மைக்கேல் ரிச்சர்ட் பாம்பியோ.
சுருக்கமாக – மைக் பாம்பியோ.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைப்பற்றி ஊருக்கே தெரியும். தான் வாழ பிறரைக் கெடுக்கும் ஜாதி. அகதிகளுக்குக்கூட
இரக்கம் காட்டாத நல்ல மனசு!
குணத்தில் அவருக்கு சித்தப்பா
இந்த பாம்பியோ.
‘இனம் இனத்தோடே வெள்ளாடு
தன்னோடே’ இல்லையா? அதனால்தான்
தான் ஜனாதிபதியானதும் – இந்த மனிதரை ஃபாரின் அஃபெய்ர்ஸ் மினிஸ்ட்டர்
ஆக்கினார் ட்ரம்ப்.
- கன்சாலிலிருந்து அமெரிக்க செனட்டுக்குப் போட்டியிட்டபோது, எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய வம்சாவளி வேட்பாளர் ராஜ் கோய்லை ‘முண்டாசு மண்டையன்’ என்றும் , ‘இந்த ஆள் சிக்கா? ஹிந்துவா? முஸ்லிமா? பௌத்தனா? மதம் கெட்ட மனுஷன்!’ என்றெல்லாம் சீமான் ஸ்டைலில் விமரிசித்த நாகரிகச் செம்மல்
இந்த பாம்பியோ. தரக்குறைவாகப்பேசியும் ஜெயித்தும்விட்டார் பாருங்கள்.
அமெரிக்க செனட்டில் கால் வைத்ததும் , முஸ்லிம்களைத் தாக்கி கன்னாபின்னாவென்று ஒரே கூச்சல் போட்டதுமல்லாமல், இஸ்லாமியருக்கெதிரான ACT FOR AMERICA அமைப்பில் பகிரங்கமாக இணைந்து வேலைசெய்தார் பாம்பியோ.
குவாண்டனாமோ சிறைக்கைதிகள் கோரிக்கைகளுக்காக பட்டினிப்போராட்டம் நடத்தியபோது, “அவன்களுடனெல்லாம் பேச்சு வார்த்தை நடத்தாதீர்கள். சாப்பிட்டுக் கொளுத்துக் கிடக்கிறான்கள். கொழுப்பைக் குறைப்பதற்காக இந்தப்போராட்டம் ஒரு சாக்கு. அவ்ளோதான்…” என்றார் ஹெச்.ராஜா மாதிரி.
அந்தக் கொடுஞ்சிறை தேவையில்லை என்ற ஒபாமாவுடன் ‘ சிறைச்சாலையை மூடக்கூடாது!’ என்று கடும் சண்டை போட்டு முண்டா தட்டினார் பாம்பியோ.
ஈரானுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் போட்டபோது, ” 2000 குண்டுகள் போதும். இரானை மண்மேடாக்கிவிடலாம். அவன்களுடன் போய் ஒப்பந்தம் போட்டுக்கொண்டிருக்கிறீர்களே?” என்று ஆத்திரத்தோடு கரித்துக்கொட்டினார் .
சிரியாவில் ஐ எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க அதிபர் ஒபாமா ரஷ்யாவின் உதவிய நாடியபோது, “ம்க்கும். தொடப்பக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம் வேணுமாக்கும் ?” என்று முதல்மரியாதைக்கிழவி மாதிரி சிடுசிடுத்தார். கூடவேகூடாது என்று ஒபாமாமேல் எரிந்துவிழுந்தார்.
பருவநிலை மாற்றம் குறித்த உலகநாடுகள் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்து போடக்கூடாது – எவன் செத்தால் நமக்கென்ன என்றார்.
அமெரிக்க செனட்டில் வெறுப்பாய் உமிழும் இந்த ஆளின் நடமாட்டத்தைப் பார்த்து ‘இவன்தான் சரியான ஆள்.உடம்பெல்லாம் விஷம் !’ என்று ஊரைக் கெடுக்க சிஐஏ டைரக்டராகப் போட்டார்கள்.
வெனிசுவேலாவில் மதுராவுக்கு எதிராக நடக்கிற அத்துணை அட்டூழியங்களுக்கும் சூத்திரதாரி பாம்பியோதான். அங்கு எதிர்க்கட்சி வரிசையிலிருந்த ஜுவான் குவைடோவை ‘இவர்தான் இனிமேல் வெனிசுவேலாவின் ஜனாதிபதி’ என்று அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு அறிவித்து – மூக்குடைபட்டுப்போனார். ஆனாலும், வெனிசுவேலாவை நாசமாக்காமல் விடமாட்டேனென்று குலதெய்வத்துக்கு தேங்காய் நேர்ந்து வைத்திருக்கிறார்.
மந்திரியானதும்….
இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கிக் கிடாசினார்.
இஸ்ரேல் சிரியாவை ஆக்கிரமித்தது
சரிதான் என்று ஜோராகக் கைதட்டினார். இரானுக்கு பொருளாதாரத் தடை போட்டார்.
போதாதென்று இப்போது இரான்மீது போர்தொடுத்தே ஆகவேண்டுமென்று எச்சில் சொட்டச் சொட்ட வளைய வருகிறார் .
இரானிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்கக்கூடாது என்று போன மே மாசம் மிரட்டி காரியம் சாதித்துக்கொண்டார் . வர்த்தகத்தில் இந்தியாவுக்கு அளித்துவந்த சிறப்பு அந்தஸ்திலும் கைவைத்தான் பாருங்கள் இந்த நல்லமனுஷன்.
ஜூன் மாசம் இந்தியாவுக்கு வந்தபோது
என்ன செய்திருக்கிறார் தெரியுமா ? ரஷ்யாவுடனான எஸ்-400 ஒப்பந்தத்தைக் கிழித்துக் கடாசுங்கள் என்று இந்தியாவை அச்சுறுத்திவிட்டுப் போயிருக்கிறார்.
தேவன் வருகிறாரோ என்னமோ,
சாத்தான்கள் அழிவதில்லை
என்பது மட்டும் தெளிவாகிறது!
நன்றி டாக்டர் த.அறம் !
நன்றி ‘இஸ்கப் குரல்’ இதழ் !