(மொஹமட் பாதுஷா)
நமது நாட்டில் நம்மைச் சுற்றி என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை ஒவ்வொன்றாகச் சொல்ல வேண்டியதில்லை. இத்தேசத்தில் வாழ்கின்ற சிங்கள இனத்தவரில் ஒவ்வொருவரும், தமிழ் இனத்தவரில் ஒவ்வொருவரும், முஸ்லிம் இனத்தவரில் ஒவ்வொருவரும் நமது தேசத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதை, ஒவ்வொரு வினாடியும் உணர்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள்.
சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களின் மத அடையாளங்கள் மீதும், அவர்களுக்குரித்தான சொத்துகள் மீதும் மேற்கொள்ளப்படுகின்ற இனவெறுப்பு நடவடிக்கைகள், கடந்த இரு வாரங்களாக அதிகரித்துக் காணப்படுகின்ற ஒரு சூழலில், நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கின்ற அரசியலும் இராஜதந்திரமும் வெளிநாட்டுச் சக்திகளும் நமது பார்வைக்கு அப்பாற்பட்டவை. என்றாலும், சூரிய வெளிச்சத்தில் திரைக்குப் பின்னால் இருப்பது தெரிவது போல, ஓரளவுக்கு அதனது உருவம் நமக்குத் தெரிகின்றது.
ஆனாலும், பெரும்பாலான சிங்கள மக்கள், செயற்பாட்டாளர்கள், கணிசமான சிங்கள அரசியல்வாதிகள் நியாயத்தின் பக்கம் நிற்பதாலும் தமிழ் மக்களும் முஸ்லிம்களும் பொறுமை காத்துக் கொண்டிருப்பதாலும் நாம் இன்னும் ஓர் இனமுறுகலைச் சந்திக்காது இருக்கின்றோம்.
இது அதிர்ஷ்டவசமானது. இந்தப் பொறுமையையும் அமைதியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.
இலங்கையில் கடும்போக்குச் செயற்பாடுகளுக்குப் பின்னால் இருந்து செயற்படும் சக்திகள் ஒருபுறமிருக்க, இப்போது இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ‘எரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம்’ என்ற நினைப்பில் தம்முடைய காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள, வேறு பல தரப்பினரும் பிரயாசைப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இனங்களுக்கு இடையில் நல்லுறவு இருப்பதை, விரும்பாத ஒரு குழுவினரும் அவர்களுக்குப் பின்னால் சில நூற்றுக்கணக்கானோரும் சேர்ந்து மேற்கொள்கின்ற இந்த அத்துமீறல்களை, வேறு விதமாகப் பயன்படுத்துவதற்கு இன்னும் ஒரு சில பக்குவப்படாத சக்திகள் நினைக்கின்றன.
இலங்கையில் உள்ள 15 மில்லியன் சிங்கள மக்களும் ஒன்று சேர்ந்து, இரண்டு மில்லியன் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள் என்பது போன்ற மாயையை உருவாக்கி, சிறுபான்மை முஸ்லிம் மக்களைத் தூண்டிவிடுவதற்கு யாரேனும் முயற்சி செய்வார்களாயின் அம்முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்.
இலங்கையில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னரான கடும்போக்குச் செயற்பாடுகள், இன்னும் வெற்றியடையாமல் இருப்பதற்குக் காரணம், முஸ்லிம் மக்கள் கடைப்பிடித்து வரும் பொறுமை என்பதை மறந்து விடக் கூடாது. எனவே, அந்த பொறுமையைச் சோதிக்கும் காரியங்கள்தான் இப்போது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்ற சம்பவங்கள், கடந்த சில நாட்களாக, நாளாந்த நிகழ்வுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. இது முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான ஒரு விசனத்தையும் தமிழ் மக்கள் மனங்களில் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இதைச் செய்பவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டிய தேவையும் இனமேலாதிக்க போக்குகளைத் தடுக்க வேண்டிய அவசியமும் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி எல்லா இனமக்களுக்கும் இருக்கின்றது.
அதிலும் விசேடமாக அரசாங்கம், அதிகாரத் தரப்பினர், நல்லிணக்கத்துக்கு விரோதமான சக்திகளுக்கு முஸ்லிம்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
ஆனால், அதற்கான வழிமுறைகள் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.
ஒரு நாட்டில், சிறுபான்மையினராக வாழும் மக்கள், மிகக் கவனமாகத் தம்முடைய செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறுகின்ற சம்பவங்கள் தொடர்பிலும் அதற்குப் பின்னாலிருக்கின்ற மறைகரங்கள் பற்றியும் முதலில் ஒவ்வொரு முஸ்லிம் அரசியல்வாதியும் பொதுமகனும் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
இச்செயற்பாடுகள் எதற்காக மேற்கொள்ளப்படுகின்றன என்ற பின்புலத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு பொது நிலைப்பாட்டை எல்லா முஸ்லிம்களும் எடுக்க வேண்டும்.
அதன்பின்னரே, ஜனநாயக ரீதியான முன்னெடுப்புகள் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. அது விரைவாக நடைபெறவும் வேண்டும். அதாவது, இப்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட வேண்டியது தெளிவும் சிந்தனா ரீதியான கிளர்ச்சியுமாகும். மாறாக, உணர்ச்சி ரீதியான கிளர்ச்சியல்ல.
இலங்கையில் சிறுபான்மை மக்களின் போராட்டங்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டன என்பதை நாமறிவோம். ஓர் இனவிடுதலைப் போராட்டம், கடைசியில் பயங்கரவாத முத்திரை குத்தப்படுமளவுக்கு நிலைமைகள் எல்லாம் கைமீறிப் போனது.
அதுபோல, உலகில் முஸ்லிம்கள் வாழும் நிலப்பரப்புகளில் மேற்குலகம் மேற்கொள்கின்ற ‘அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கை’யின் உண்மையான அர்த்தம் என்னவென்று தெரியாத அளவுக்கு நாம் முட்டாள்களுமல்லர்.
ஆகவேதான், ஒவ்வொரு அடியையும் முஸ்லிம்கள் மிகக் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். அதன் அர்த்தம், கண்மூடித்தனமான பொறுமையுடன் இருத்தல் என்பதல்ல; மாறாக, தெளிவோடும் திட்டமிடலுடனும் புத்திசாலித்தனமாகச் செயற்படல் ஆகும்.
இந்த நாட்டுக்கு எப்போதுமே விசுவாசமானவர்களாகவே முஸ்லிம் சமூகம் வரலாற்றுக் காலம் முதல் இருந்து வந்திருக்கின்றது. இரண்டாம் இராஜசிங்க மன்னனைக் காப்பாற்றியது முதல், மைத்திரிபால சிறிசேனவையும் ரணில் விக்கிரமசிங்கவையும் ஆட்சிபீடமேற்றியது வரை…. தேசவிரோத செயற்பாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபடவில்லை.
அதேநேரம், தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கும் முஸ்லிம்கள் எதிர்ப்பானவர்கள் அல்லர். நியாயமான விடங்களுக்கு மானசீக ஆதரவையும் பௌதீக அடிப்படையிலான பங்களிப்பையும் வழங்கியிருக்கின்றார்கள்.
இவற்றுக்கெல்லாம் காரணம், எல்லாச் சமூகங்களோடும் நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்ற அவர்களது சிந்தனையே ஆகும். ஆனால், யுத்தம் முடிவடைந்த பிறகு, இந்த நல்லிணக்க உறவைக் குலைத்து, அதில் குளிர்காய்வதற்கு சில தீய சக்திகள் முயற்சித்து வருகின்றன. இது விடயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.
பெரும் ஆயுத பலத்தோடு, தமது இனத்துக்காக போராடும் இனங்களே, மாற்றுத் தரப்பினரால் எவ்வாறு நசுக்கப்படுகின்றன என்பதை அறிந்து வைத்திருக்கின்ற முஸ்லிம்கள், மிகக் கவனமாகச் செயற்பட வேண்டும்.
இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கானோர் அதற்கு வெளியில் அங்குமிங்குமாக வசிக்கின்றனர்.
முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவாகவும் செறிவின்றியும் வாழ்கின்ற பிரதேசங்களிலேயே இப்போது அதிகமான இனவெறுப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், கிழக்கில் ஏதாவது பதில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம், தென்னிலங்கையில் சிங்கள மக்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்களை மேலும் சிக்கலுக்குள் தள்ளி விடக் கூடாது.
வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் போன்றவற்றை நடத்துவது ஒரு வகையில் நமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக அமையும் என்பது உண்மையே. முஸ்லிம்கள் தமது அதிருப்தியின், கவலையின் வெளிப்பாடாகக் கடையடைப்பை காண்பிக்க முடியும்.
ஆனால், இதில் இருக்கின்ற பிரச்சினை என்னவென்றால், இவ்வாறான சந்தர்ப்பத்தில் எங்காவது ஒரு சிறிய அசம்பாவிதம் இடம்பெற்றாலும் அது துரும்புபோல சின்னதாக இருந்தாலும், கடும்போக்காளர்களால் அவ்விவகாரம் ஒரு துரும்புச்சீட்டாக பயன்படுத்தப்படும் என்பதை மறந்து விடக் கூடாது.
இதைத்தான் நல்லிணக்க விரோத சக்திகள் எதிர்பார்க்கின்றன. அதாவது, முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு, அவர்கள் தரப்பில் இருந்து ஒரு பதில் நடவடிக்கை இடம்பெறுமாயின், அதைப் பன்மடங்காகப் பெரிதுபடுத்தி, அதனைக் ‘கட்டுப்படுத்துதல்’ என்ற தோரணையில் பல்வேறு அடக்குமுறைகளைப் பிரயோகிக்கவும் முறுகலைத் தோற்றவிக்கவும் இச்சக்திகள் திட்டமிட்டுள்ளதாகவும், இந்தச் சந்தர்ப்பத்தை வெளிச்சக்திகளும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, இதனை மனத்தில் கொண்டு, முஸ்லிம்கள் செயற்பட வேண்டும். கடையடைப்பு, ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக செய்யப்பட வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன.
குறிப்பாக, முஸ்லிம் அரசியல்வாதிகளின் இயலாமையை இவ்விடயத்திலும் காணலாம். முஸ்லிம் அரசியலின் பலவீனத்தை அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் பயன்படுத்துகின்றனர் என்பதே நிதர்சனம்.
எவ்வாறிருப்பினும், இப்போது சில அரசியல்வாதிகளுக்கு, ‘சுரணை’ உருவாகி வருவதையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால், அவர்கள் தங்களுடைய கடமையைச் செய்யாமல், மக்கள் மீது பாரத்தை போடுகின்ற விதத்தில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.
உண்மையில், ஆர்ப்பாட்டம், ஹர்த்தால் என்ற பெயரில் மக்களை வீதிக்கு இறக்கி விடுவதற்கு முன்னர், அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் தமது பொறுப்புகளை நிறைவேற்றி இருக்கின்றோமா என்பதையும், தமக்குள்ள அதிகாரத்தைப் பாவித்து காய்களை நகர்த்தியிருக்கின்றோமா என்பதையும் முஸ்லிம் கட்சித்தலைவர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயவிசாரணை செய்து கொள்ள வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இனவெறுப்பு பிரசாரத்துக்கு எதிராகக் கிளர்ந்து எழ வேண்டிய தேவை சாதாரண முஸ்லிம்களுக்கு இப்போதைக்கு இல்லை. அவர்கள் நிலைமைகளை நன்றாக, ஆழ அகலமாக விளங்கித் தெளிவுடன் இருக்க வேண்டும். தேவையானபோது செய்ய வேண்டியதைச் செய்யலாம்.
ஒருவேளை, பாரதூரம் தெரியாமல், மக்கள் ஏதாவது நடவடிக்கையை எடுப்பார்கள் என்றால், அது சிங்கள – முஸ்லிம் முறுகலாக மாறும் அபாயம் இல்லாமலில்லை. எனவே, இங்கு கிளர்ந்து எழவேண்டியவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளே.
மக்களுக்காகப் பேசுவதற்காகவும் போராடுவதற்காகவுமே அவர்களுக்கு மக்கள் வாக்களித்துத் தெரிவு செய்கின்றார்கள். எனவே, அவர்கள்தான் இவ்விடயத்தைக் கையாளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அந்தவகையில், நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கின்ற அதிகாரங்கள், சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பு நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நடவடிக்கை எடுத்தார்களா என்ற கேள்வி இவ்விடத்தில் முக்கியமானது.
முஸ்லிம்களின் பிரதான கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் உள்ளடங்கலாக எல்லாக் கட்சிகள் ஊடாகவும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் எம்.பிக்கள், சபையை புறக்கணித்தார்களா? சபை நடுவே அமர்ந்து அமைதியாகக் கோரிக்கை விடுத்தார்களா? சத்தியாக்கிரகம் இருந்தார்களா அல்லது யாராவது உண்ணாவிரதம் இருந்தார்களா? இல்லை!!
இப்படித் தமது கடமையைச் செய்யாமல் மக்களைத் தூண்டிவிடுகின்ற வேலையை அரசியல்வாதிகள் செய்ய முனைவது நல்லதல்ல. எனவே, இவ்வாறான அரசியலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்வாறே, ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகக் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கின்ற அமைப்புகளின் பணி, இந்தச் சமூகத்துக்கு அவசியமானது. என்றாலும், மக்களைக் களமிறக்க முன்னதாக, எதிர்விளைவுகளைப் பற்றிச் சிந்தித்து, அதற்கான தயார் நிலையில் முஸ்லிம் சமூகம் இருக்கின்றதா என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த அமைதியற்ற, நல்லிணக்கத்தைக் கேள்விக்குறியாக்கும் நிலைமைகள் தனியே முஸ்லிம்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிந்தாலும், அது நிஜத்தில் அவ்வாறில்லை.
இந்த இனவெறுப்புப் பிரசாரங்களும் நடவடிக்கைகளும் கடைசியில் சிங்கள பௌத்த, தமிழ் மக்களுக்கும் முழுமொத்த தேசத்துக்கும் விரோதமான பெறுபேறுகளையே தரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த அடிப்படையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் காத்திரமான நடவடிக்கைகயை எடுக்கின்ற சமகாலத்தில், சாதாரண முஸ்லிம் மக்கள், சிங்கள மக்களோடு நல்லிணக்கத்தையும் உறவையும் பலப்படுத்திக் கொண்டும், முஸ்லிம்களுக்குச் சார்பாகக் குரல்கொடுக்கும் நடுநிலைவாதிகளின் உதவியுடனும் மிகப் பக்குவமான முறையில் நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டும்.