பழைய கதை பேசி பல்லக்கில் ஏறுவோர் தான் ஈழத்தின் விதியா?

மீண்டும் ஒரு பத்தியாளர் பத்தவைத்த திரியில் நானும் என் பங்கிற்கு வெடிகொளுத்தும் பதிவு இது. ஒருகாலத்தில் ‘’பழம் பழுத்தால் வௌவால் வரும்’’ என்றவரும் ‘’புலிவரும் முன்னே தமிழ் ஈழம் வரும் பின்னே’’ என்றவரும் மேடைகளில் முழங்கிய வேளையில் கூடவே கொக்கரித்தவர்களில் மாவையும் ஒருவர். பாசறைகள் தயாராகிவிட்டன பயிற்சிகள் தொடங்கிவிட்டன என உணர்ச்சி ஊட்டியவர் இவர்.

அன்று சிறை மீண்ட செம்மல்கள் தான் எங்கள் கதாநாயகர்கள். வசந்தமாளிகை சிவாஜி அடிமைப்பெண் எம் ஜி ஆர் கூட பின்தள்ளப்படும் அளவுக்கு இவர்களுக்கு ரசிகர்கள் அதிகம். படம் பார்க்க வெலிங்கடன் வின்சர், ராஜா, ராணி தியேட்டர் வாசலில் முதல் காட்சிக்கு என காவல் நின்றதை விட இந்த கதா நாயகர் நெற்றியில் இரத்த திலகமிட மேடைக்கு முன்பாக வரிசையில் காத்து நின்றவர்கள் அதிகம்.

ஒருவர் பின் ஒருவராக மேடை ஏறி பிளேடால் விரல் கீறி தம் நாயகர் நெற்றியில் வெற்றி திலகமிட்டு ‘’வாழ்க தமிழ் மலர்க தமிழ் ஈழம்’’ என முழக்கமிடுவர். அந்த நாயகர்களின் முகத்தை பற்றையாக வளர்ந்த தாடியும் தலையை கத்திரிகோல் காணாத முடியும் இட்டு நிரப்பி அவர்கள் போராடுவதை தவிர தலை முடி திருத்தவோ முக சவரம் செய்யவோ நேரமற்ற விடுதலை போராளிகளாக காட்டும்.

கொரில்லா போராட்ட தந்தையும் கியூபா விடுதலை புரட்சியாளனுமான சேகுவேரா போல காட்சி தருவது அவர்களது நோக்கம். என்ன வாயில் மட்டும் அந்த மணிலா சுருட்டு இருக்காது. யாழில் அப்படி காட்சி தந்தால் அது கலாச்சார பண்பாட்டு சீர்கேடு என்பதால் அதை மட்டும் கவனமாக தவிர்த்து காட்சி தருவர். அப்படியும் காசி மட்டும் வெண் நரைக்கு அவர் தம்பி கொண்டு மை பூசுவார்.

இன்று அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தாலும் முன்வழுக்கை விழுந்த அவரது தலையில் மிஞ்சி இருக்கும் கேசம் மட்டும் கரு கரு என்றுதான் இருக்கிறது. அன்று இரத்த திலகம் வாங்கி இளையவரை விடுதலை போருக்கு தூண்டி சிறை சென்று மீண்டபின் பழம் பழுத்தால் வௌவால் வரும் என்றவர்  பாதுகாப்பு வேண்டி ஜெர்மனியில் தஞ்சம் புகுந்தார். மற்றவர் தமிழ் நாட்டில் பாதுகாப்பாக இருந்தனர்.

தூண்டி விடப்பட்ட இளையவர் இரத்த திலகம் இடும் நிகழ்வு பற்றி தங்க மகேந்திரன் நகைச்சுவையாக என்னிடம் கூறியது நினைவில் வருகிறது. விரலை கீறி பொட்டு வைத்தால் வலிக்காதா என கேட்டேன். அதற்கு கீறினால் தானே வலிக்கும் என்றான். அப்படி என்றால் எப்படி இரத்த பொட்டு வைப்பது என கேட்க முன்னுக்கு போனவன் இரத்த பொட்டு வைத்த இடத்தில் அடுத்தவனும் தன் விரலை வைப்பான் என்றான்.

வீர வசனம் பேசியவர் நெற்றியில் பொட்டு வைப்பவர் எல்லாம் இரத்த பொட்டு வைப்பதாக நினைக்க, வெறும் விரல் வைத்து செல்லும் சூரர்களும் உண்டு என்றான்.. போராட்டம் உக்கிரம் அடைந்த வேளை இந்த வீர மேடை பேச்சு வெற்று வேட்டுக்கள் எதுவுமே களத்தில் இல்லை. இடையில் எமக்குள்  நடந்த துன்பியல் நிகழ்வால் இந்தியா நேரடி தலையீடாக அமைதிப்படையுடன் தீர்வு என்ற பொதியுடன் மாகாணசபை முறைமையை தர வந்தது.

ஆரம்பத்தில் அமிர்தலிங்கம் தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டாலும் கூட இருந்தவர் சம்மதிக்காத காரணத்தால் பின்பு அவர் பின்வாங்கினார். அன்று சம்மதிக்காதவரில் சம்மந்தரும் மாவையும் உள்ளடக்கம். இன்று வடக்கு மாகாண சபைக்கு முதல்வராக வர விரும்பிய மாவையை தடுத்ததும் சம்மந்தரே. இது  காலத்தின் தேவை கருதி அவரவர் விருப்புகளும் பங்களிப்புகளும் மாறுகின்ற பச்சோந்தி அரசியல்.

கூட்டமைப்பு என்று வந்த பின்பும் தனித்து சுழியோடி ஆள்பிடிக்கும் அரசியலை தமிழ் அரசு கட்சி செய்வது பகிரங்கமாக தெரிந்த மறுக்க முடியாத உண்மை. இன்று மாகாண சபை வரை ஆள்பிடி வேலை தொடர்கிறது. கூட்டு கட்சிகள் குத்தி முறிந்தாலும் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட மாட்டாது. என தீர்க்கமான முடிவில் இருக்கும் மாவை தமிழ் அரசு கட்சிக்கு ஊட்டம் சேர்க்கவே நீண்ட பயணங்கள்.

இதன் முக்கிய நோக்கம் நிதிமூலம் தேடல் அன்றி வாக்களித்த மக்கள் நலன் வேண்டியதல்ல என்பது அந்த பத்தி எழுத்தாளரின் வாதம். அது உண்மை தான் என்றாலும் அதற்குள் ஒளிந்திருக்கும் ஒரு சூத்திரம் பற்றிய அலசலே என்பதிவு. இன்று புலம்பெயர்ந்து இருப்பவர்களில் கணிசமானவர்கள் அன்று தாயகத்தில் எதோ ஒரு கட்சியின் அல்லது விடுதலை அமைப்பின் ஆதரவாளர் அல்லது உறுப்பினர்.

தஞ்ச விண்ணப்பத்தின் முக்கிய விடயமாக அதுபற்றிய தகவல்களை கொடுத்தே அவர்கள் தமது  இருப்பை இருப்பை தக்கவைத்திருப்பர். ஆக தமது இன்றைய வாழ்வின் நிலைக்கு தமது அன்றைய பங்களிப்பு உதவியது என்பதால் இன்று மண்ணில் தாம் இல்லாத போதும் தாம் சார்ந்த கட்சி அல்லது அமைப்பு நிலைத்திருக்க தம்மால் இயன்றதை செய்யவேண்டும் என்ற விருப்பு அவர்களுக்கு உண்டு.

இங்குதான் ”பழம் பழுத்தால் வௌவால் வரும் என்று” அன்று சொன்ன வார்த்தை சாலப்பொருந்துகிறது. தாம் வாழும் நாடுகளில் தம்மை வளப்படுத்திகொண்டு பணப் பழம் பழுத்த மரங்களாக இருக்கும் இவர்களை நோக்கி தேர்தல்கள் நெருங்கும் போதெல்லாம் வௌவால்கள் வருவது வாடிக்கையாகி விட்டது. ரஜனியின் காலா படம் வருமுன் தாம் சென்று வரவேண்டும் என்ற விவேகம் மாவைக்கு.

புலம் பெயர் ஈழத்தவரால் பயன் அடைபவர் வரிசையில் இடம்பிடிப்பது நால்வர் செயல். ஒன்று தமிழ் திரைப்பட உலகம். இரண்டு சின்னத்திரை நிறுவனங்கள், மூன்று ஈழம் பற்றி பேசும் தென் இந்திய அரசியல் வாதிகள் நான்கு வருடாவருடம் தீர்வை நெருங்கிவிட்டோம் என வாய் சிலம்பம் ஆடி கிடைத்த வசதிகளை பெற்று இறுதியில் இந்த அரசும் ஏமாற்றிவிட்டது என கூறி வரும் எம்மவர்.

அடலேறுகளின் உணர்ச்சிகர பேச்சை அத்திவாரமாக கொண்டு கட்டப்பட்ட கட்சி தமிழ் அரசு கட்சி. அதனால் வெறும் வாய்ப்பேச்சு தானே, எமக்கு சேதாரம் ஏதும் இல்லை என அதனோடு இணைய விரும்புதல் இயல்பு. அமைப்புகளை பொறுத்தவரை ஆயுதங்களின் ஆட்சி அவர்களை பல அத்துமீறல் செய்ய தூண்டியதால் அவர்களின் பாதையில் பயணிக்க புதியவர் பெரிதாக விரும்பமாட்டார்.

ஒருகாலத்தில் அப்புக்காத்துகள் கட்டியாண்ட அரசியலை ஆயுத கலாச்சாரம் புரட்டிப்போட்டது. பின் அது பேரழிவுக்கு உட்பட மீண்டும் கனவான் அரசியல் களம் இறங்கியது. அதனால் தான் தாடி வளர்த்து முடி திருத்த நேரமின்றி போராடி சிறை சென்று பின் தமிழ் நாட்டில் பாதுகாப்பாக இருந்து மீண்ட மாவை சேனாதிராசா இருக்க, போராட்ட பக்கமே பார்க்காத விக்னேஸ்வரன் வடக்கு முதல்வர் ஆனார்.

சரி பிழைகளுக்கு அப்பால் இறுதிவரை தன் முடிவில் மாற்றம் இன்றி போராடிய தங்கள் தலைவனின் பெயர் சொல்லி வந்து களம் இறங்கியவர்களுக்கு வெற்றி மாலை சூடாத மக்கள், பிரபாகரன் மாவீரன் என வாய் சிலம்பம் ஆடிய விக்னேஸ்வரனை கொடி குடை ஆலவட்டம் கொண்டு முடி சூடி கையில் வேல் கொடுத்து மாகாணசபையை நாசமாக்க அனுப்பிவைத்த மக்களின் தலைவிதியை என்னவென்பேன்.

பகட்டுக்கு பலி போய்விட்டு ரணிலை புரட்டி எடுப்பதில் பயனில்லை. சிறிசேனா மீது சீறிப் பயனில்லை. சந்திரிக்கா கொண்டுவந்த தீர்வை கொளுத்தியது ரணில் என்றால் அதை பார்த்து பேடிகளாய் நின்றது யார் என்ற கேள்விக்கு பதில் தேடுவார் எம்மில் எவருமில்லை. ஒருவர் வருகிறார் என்றால் அவரின் ஆரம்பகாலம் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. இடையில் அவர் பதுங்கியது பற்றிய பதிவு எதுவும் இல்லை.

அரசியல்வாதியாக தன்னை அடையாளம் காட்டுபவர் பல சித்து விளையாட்டுகள் செய்வது யதார்த்தம். ஆனால் தன்னை போராளியாக அடையாளம் காட்டிவிட்டு அரசியல் சித்து விளையாட்டு செய்வது சின்னத்தனம். அன்றைய போராட்ட தலைமைகளில் இன்றுவரை நிலைத்து நிற்பது மக்களின் நலன் சார்ந்தா அல்லது போக்கிடம் இல்லாதவர்க்கு அரசியல் லாபகரமான தொழில் என்பதாலா?

(ராம்)