எமது ஊரவர்கள் பலர் குடியேற்ற திட்ட உருவான பின்னர் வன்னி பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர் .இவ்வாறான பலரை எனக்குத் தெரியாது.பற்குணத்தை எல்லோருக்கும் தெரியும். பற்குணம் வவுனியாவில் வேலை செய்கிறார் என்ற தகவல் பலருக்கும் தெரிந்தது. நமது ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரது தேவை காரணமாக வவுனியா கச்சேரிக்கு பார்க்க சென்றார். அங்கே பணிபுரியும் ஒருவரிடம் தான் பற்குணத்தை காண வந்ததாக கூறினார். அவரும் அவர் பற்றிய தகவலை பற்குணத்திடம் கூறினார்.
தகவல் கூறியவர் போனதும் பற்குணம் வந்த நபரை எட்டிப் பார்த்தார். தெரிந்தவர்தான். ஆனால் பற்குணம் கண்டுகொள்ளவில்லை. அவரைக் கவனிக்காமல் பற்குணம் வெளியேறி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் திரும்பிப் போய்விட்டார்.
சில தினங்களின் பின்பாக அவரின் ஊரறிந்து தேடிப் போனார். அவர் அங்கே இல்லை. சில நாட்களின் பின்பாக அவரை வவுனியா பஸ் நிலையத்தில், கண்டார். தன் சாரதியை அனுப்பி அவரை வரவழைத்தார்.
என்ன விசயமாக என்னைப் பார்க்க வந்தாய் என கேட்டார். அதற்கு அவர் நீங்கள்தான் என்னைக் கவனிக்கவில்லை என கொஞ்சம் கோபமாக சொன்னார். அதற்கு பற்குணம் நீ வந்த கோலம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அப்படி செய்தேன் என்றார்.(அந்த இளைஞர் சாரம் சேட்டுடன் கொஞ்சம் அழுக்காகவே போயிருந்தார்)
அதற்கு அந்த இளைஞன் நாங்கள் படிக்காதவர்கள்,தோட்டக்காரங்கள் என பதிலளித்தார் .பின்னர் பற்குணம் தெளிவாகவே விளக்கினார்.
படிக்காதவன்,தோட்டக்காரன் என்றால் அழுக்காக உடை அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.நீ எனது ஊரவன்.உன்னை நான் அங்கே வைத்து மரியாதை செய்யவேண்டும்.எந்த வேலை செய்கிறோம் என்பது பிரச்சினை அல்ல.இருக்கும் வசதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றார்.அந்த இளைஞர் பற்குணத்தை விளங்கிக் கொண்டார்.
அதன் பின் பற்குணம் உன்னால் நல்ல வேட்டி வாங்க முடியவில்லை என்றால் சொல் என்றார்.அதற்கு அவர் இல்லை நான் வாங்குகிறேன் என்றார்.
பற்குணம் கச்சேரிக்கு மட்டுமல்ல எங்கேயும் இப்படி போகாதே என கூறிவிட்டு திரும்பினார்.மறுநாள் அதே இளைஞர் புதிய வேட்டி சேட் அணிந்து பற்குணத்தை காண வந்தார்.அவரைக் கௌரவித்து அவரின் தேவைகளைப் பூர்த்தி செய்து அனுப்பி வைத்தார்.தப்பை உணர்ந்த அந்த இளைஞர் ஒருநாள் ஊருக்கு வந்தபோது இந்தகதையை சிலரிடம் கூறினார்
பொதுவாக ஏழைகளின் ஆடைகள் பற்றி பற்குணம் கவனம் எடுப்பதும் இல்லை.அருவருப்பதும் இல்லை.ஆனால் அவர்களும் இருக்கும் வசதிகளோடு சுத்தமாக இருக்க வேண்டும்.அதை விரும்பினார்.
(தொடரும்…)
(விஜய பாஸ்கரன்)