பற்குணம் A.F.C (பகுதி 80 )

பற்குணம் யாழ்பாணத்தில் பொறுப்பேற்றபோது அரச நிர்வாகம் செயலிழந்து இருந்தது.ஆயுத குழுக்களின் தலையீடுகள் அதிகமாக இருந்தன.அரசாங்க வாகனங்களை ஆயுத குழுக்கள் பறித்து தமது தேவைகளுக்கு பாவித்தனர்.பொதுவாக எந்த அமைப்புக்கும் அரச நிர்வாகம்,அந்த அதிகாரிகளின் தேவைகள் என்பவற்றை புரிந்துகொள்ளவில்லை.அரச அதிபர் பஞ்சலிங்கம் கூட வாகனம் இன்றி அவஸ்தைப் பட்டார்.

எனவே அவருக்காவது ஒரு வாகனம் தேவை என்பதை உணர்ந்து சகல அமைப்புகளுடனும் தொடர்புகோள்ள முயன்றார்.ஆரம்பத்தில் இது மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது.ஆனாலும் ஒருவாறாக தொடர்புகளை ஏற்படுத்தி அவருக்கான வாகனத்தின் அவசியத்தை விளக்கினார்.ஆனால் பல அமைப்புகள் இருந்தபடியால் கொஞ்சம் கடினமாக இருந்தது.மேலும் பற்குணத்துக்கும் வாகனம் இருக்கவில்லை.அவருக்கும் அது சிரமமானதாகவே இருந்தது.

அதைவிட அவருடைய அலுவலக நிர்வாகமும் சீர்குலைந்தே இருந்தது.உணவுக்களஞ்சியங்கள் இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்தன.துறைமுகமும் அவ்வாறே ஆபத்தானதாக இருந்தது.இதன் காரணமாக முன்பு இருந்தவர்கள் அங்கு செல்வதை தவிர்த்து இருந்தனர்.உணவுத் திணைக்களத்தால் நம்பியே கூட்டுறவு திணைக்களம் இருந்ததால் அதுவும் சிக்கலானதாக இருந்தது.

ஆனால் பற்குணம் இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அந்த களஞ்சியங்கள் ,துறைமுகம் என்பவற்றுக்கு தனியாகப் போனார்.நீண்ட காலம் களஞ்சியங்களில் இருந்த உணவுப்பொருட்கள் பழுதாகி இருந்தன.ஆனால் அவற்றை பார்வையிடாமல் முன்னைய அதிகாரிகள் இருப்பில் கணக்குப் போட்டு நிர்வாகத்தை நடத்தி இருந்தனர்.பற்குணம் அவற்றை எல்லாம் விட்டு உணவுகள் தேவை என மேலிடத்துக்கு கோரினார்.
ஆனாலும் அவர்கள் போதியளவு உணவுகளை அனுப்புவதில்லை.பற்குணம் வந்தபின்னர் உணவுதிணைக்கள நிர்வாகம் கூட்டுறவுத்துறை மறுபடியும் செயற்படதொடங்கின.ஆயுத அமைப்புகளின் தலையீடுகள் இருந்தாலும் அவர்களை சமாளித்து தனது நிர்வாகத்தை இயக்கினார்.

உணவு,கூட்டுறவுத்துறை எப்போதுமே ஊழல்கள் நிறைந்தவையாக இருந்தது.இந்த ஊழல்பேர்வழிகள் ஆயுதமைப்புகளுடன் நட்பை பேணிவந்தார்கள்.அவர்களும் இந்த மாதிரியான திருடர்களையே நம்பி நிர்வாகங்களில் குறுக்கீடு செய்வார்கள்.ஆயுதகுழுக்களின் பெயராலும்,அவர்களோடு இணைந்தும் திருடுவார்கள்.அந்த ஆயுத குழுக்களை சேர்ந்த பலர் அவை பொதுமக்களுக்கு உரியவை என்பதை உணரந்ததில்லை.

இது பெரும் சவாலாக இருந்தபோதும் மக்கள் தேவை கருதி பற்குணம் பொறுமையாகவே செயற்பட்டார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)