான பாடசாலைகள் கட்டப்பட்டன. பாடசாலை நேரங்களில் கற்பிக்காமல் இந்த கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டங்களை பார்க்க நடராசா அடிக்கடி போய் வருவார். அந்த பாடசாலைகள் அனைத்தும் தன் முயற்சியால் கட்டப்படுவதாக அப்பாவி பாமரர்களிடம் கதை விடுவார். இந்தப் புழுகுச் செய்தியை சில வருடங்களுக்கு முன் வேறொருவர் மூலமாக வெளிநாட்டில் செய்தியாக வெளியிட்டார். அவருக்கும் நிரந்தர நியமனம் தேவை என்பதால் எம்.சி.சுப்பிரமணியத்துடன் நட்பு பாராட்டினார்.
இந்த பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனங்கள் கோரப்பட்டன. எல்லோரும் தன்மூலமாக விண்ணப்பிக்க கோரினார். தான் மகாசபையின் பிரதிநிதி போன்று செயற்பட்டார். ஆளுக்கு இருநூறு ரூபா கேட்டார். பலர் நம்பி கொடுத்துவிட்டனர். எனது பெரிய அண்ணன் யோகசிங்கத்திடமும் கேட்டார். எங்கள் அய்யா எம்.சி. சுப்பிரமணியத்திடம் விபரத்தை சொல்ல அவர் உசாராகிவிட்டார். எந்தப் பணமும் யாருக்கும் கொடுக்க வேண்டாம் என சொன்னார். அய்யா பகைகளை விரும்பாத்தால் யாருக்கும் சொல்லவில்லை.
பற்குணம் படிக்க தொடங்கிய பின் வீட்டில் கொஞ்சம் பொருளாதார இறுக்கம்தான். பெரிய அண்ணன் வேலை இல்லாமலே திருமணத்தில் ஆர்வம் காட்டினார். அம்மாவின் உடல்நிலை காரணமாக அவர் திருமணம் செய்வதை அம்மாவும் விரும்பினார்.
இது தொடர்பாக அண்ணன் பற்குணம் எந்த கருத்தையும் சொல்லவில்லை. அவர் படிப்பை தொடர்ந்தார். கல்லூரியில் இவரும் இவரது நண்பன் கதிர்காமநாதன் அவர்களும் நிர்வாக ரீதியாக சர்சைக்குரிய மாணவரகளாகவே விளங்கினர். இவரகளை மாணவர் தலைவராக்கி கட்டுப்படுத்த முயன்றனர். அதற்கும் இருவரும் மறுத்துவிட்டனர்.