பற்குணம் A.F.C (பகுதி 81 )

பற்குணம் யாழ்ப்பாணத்தில் வேலை செய்வது என்பது உயிரைப் பணயம் வைத்து செயலாற்றுவது போன்று இருந்தது.இராணுவம் முகாம்களில் முடக்கப்பட்டிருந்த காலம்.உணவுக் களஞ்சியங்கள் துறைமுகம் என்பன இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தன.

இங்கே செல்வதற்கு முன் இராணுவத்தின் அனுமதி ,உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு என்பன அவசியம்.அதைவிட ஆயுத அமைப்புகளின் காவலரண்கள்,இராணுவத்தின் காவலரண்கள் பலவற்றை தாண்டியே செல்லவேண்டும்.இவர்களிடையே மோதல்களும் திடீரென வெடிக்கலாம்.எதிர்பாராமல் யாரும் துப்பாக்கிகளை பாவிக்கும் சந்தர்பங்கள் நிறையவே இருந்தன.இதைவிட இங்கே எடுத்துச்செல்லும் வாகனங்கள்,அதன் பணியாளர்கள் இவர்களின் பாதுகாப்பையும் பற்குணம் ஒருவரே உறுதிசெய்ய வேண்டியவராக இருந்தார்.

இவ்வளவு சிரமங்கள் இருந்தபோதும் கொஞ்சமும் பயம்,சலனமின்றி தனது பணிகளைத் தொடர்ந்தார்.தன்னைவிட தன்னை நம்பி வருபவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் அக்கறை செலுத்தினார்.இதன் காரணமாக இவரின் கீழ் பணியாற்றிய சகல ஊழியர்களும் மரியாதை செலுத்த தொடங்கினர்.ஆரம்பத்தில் இராணுவப் பகுதிகளுக்கும் செல்லத் தயங்கியவர்கள் பற்குணத்தின் உறுதிமொழியை நம்பி தனியாகவும் செல்லத் துணிந்தனர்.

இவற்றுக்கு காரணம் பற்குணமே.இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு அவர் பணியின் அவசியம் யாழ்ப்பாண சூழ்நிலைகள் என்பவற்றை தெளிவாக விளக்கி ஒரு தெளிவான புரிந்துணர்வை ஏற்படுத்தியிருந்தார்.இதனால் உணவு மற்றும் கூட்டுறவு திணைக்களங்கள் ஓரளவு இலகுவாக செயற்பட்டன.ஆனால் இராணுவத்தை சமாளித்தபோதும் ஆயுத குழுக்களை சமாளிப்பதென்பது பெரும்சவாலாக இருந்தது.அதற்கு அவர்களுடன் ஒத்துழைக்கும் அரச ஊழியர்களின் பங்கும் கணிசமானது.

1985-86 களில் சகல அமைப்புகளும் இயங்கின.ஒவ்வொரு அமைப்பும் பலவிதமான அழுத்தங்களைப் பிரயோகித்தனர்.இதவே மிகவும் சிக்கலானதாக இருந்தது.அவர்களில் ஒழுங்கமைக்கப்பட்ட பிரதிநிதிகளும் இருக்கவில்லை.

இக் காலத்தில் பற்குணம் விபரீதமான அனுபவத்துக்கு உள்ளானார்.பற்குணத்தின் மனைவிக்கு ஒரு காணி இருந்தது.அந்த காணி அருகே ஒரு சிறிய கோவில் இருந்தது.அந்தக் கோவிலைச் சேர்ந்தவர்கள் ஒரு கிணறு ஒன்றை கட்ட திட்டம் போட்டனர்.கோவிலில் போதிய நிலம் இருந்தும் பற்குணத்தின் மனைவியின் காணியில் ஒரு நான்கு முழம் அளவில் உள்ளே ஆக்கிரமித்து கிணற்றை வெட்டினார்கள்.

இந்த தகவலை யாரோ வந்து பற்குணத்துக்கு சொன்னார்கள்.அப்போது பற்குணம் கத்தியுடன் நின்றார்.அதைக் கேட்ட பற்குணம் கொஞ்சம் கோபமாகவே கத்தியை போட மறந்து அந்த இடத்துக்குப் போனார்.அங்கே யாரும் இல்லை. எனவே அதை வெட்ட ஏற்பாடு செய்தவர் வீடு அருகில் இருந்ததால் அவரை வெளியே அழைத்தார். யாரும் வரவில்லை .இவரின் பின்னால் அவரது பெறாமகன் இராசேஸ்வரன் என்பவரும் போனார்.யாரும் இல்லாததால் இருவரும் திரும்பி வந்துவிட்டனர்.

அவர்களோ உள்ளூர் புலிப் பொறுப்பாளர் சிவநேசன் என்பவருக்கு தங்களை வெட்ட வந்ததாக தகவல் கொடுத்து புலிகள் மூலம் பற்குணத்தை கைது செய்ய வைத்தனர்.இந்த சிவநேசன் என்பவன் ஏற்கனவே ஒரு விசயத்தில் பற்குணத்தோடு முரண்பட்டவன்.எனவே இதுதான் சந்தர்ப்பம் என பாவித்தான்.

பற்குணம் புலிகளால் கைது செய்யப்பட்டது தொடர்பாக உறவினர்கள் அல்லது சண்டிலிப்பாய் வாழ் ்தாழத்தப்பட்டசமூகம் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.இதை அறிந்த உயர் சமூகத்தவர் என அறியப்பட்ட கந்தசாமி மாஸ்ரர் என்பவர் தனது பல நண்பர்களையும் இணத்து இந்த தகவலை சுன்னாக புலி பொறுப்பாளர் சுதன் என்பவருக்கு விளக்கப்படுத்தினார்.பற்குணத்தின் குணங்களையும் அவரின் தேவைகளையும் தெளிவாக வலியுறுத்தி பற்குணத்தை உடனே விடுவிக்க உதவினார்கள்.இதன் பின் சிவநேசன் என்பவன் சுதனால் எச்சரிக்கப்பட்டான்.

அதைவிட புலிகளின் நிதிப்பொறுப்பாளர் செல்வரத்தினம்,பரமு மூர்த்தி,காண்டீபன் என்பவர்களும் பற்குணத்தோடு உள்ளூர் புலிகள் தலையிடுவதை நிறுத்தினார்கள்.செல்வரத்தினம் பற்குணத்தின் கீழ் பணிபுரிபவர்.மூர்த்தி சமூக ரீதியாக பற்குணத்தை அறிந்தவர்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)