பழம்பெரும் கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு கலையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கர்னாடக இசை உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த எம்.பாலமுரளி கிருஷ்ணா, 1930-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்தவர். தனது 6-வது வயதிலேயே இசைப் பயணத்தை தொடங்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளிலும் 25,000-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர். ‘திருவிளையாடல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒருநாள் போதுமா’, ‘கவிக்குயில்’ படத்தில் இடம்பெற்ற ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாத காவியங்களாக நிலைத்து நிற்கின்றன. மத்திய அரசின் பத்மவிபூஷண் விருது, 2 தேசிய விருதுகள், சென்னை மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருது, பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது, கலாசிகாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருது என ஏராளமான விருதுகளைப் பெற்றவர்.
சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள இல்லத்தில் வசித்துவந்த பாலமுரளி கிருஷ்ணா, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு அன்னபூரணி என்ற மனைவி, 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு கலையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தியாகராஜரின் சிஷ்ய பரம்பரை
தியாகராஜரின் நேரடி சிஷ்ய பரம்பரையில் வருபவர் பாலமுரளி கிருஷ்ணா. தியாகராஜரின் நேரடி சீடர் மானம்புச்சாவடி வேங்கடசுப்பையர். அவரிடம் இருந்து தட்சிணாமூர்த்தி சாஸ்திரி, பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலு என சிஷ்ய பரம்பரை தொடர்ந்தது. பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலுவிடம்தான் பாலமுரளி கிருஷ்ணா முறையாக கர்னாடக இசை கற்றார். அதாவது, சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 4-வது சிஷ்ய பரம்பரையில் வந்தவர் எனும் புகழுக்கு உரியவர்.
மொழியைக் கடந்தது இசை என்பது போலவே, பாலமுரளி கிருஷ்ணாவின் குரலும் மொழியைக் கடந்தது. தென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமை மிக்கவர். இசை அமைப்பாளர், சாகித்யகர்த்தா, நடிகர் என கலையின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர். பாலமுரளி கிருஷ்ணா வாத்திய விற்பன்னர். வயலின், வயோலா, புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் என பல வாத்தியங்களை இசைக்கும் திறன் கொண்டவர்.
ராக தேவன்
கர்னாடக இசை உலகில் பலரும் பழைய சம்பிரதாயங்களை தொடர்ந்து கொண்டிருந்த நாட்களிலேயே, ஸித்தி, சுமுகம், ஸர்வஸ்ரீ, ஓம்காரி, கணபதி என்ற பெயர்களில் புதிய ராகங்களை அளித்த கொடையாளர். அதிலும் இவர் உண்டாக்கிய மஹதி ராகம் மிகவும் விசேஷமானது. 7 ஸ்வரஸ்தானங்களுடன் கூடிய ராகங்களை சம்பூர்ண ராகங்கள் என்பார்கள். 5 ஸ்வரஸ்தானங்களுடன் கூடிய ராகங்களும் நிறைய இருந்தன. 4 ஸ்வரஸ்தானங்களுடன் ஒரு ராகத்தை உண்டாக்கி அதற்கு (நாரதரின் கையில் இருக்கும் வீணையின் பெயர்) ‘மஹதி’ என்னும் பெயரைச் சூட்டினார் பாலமுரளி கிருஷ்ணா.
‘தங்க ரதம் வந்தது வீதியிலே’, ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’, ‘மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே’ போன்ற பாடல்களால் பாமரர்களையும் மகிழ்வித்த பாலமுரளி கிருஷ்ணாவின் நினைவுகளில் நீந்திக் கரையேற ஒருநாள் போதுமா?!