பற்குணம் A.F.C (பகுதி 84 )

பற்குணத்தை கீழ்மட்ட இராணுவத்தினர் குறி வைத்திருப்பது தெரிந்திருந்தும் அது பற்றி கவலைப் படாதவராக இராணுவ முகாம்களூடாக தன் நிர்வாகத்திலுள்ள உணவுக் களஞ்சியங்களுக்கு போய் வந்தார்.


பற்குணம் போகும்போது உணவு மற்றும் கூட்டுறவு திணைக்கள ஊழியர்களும் தமது பாதுகாப்பு கருதி பற்குணத்துடன் பின்னால் போவார்கள்.சில தனியார் நிறுவன இறக்குமதி ஊழியர்கள்,தொழிலாளர்களும் பற்குணத்தை நம்பியே போய் வருவார்கள்.அவரகளிடம்கூட சில இராணுவத்தினர் பற்குணம் எங்கே என கேட்பார்கள்.ஆனாலும் பற்குணம் கவலைப்படவில்லை.ஆனால் இந்த விபரத்தை மேலதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.அவரகள் அதுபற்றி உண்மையில் மிக அக்கறை எடுத்தனர்.எதுவும் நடக்காது என உத்தரவாதம் கொடுத்தனர்.

இப்படி இருக்கும்போது ஒருநாள் சிலருடன் பற்குணம் இராணுவ முகாம்களுக்கு போனார்.இவருடன் மிக நெருக்கமானவர்களும் சென்றனர்.பற்குணம் எப்போது சென்றாலும் மற்றவர்களை முன்னே செல்ல அனுமதிப்பதில்லை .அவர்களின் பாதுகாப்பு தன் பொறுப்பு என்பதே அவர் கருத்தாக கடமையாக நினைப்பவர்.எனவே அவரே முன் செல்ல அங்கே காவலுக்கு நின்ற இராணுவ வீரன் ஒருவன் பற்குணத்தை கடுமையாக தாக்கத் தொடங்கினான்.பின்னால் வந்தவர்கள் பயந்துவிட்டனர்.அதிஷ்டவசமாக ஒரு இராணுவ உயர் அதிகாரி கண்டு ஓடிவந்து பற்குணத்தைக் காப்பாற்றி அந்த இராணுவ வீரனை கடுமையாக எச்சரித்தார் .பற்குணமும் அவனை விடும்படி கேட்டுக்கொண்டார் .

ஆனால் கூட வந்தவர்களிடம் இந்த தகவலை வெளியே எக் காரணம் கொண்டும் சொல்லவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் .அப்போது அவர்கள் காரணத்தைக் கேட்க இதை செய்தியாக்கினால் நானோ வேறு யாருமோ இனி இங்கே வரமுடியாது.மக்களுக்கான உணவு விநியோக சேவைகள் பாதிக்கப்படும்.எனவே தயவுசெய்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.பற்குணம் தாக்கப்படும்போது அருகில் நின்ற ஒருவர் இன்னமும் கனடாவில் வாழ்கிறார்.

அந்த சம்பவத்தின் பின் இராணுவ அதிகாரிகள் பற்குணத்தின் உயிர் தொடர்பாக அச்சம் கொண்டனர்.அவர் வரும்போது மிக கவனம் எடுத்தனர்.சாதாரண நிலையில் உள்ள இராணுவ வீரன் எதுவும் செய்யலாம். எனவே அவர் அங்கிருந்து திரும்பி வரும் ்பாதையையும் அடிக்கடி மாற்றினர்.அதைவிட திரும்பி வரும்போது இராணுவத்தினர் சாதாரணமாகவே அணியும் நீல நிற ஆடைகளையும் வழங்கினார்கள்.

இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சும் உணவு திணைக்களமும் விசாரணைக்காக பற்குணத்தை கொழும்புக்கு அழைத்தனர்.அரச அதிபர் பஞ்சலிங்கம் கொடுத்த தகவல் அடிப்படையில் பற்குணத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கு எதிரான அறிக்கைக்கு விளக்கம் கோரினர்.

பற்குணம் எந்த நிலைவந்தாலும் மற்றவர்களை சிக்கலுக்கு உள்ளாக்க விரும்புவதில்லை .ஆனால் இப்போது நிலைமை சிக்கலாக மாற்றப்பட்டுள்ளதால் பஞ்சலிங்கம் அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை தெளிவாக விளக்கினார்.தனக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் ஆபத்துக்களையும் தெளிவாக்கினார். இவரின் விளக்கத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.ஆனாலும் அரச அதிபர் பஞ்சலிங்கத்துக்குரிய சிக்கலையும் கூறினார்.

பற்குணத்துக்கு பக்கபலமாக இராணுவ உயர் அதிகாரிகள் நின்றனர்.அதுவே அந்த நெருக்கடியான காலகட்டத்தில் அவரின் துணிவான சேவைக்கு துணை நின்றது.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)