பற்குணம் A.F.C (பகுதி 71 )

பற்குணம் சில காலம் புத்தளத்தில் பணியாற்றினார் .ஜே.ஆர். அதிகாரத்துக்கு வந்தபின் இரண்டு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.ஒன்று காலி.இன்னொன்று ஆனைமடுவ.ஆனைமடுவ தேரத்தலின்போது புத்தளத்தில் பணியாற்றினார் .அங்கு பணியாற்றிய வேளையில் அங்குள்ள வாக்காளர் பெயர்களை ஆராய்ந்தபோது அவர்களின் மூன்று தலைமுறைக்கு முந்திய பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருந்தன.

அதன் பின்னர் பற்குணம் அது தொடர்பாக ஆராய்ந்தபோது அவர்களில் பலர் தமிழ்ப் பரம்பரையினர். யாழ்ப்பாணம்,தென்னிந்நிய தொடர்புகள் அறுந்து போனதால் அவரகள் சிங்களவர்களாக மாறிவிட்டார்கள். மேலும் பண்டாரநாயக்காவின் பாடசாலைகள் தேசியமயமாக்கல், தாய்மொழி கல்வி அறிமுகம் இந்த சட்டங்கள் காரணமாக கத்தோலிக்க மிசனறி வசம் இருந்த பாடசாலைகள் யாவும் சிங்கள மொழிமூல பாடசாலைகள் ஆக்கப்பட்டன. அன்று அவை சிலாபம் பிஷப் அவர்களின் கீழ் இருந்தன. அந்த பிஷப் ஒரு சிங்கள இனத்தவர். அவரின் செயற்பாட்டால் தமிழ் மாணவர்கள் சிங்களத்தில் படிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த புத்தளம் உருமாறி சிங்கள மயமானது.

பற்குணம் அங்கு வந்தபின்பே தமிழர்களின் அலுவல்கள் கச்சேரியில் இலகுவாக்கப்பட்டதாக அங்கு பணிபுரிந்தவர்கள் கூற கேட்டுள்ளேன். இனக்கலவரத்தின் பின்பாக பற்குணம் பணிபுரியும் இடங்களில் தனியாக இருந்ததால் அவர் எதிர்நோக்கிய பல பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் அறியும் வாய்ப்புகள் குறைந்தன. அவரும் அவை பற்றி யாருடனும் பகிர விரும்புவதில்லை. ஆயினும் அவர் சந்தித்த பல்வேறு சவாலான சம்பவங்கள் இன்னும் உள்ளன.

நேர்மை,கடமை,உண்மை ,கொள்கை என்பதை ஒரு நிர்வாக சேவை அதிகாரி கட்டிக் காப்பாற்றுவது அவ்வளவு எளிதான விசயம் அல்ல.

(தொடரும்…)
(விஜய பாஸ்கரன்)