திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையிலான ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ என்ற கொள்கைகள், தமிழ்த் தேசியத்தின் அடிநாதமாக மாறியிருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும், ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ என்று உச்சரித்தாலும், உச்சரிப்பைத்தாண்டி, ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ என்பதை, அவர்கள் அணுகும் முறையும் சுவீகரித்துக்கொள்ளும் விதமும் அதற்கு வழங்கும் முக்கியத்துவமும் கட்சிகளிடையே வேறுபாட்டை ஏற்படுத்தி இருக்கின்றன.
ஒவ்வொரு மதத்துக்கும், அதற்குரிய அடிப்படை வேதமுண்டு. ஆனால், தம்மை அந்த மதத்துக்கு உரியவர்களாக அடையாளப்படுத்திக்கொள்ளும் அனைவரும், அதன் வேதத்தை அணுகும் முறை வேறுபட்டது.
சிலர், வேத நூலைத் தொட்டு வணங்குவதுடன் நிறுத்திக்கொள்வர்; சிலர், வேத நூலிலுள்ள ஒரு சில வரிகளைப் படிப்பதுடன் நிறுத்திக்கொள்வர்; சிலர், வேதங்களை முழுமையாகப் பாராயணம் செய்வர்.
இதுபோலவே, இன்றைய தமிழ்த் தேசிய கட்சிகளின் ‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்’ தொடர்பிலான அணுகுமுறையும் ஆளுக்காள் வேறுபட்டிருக்கிறது.
தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்துமே, ‘தாயகம், தேசியம், சுயநிர்யணம்’ என்ற அடிப்படை மந்திரத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அந்த மந்திரம் பற்றி அவர்களது அணுகுமுறையும் புரிதலும் அதற்கு வழங்கும் முக்கியத்துவமும் வேறுபட்டன.
இதுவும், தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைவதில் உள்ள பெருஞ்சவால்மிகு தடையாக மாறியிருக்கிறது.
2015ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்னர், ‘தமிழ்மிரர்’ பத்திரிகையில் எழுதியிருந்த பத்தியொன்றில், ‘தமிழ் மக்கள் ஒரு தனித் தேசம் என்றும் அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உள்ளது என்றும் அவர்களுக்கெனத் தாயக பூமி உள்ளது என்றும் அங்கிகரிக்கப்படத்தக்கதான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே, தமது கொள்கை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாதிடுகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றுக்கே வழிசமைப்பதாகக் குற்றமும் சாட்டுகிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அவர்கள் சித்தாந்த ரீதியாக இதைப் பெரிதளவில் மறுப்பதில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, வேட்பாளர்களின் அறிக்கைகள், பேச்சுகள் பலதும் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம் என்பவனவற்றைத் தாங்கியே வருகிறது. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும் கூட்டமைப்பை விமர்சிக்கும் ஏனையவர்களினதும் குற்றச்சாட்டானது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, கொள்கையாக இதைப் பிரகடனப்படுத்தினாலும் இதை அடையப் பெறுவதற்கு, எவ்விதமான காத்திரமான எத்தனிப்பையும் செய்யவில்லை என்பதுடன், தென்னிலங்கை அரசியல் சக்திகளினதும் இந்தியா உட்பட்ட சர்வதேச நாடுகளினதும் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப, தமது அரசியலைச் செய்கிறார்கள் என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டு நெடுங்காலமாகவே முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தமை நினைவுக்கு வருகிறது.
இன்று, ஏறத்தாழ ஐந்து வருடங்கள் கழித்தும் இந்த நிலையில் மாற்றமில்லை. ஆனால், 2015ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்னிருந்த அரசியல் களத்திலிருந்து, சமகால அரசியல் களம் மாறியிருக்கிறது.
2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் என்பது, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியின் பின்னர், இடம்பெற்ற பொதுத் தேர்தலாகும்.
அன்று, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவோடு ஏற்பட்ட அந்த மாற்றம், சாத்தியமான தீர்வு ஒன்றை அடையப் பெற முடியும் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்களிடம் விதைத்திருந்தது.
அத்தகைய தீர்வு ஒன்று பெறப்பட வேண்டுமானால், அது தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிப்படியேறிய நல்லாட்சி அரசாங்கத்துடனான இணக்கத்துடனேயே சாத்தியம் என்ற அடிப்படையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அணுகுமுறை அமைந்திருந்தது என்பதுடன், தமிழ் மக்களின் ஆதரவும் அதே அடிப்படையில் அமைந்திருந்தது.
ஆனால், ‘நல்லாட்சி’ மூலம், தமிழ் மக்கள் எதிர்பார்த்த நன்மைகளைத் தமிழ் மக்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அத்துடன், எவ்வளவு ஆதரவாக நடந்துகொண்டாலும், அரசாங்கத்தின் பதவியைக் காப்பாற்றிக் கொடுத்த போதிலும், தமக்கு வேண்டிய காரியத்தைத் தாம் வலுச்சேர்த்த, தாம் காப்பாற்றிய அரசாங்கத்தின் மூலம் சாதித்துக்கொள்ளத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் முடியவில்லை என்பது துரதிர்ஷ்டமாகவே எண்ண வேண்டியுள்ளது.
வரலாறு மீளும் என்பது, பொதுவாகக் கூறப்படுகின்ற ஒன்று. இது பற்றிய தன்னுடைய நூலொன்றில் கருத்துரைக்கும் ஜீ.டபிள்யூ. ட்ரொப்ப், ‘எதிர்கால நடவடிக்கைகளுக்கான பாடத்தைக் கடந்தகாலம் கற்றுத்தருகிறது. முன்னர் நடந்த வகையிலான நிகழ்வுகள், மீள நடக்கும்’ என்றும் குறிப்பிடுகிறார்.
தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது போனாலும், வௌியிலிருந்து அரசாங்கத்தை இரண்டு முறை தமிழர் தரப்புக் காப்பாற்றி இருக்கிறது.
முதலாவது, 1965 – 1970 டட்லி ஆட்சியில், அதையே மீண்டும் 2015-2019 வரை ரணில் ஆட்சியில், தமிழரசுக் கட்சி செய்திருக்கிறது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், தமிழ் மக்கள் ‘ஏமாற்றப்பட்டார்கள்’ என்று சொன்னால் அது மிகையல்ல.
டட்லியின் ஆட்சிக்குப் பின்னர், அரசியல் களம் எப்படி மாறியதோ, அதுபோலவே தற்போது, அரசியல் களம் மாறியிருக்கிறது. மாறிய அரசியல் களத்துக்கு ஏற்ப, தமிழ் மக்களின் அரசியல் அணுகுமுறையிலும் மாற்றம் வருவது, தவிர்க்க முடியாததாகிறது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் கீழ், இலங்கை இணை-அனுசரணை வழங்கிய, இலங்கை தொடர்பான தீர்மானத்திலிருந்து விலகுவதாக, ராஜபக்ஷக்களின் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
‘நல்லாட்சி’ அரசாங்கம், குறித்த தீர்மானத்தின் கீழான தனது கடப்பாடுகளை நிறைவேற்றாது, ஒவ்வொரு முறையும் காலநீட்டிப்புக் கேட்டு நின்ற போது, அதற்கு ஆதரவு கொடுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எனப்படும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடும் தற்போது மாறியிருக்கிறது.
இது பற்றி, அண்மையில் சுரேஷ் பிரேமசந்திரன் வௌியிட்ட விமர்சனத்தில், “கடந்த நான்கரை வருடங்களாக, சுமந்திரன் அரசாங்கத்துக்குக் கால அவகாசத்தை வேண்டிக் கொடுத்துக்கொண்டு இருந்தவர், இப்போது திடீரெனப் போய், விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்கிறார். இவ்வளவு காலமும் அவ்வாறான ஒரு தொனியில் அவர் பேசவில்லை. தேர்தல் வருகின்றது என்பதால்தான், இந்தத் தொனி மாறுகின்றது. அதேவேளையில், ஐ.தே.க ஆட்சியிலிருந்தால் ஒரு விதமாகவும் பொதுஜன பெரமுன ஆட்சி என்றால் இன்னொரு விதமாகவும் இந்தப் பிரச்சினையை அவர் கையாள முற்படுகின்றாரா என்ற கேள்வியும் எழுகின்றது. இப்போது சுமந்திரன், ஜெனீவா சென்றிருப்பதும் பத்திரிகைகளுக்குக் கொடுக்கும் அறிக்கைகளும் தேர்தலை நோக்கமாகக் கொண்டதாகவே தெரிகின்றது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் நெருங்கும் வேளைகளில், தமிழரசுக் கட்சியினரின் தமிழ்த் தேசிய ‘ஹோர்மோன்’கள் அதிகமாகச் சுரப்பது, வரலாற்றுக்குப் புதியதொன்றல்ல. செல்வநாயகம் காலம், பின்னர் அமிர்தலிங்கம் காலம் எனப் பகட்டாரவாரப் பேச்சுகளால் மட்டுமே கட்டியெழுப்பப்பட்ட பாசறை அது.
ஆனால், சுமந்திரனின் கருத்து, மாற்றத்தை வெறும் தேர்தலுக்கான உத்தியாக மட்டும் கருதிவிட முடியாது. அது, மாறியுள்ள அரசியல் களத்தின் விளைவும்தான்.
“டட்லி சேனநாயக்க நல்ல மனிதன்; அவரோடு இணங்கி, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொண்டுவிட முடியும்” என்று, எப்படிச் செல்வநாயகமும் திருச்செல்வமும் நம்பினார்களோ, அப்படித்தான், “ரணில் விக்கிரமசிங்க நல்ல மனிதன்; அவரோடு இணங்கி, நாம் சில அடைவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று சம்பந்தனும் சுமந்திரனும் நம்பினார்கள்.
ஆனால், இரண்டு நம்பிக்கைளும் பொய்த்துப்போய் விட்டன. டட்லி சேனநாயக்கவுடனான அணுகுமுறையையே, சிறிமாவுடன் கையாள முடியவில்லை. ஏனென்றால், தமிழ்த் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்துதல் என்ற எண்ணமே, சிறிமாவிடம் இருக்கவில்லை.
கிட்டத்தட்ட, இதுபோன்ற சூழல்தான் இன்றும் காணப்படுகின்றது. தமிழ்த் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம், இன்றைய சூழலில் ராஜபக்ஷக்களிடம் இல்லை. ஆகவே, மாறியுள்ள களச் சூழலை, வேறுவகையாகவே எதிர்கொள்ள வேண்டிய தேவை, தமிழரசுக் கட்சிக்கு இருக்கிறது.
2015இல், தான் முன்னெடுத்த கைங்கரியத்தில், தமிழரசுக் கட்சி தோல்வி கண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம். ஆங்காங்கே, ஒரு சில நன்மைகள் விளைந்திருக்கலாம். ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைக் காப்பாற்றி, தமிழரசுக் கட்சி தனது, நல்லெண்ணத்தைக் காட்டியிருக்கலாம்; மேற்கையும் இந்தியாவையும் திருப்தி செய்திருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 2015இல் தமிழ் மக்களுக்கு என்ன வாக்குறுதிகள் வழங்கப்பட்டனவோ, தமிழ் மக்கள் எந்த எதிர்பார்ப்பில் வாக்களித்திருந்தார்களோ, அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் தேர்தல், தமிழரசுக் கட்சிக்கு இலகுவானதொன்றாக இருக்காது.
2015இல் தமிழரசுக் கட்சியின் பிரதான வைரிகளாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இருந்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ‘பூகோள அரசியல்’ அணுகுமுறையை, இலங்கை மீது சர்வதேசக் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்து, இணக்கமான ‘மென்வலு’ அரசியலை முன்னிறுத்திய தமிழரசுக் கட்சிக்கு, தமிழ் மக்கள் அமோகமான ஆதரவை வழங்கியிருந்தனர்.
ஆனால், இந்த நிலை இம்முறை தேர்தலில் தொடரும் என்று சொல்ல முடியாது. 2018ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை அவதானித்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாக்குகள், கணிசமானளவில் அதிகரித்திருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இன்றைய அரசியல் களத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சொல்வதற்கு மாறான கருத்தைக் கூட, சொல்ல முடியாத சூழல்தான், தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஏறத்தாழ ஒரு தசாப்த காலமாகக் கூறிவந்த சர்வதேசக் குற்றவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குள்த்தான் தமிழரசுக் கட்சியும் இன்று தள்ளப்பட்டிருக்கிறது.
ஆகவே, இந்த இரண்டில் தமிழ் மக்கள் எதைத் தெரிவுசெய்யப் போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. ஆனால், அதைவிட முக்கியமான கேள்வி, அணுகுமுறை ரீதியிலும் நிலைப்பாட்டு ரீதியிலும் தற்போது மிக நெருக்கமான ஒருமைத் தன்மையை வௌிப்படுத்தும் இந்த இரண்டு தரப்பும் ஏன் கைகோர்க்கக் கூடாது என்பதுதான்.
கொள்கை அதற்குத் தடையாக வராவிட்டாலும், அரசியல் யதார்த்தம் எனப்படும் தனிநபர் விருப்பு வெறுப்புகள் அந்தக் கைகோர்ப்பைத் தடுக்கும்.
1972ஆம் ஆண்டு, பொன்னம்பலமும் செல்வநாயகமும் மீண்டும் தமிழ் மக்களின் நன்மையை மட்டும் கருதிக் கைகோர்த்தபோது, அவர்கள் தமது வாழ்க்கையின் அந்திமக் காலத்தை எட்டியிருந்தார்கள். ஆகவே, காலத்தின் பண்படுத்தல், தமது தனிமனித விருப்பு வெறுப்புகளைத்தாண்டி செயற்படும் பக்குவத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கலாம்.
தமிழரசுக் கட்சிக்கு இன்று, முக்கிய வைரி ஒன்றல்ல; முக்கிய வைரிகள் இரண்டு உருவாகி இருக்கிறார்கள். இரண்டாவதாக, இன்று முளைத்திருக்கும் வைரி, நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி.
விக்னேஸ்வரனின் கூட்டணியினர், தமிழரசுக் கட்சிக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்களுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சிக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்களுக்கும் இந்த இரண்டு தரப்பினரின் கொள்கை நிலைப்பாடுகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
ஆனால், இவை தமிழரசுக் கட்சியோடு ஒன்றுபடுவது ஒரு புறமிருக்க, இந்த இரண்டு தரப்பாலும் ஒருவரோடு ஒருவர் கைகோர்க்க முடியாத நிலை ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஏன், விக்னேஸ்வரனாலும் கஜேந்திர குமாராலும் கூட கைகோர்க்க முடியவில்லை? அதற்குத் தடையாக இருப்பது எது?