பற்குணம் A.F.C (பகுதி 99 )

யாழ் குடாநாடு வழமைக்குத் திரும்பியது.புலிகள் குடாநாட்டை விட்டு வன்னிக்கு தப்பி ஓடிவிட்டனர்.கிழக்கைச் சேர்ந்த பல புலிகள் எங்கும் போக முடியாமல் தடுமாறி ஒழித்து வாழ்ந்தனர்.இந்திய இராணுவ நடமாட்டம் அதிகரித்தது.பயப்படும்படியாக எதுவும் தெரியவில்லை.
அரச அலுவலகங்கள் வழமைபோல இயங்கத் தொடங்கின.சில நாட்களின் பின் யாழ்ப்பாண நகர தளபதி ஒரு அதிகாரிகள் மகாநாடு ஒன்றை ஒழுங்குபடுத்தினார்.இதற்கு பற்குணம் சென்றவேளை யாழ் நகர மையப்பகுதியில் புலிகள் கைக்குண்டு ஒன்றை வீசி தப்பி ஓடிவிட்டனர்.

இந்திய இராணுவம் அங்கே வந்தவர்களை தாக்கியது.எல்லோரையும் வழிமறித்து உட்கார வைத்தது.அவசரமாக பற்குணம் போக வேண்டி இருந்ததால் இந்திய ராணுவ அதிகாரிகளுடன் பேச முயன்றார்.அவரகளுக்கு ஆங்கிலம் புரியவில்லை.மேலும் மிரட்டும் தொனியில் அவரை நகர விடவில்லை.
சில மணி நேரங்களின் பின் இராணுவம் செல்ல அனுமதி கொடுத்தது.பற்குணம் தாமதமாகவே போனார்.இதை தளபதி கல்கத் ஏன் என கேட்க இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளை கோபமாகவே சுட்டிக் காட்டினார்.அவரகளின் பாசை பிரச்சினைகளையும் தெளிவாக எடுத்துரைத்தார்.அதன்பின் அந்த போக்குவரத்து ஒழங்குகளை அதிகாரிகளுக்கு செய்துகொடுத்தார்.
அதன் பின் சிலநாட்களின் பின்பாக காலையில் எமது பகுதியில் இந்திய இராணுவத்தின் வரவுக்காக புலிகள் காத்திருந்தனர்.அவர்கள் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.சிலர் எடுத்துரைக்க துப்பாக்கிகளை நீட்டினர்.இதனால் நாங்கள் மீண்டும் இடம்பெயர்ந்து ஓடினோம்.
எமது வீடு இருந்த பகுதியில், புலிகள் நடாத்திய தாக்குதல்களில் சில இந்திய இராணுவம் கொல்லப்பட்டனர்.இதன் விளைவாக ஆத்திரமுற்ற இந்திய இராணுவம் சிலரது வீடுகளை அவர்கள் கண்முன்பாகவே குண்டு வைத்து தகர்த்தது.ஐந்து குடும்பத்தின் வீடுகள் தகர்க்கப்பட்டன.இது ஒரு மோசமான வெறியாட்டம் எனலாம்.சிலரது குடிசைகளும் கொழுத்தப்பட்டன.
அவர்கள் அனைவரும் பற்குணத்திடம் வந்து முறையிட்டனர்.அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலமாக கொஞ்ச உதவிகளை பெற்றுக்கொடுத்தார்.அவை தற்காலிக உதவிகளே.இந்த சம்பவத்தை ஆனந்த் என்ற அந்தப் பகுதி அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.இனியாவது இப்படியான அசம்பாவிதங்களை தடுக்கும்படி கூறினார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)