பற்குணம் A.F.C (பகுதி )58

பற்குணம் கொழும்புக்கு இடமாற்றமாகியபோது அவரின் சம்பளம் அவருக்கு போதுமானதாக இருக்கவில்லை.இதன் காரணமாக ஒரு வீட்டின் பாதிப்பகுதியை வாடகைக்கு எடுத்தார்.இந்த வீடு அல்வாயையைச் சேர்ந்த பத்மநாதன் என்பவருடையது.இவர் கல்வி இலாகாவில் பணிபுரிபவர்.இவருக்கு மனைவியும் ஒரு மகளும் இருந்தனர்.இந்த வீடு இன்றைய திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் அருகே செல்லும் வீதியில் இருந்தது.இதன் பின் பகுதியில் அன்று வயல்வெளிகள் இருந்தன.

திருமதி பற்குணம் அவரும் ஒரு பட்டதாரி.இவர் 1970 ஆண்டு பட்டப்படிப்பை முடித்தவர்.1976 வரை இவருக்கு வேலை கிடைக்கவில்லை.1976 இல் அரசாங்கம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கியபோதே இவர் ஆசிரிய நியமனம் பெற்றார்.பற்குணத்துக்கு பல அரசியல்வாதிகள் நிர்வாகிகள் அறிமுகமாக இருந்தபோதும் எவரையும் தன் மனைவிக்காகவோ உறவுகளுக்காகவோ சிபாரிசை வேண்ண்டியதில்லை.இதன் காரணமாக திருமதி பற்குணம் வேலைக்காக ஆறு ஆண்டுகள் காத்திருந்தார்.

பற்குணம் கொழும்பில் துறைமுகத்தில் சில மாதங்கள் பணியாற்றினார்.அப்போது நமது ஊரைச் சேர்ந்த ஒருவர் கொடிகாமம் ப.நோ.கூ சாரதியாக பணிபுரிபவர் அடையாளம் கண்டு கதைத்தார்.அப்போது பல தமிழ் பகுதி லாறிகள் உணவுகளை ஏற்ற நாட்கள் தாமதிப்பதாக தெரிவித்தார்.அதை அறிந்த பற்குணம் அந்த தாமதங்களை ஏற்படாத வண்ணம் ஒழுங்கு படுத்திக்கொடுத்தார்.

இதன்பின்பு பற்குணம் கொழும்பு நகர்ப்புற அலுவலகத்துக்கு இடமாற்றம் பெற்றார்.இந்த அலுவலகம் கொழும்பு நகர மண்டபத்தின் அருகே இருந்தது.இங்கே மூன்று உணவுக்கட்டுப்பாடு அதிகாரிகள் இருந்தபோதும் பொதுமக்கள் பற்குணத்தையே தேடி வந்தார்கள்.

பற்குணத்துக்கு கொழும்பு நகரில் பணியாற்றுவது பிடிக்கவில்லை.பொருளாதார சுமை.நகர்புற நெருக்கடி இவையே காரணங்கள்.

இந்தக் காலத்தில்,1977 தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியது .

(தொடரும்…)
(விஜய பாஸ்கரன்)