பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் போன்ற ஆறு மதத்தவர்கள், எந்த ஆவணங்களுமின்றி, இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலே குடியுரிமையைப் பெறமுடியும் என்று, பா.ஜ.க அரசாங்கத்தின் புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் கூறுகின்றது.
ஆனாலும். தமிழ்நாட்டிலும் இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும், கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு, இந்த வசதி வழங்கப்படவில்லை.
இதற்கு எதிராக, இந்தியாவில் பரவலாகவே குரல்கள் எழுந்திருக்கின்றன. இலங்கைத் தமிழர்களை, இந்தத் திருத்தச் சட்டத்துக்குள் உள்வாங்கத் தவறியதற்கு எதிராக, ஆளும்கட்சியான அ.தி.மு.க குரல் கொடுக்காது போனாலும், ஏனைய தமிழக அரசியல் கட்சிகள், தீவிரமாகக் குரல் கொடுத்து வருகின்றன.
இந்தியாவில் அகதிகளாக, நீண்டகாலம் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு இந்திய அளவில் பரவலான எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.
இலங்கையில், சிவசேனை அமைப்பின் நிறுவுநரான மறவன்புலவு சச்சிதானந்தன் மாத்திரம், வெளிப்படையாகக் கருத்து வெளியிட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் உள்வாங்கப்படாதமை குறித்து, ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, ‘ஈழ ஏதிலியர் மறுவாழ்வு அமைப்பு’ என்ற பெயரில், அரச சார்பற்ற நிறுவனத்தை இந்தியாவில் நடத்தி வரும் சந்திரஹாசன், இந்திய அரசாங்கத்தின் முடிவு குறித்து, வெளிப்படையாகக் கருத்து வெளியிடாமல் நழுவியிருக்கிறார். “தமிழ் அகதிகள், மீண்டும் நாடு திரும்ப வேண்டும்” என்பதே, தமது நிலைப்பாடு என்று கூறியிருக்கிறார்.
ஊடகம் ஒன்று, வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு, “இலங்கைத் தமிழர்கள் உள்வாங்கப்படாதமை, பெரிய பாதிப்பல்ல” எனக் கூறியிருக்கிறார். “அங்குள்ள தமிழர்கள், திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்பதே, தமது நிலைப்பாடு” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும், ஏனைய தமிழ் அரசியல் தலைவர்கள் யாரிடம் இருந்தும், எந்தக் கருத்தும் வரவில்லை. எல்லோரும், இந்திய மத்திய அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக, வாயை மூடிக் கொண்டு, அமைதி காக்கிறார்கள் போலவே தெரிகிறது,
இந்தியாவில் புகலிடம் தேடியுள்ள தமிழர்கள், மீண்டும் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு சரியானதாகவே இருந்தாலும், அங்குள்ள மக்களின் உணர்வுகள், சூழல், நிலைப்பாடுகளைத் தெரிந்து கொள்ளாமல், எந்த அரசியல் தலைவர்களும் அத்தகைய முடிவை எடுக்க முடியாது.
போராலும், அரசியல் அடக்குமுறைகளாலும் இலங்கையில் இருந்து வெளியேறிய ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், தமிழகத்தில் மாத்திரம் வசிக்கிறார்கள். தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் 116 முகாம்களில் வாழுகின்றனர்.
முகாம்களிலும் வெளியிலும் வசிக்கின்ற இலங்கைத் தமிழர்கள் மூன்று விதமான நிலைப்பாடுகளுடன் இருக்கிறார்கள். இதனை அவர்கள், இந்திய அரச அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புகளின் போதும், அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையகத்தின் அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போதும் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.
முதலாவது, மீண்டும் தாயகம் திரும்பி சொந்த இடங்களில் குடியேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டுள்ளவர்கள்.
இரண்டாவது, மீண்டும் தாயகம் திரும்ப முடியாது; இந்தியாவில் குடியுரிமை பெற்று வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள்.
மூன்றாவது, இப்போதைக்கு இரட்டைக் குடியுரிமை தரப்பட வேண்டும்; நிலைமை சீரடையும் போது, தாயகம் திரும்பலாம்; அதுவரை இந்தியாவில் அனைத்து உரிமைகளுடன் கௌரவமாக வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள்.
தாயகம் திரும்ப வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளவர்களைத் திருப்பி அழைப்பதில், இலங்கை அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை. தமிழக, இந்திய அரசாங்கங்களுக்கும் அதில் அக்கறையில்லை.
மிகநீண்ட நிர்வாகச் செயல்முறைகளைக் கடந்து, ஒருவர் நாடு திரும்புவதற்கு குறைந்தபட்சம் ஓராண்டுக்கும் மேலாகிறது. இரண்டு ஆண்டுகள் வரை சென்றால் கூட, அது ஆச்சரியமில்லை.
இந்தளவு நீண்ட செயல்முறைகளைக் கடந்து, நாடு திரும்புவதற்குப் பலரும் தயங்குகிறார்கள். மீண்டும் குடியமர விரும்புபவர்களும் கூட, இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் பொறுமை காக்கும் முடிவில் இருக்கிறார்கள்.
தாயகம் திரும்ப விரும்பும் மக்களை, குறுகிய காலத்துக்குள், இலகுவான வழிமுறைகளின் அடிப்படையில், மீளக் குடியேற்றுவதற்கான பொறிமுறையை உருவாக்குவதில், இந்திய, இலங்கை, தமிழ்நாடு அரசாங்கங்கள் மற்றும், அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையகம் ஆகியன தோல்வி கண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.
இவ்வாறான நிலையில், அனைவரையும் தாயகம் திரும்ப அழைத்துக் கொள்வது என்பது, நடைமுறைச் சாத்தியமான விடயம் அல்ல; அது இப்போதைக்கு நடக்கக் கூடியதும் இல்லை.
அடுத்து, தாயகம் திரும்புவதையே விரும்பாதவர்களும் இப்போதைக்கு திரும்ப விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். இவர்கள், இந்தியாவில் அதிகபட்சமாக 35 ஆண்டுகளுக்கும் மேலாகவே, அகதிகளாக இருந்து விட்டார்கள்.
எந்த உரிமைகளும் இல்லாமல், அகதி என்ற அடையாளத்துடன் மூன்றாவது தலைமுறைகளும் அங்கு உருவாகத் தொடங்கி விட்டன. இவர்கள் தமக்கு இந்தியக் குடியுரிமை, அல்லது இரட்டைக் குடியுரிமையைக் கோருகிறார்கள்.
இவ்வாறு கோருபவர்களில், உடனடியாக நாடு திரும்ப முடியாமல் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அதற்கு அரசியல் காரணங்கள் இருக்கின்றன; குடும்ப சூழ்நிலைகள் காரணமாக இருக்கின்றன; பொருளாதார காரணங்கள் உள்ளன; வேறு காரணங்களும் இருக்கின்றன.
மூன்று தசாப்தங்களாக அகதிகளாக வாழ்ந்து விட்ட போதும், அங்கு ஏதோ ஒரு தொழிலைச் செய்து, வாழ்க்கையை நடத்தி வரும் அவர்கள், தமக்குத் தேவையானதைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவற்றைத் தூக்கியெறிந்து விட்டு, தாயகம் திரும்பினால், எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்தே தொடங்க வேண்டும்.
சொந்த இடங்களில் வீடுகள், காணிகள் இல்லாதவர்கள், சரியான தொழில்வாய்ப்பு இல்லாதவர்கள், பிள்ளைகளின் கல்வியைத் தொடருவதில் சிக்கல்களை எதிர்கொள்பவர்கள், தமது பிள்ளைகளை இந்திய குடும்பங்களில் திருமணம் செய்து கொடுத்துள்ளவர்கள் பெரும்பாலும், நாடு திரும்பும் எண்ணத்திலேயே இல்லை.
அவர்கள் எஞ்சிய காலத்தை இந்தியாவிலேயே கழித்து விட நினைக்கிறார்கள். தாயகம் திரும்பி ஒவ்வொன்றாகத் தேடுவதில் உள்ள சிரமத்தை அவர்கள் நன்கு அறிவார்கள்.
வீடுகள், காணிகள், இருப்பவர்களும், குறைந்தபட்சம் உறவினர் வீடுகளில் தங்கக் கூடிய வாய்ப்பு உள்ளவர்களும் தான் தாயகம் திரும்பத் தயாராக இருக்கிறார்கள். அல்லது, பொருளாதார வசதிகள் இருப்பவர்கள் அந்த முடிவை எடுக்கிறார்கள்.
இவை எதுவும் இல்லாமல், இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களை, அடியோடு பெயர்த்து வந்து வடக்கு, கிழக்கில் குடியமர்த்துவது சாத்தியமில்லை. அவ்வாறான ஒரு முடிவு மிகப்பெரிய அவலத்தையே கொடுக்கும்.
தமிழகத்தில் உள்ள அகதிகளைத் திருப்பி அழைக்கும் விடயம் ஒன்றும் சாதாரணமானது அல்ல. அதனை இந்திய- இலங்கை அரசாங்கங்கள் கூட்டாக ஒருபோதும் செய்யப் போவதும் இல்லை.
ஒரு இலட்சம் தமிழர்கள் வடக்கு, கிழக்கில் வந்து குடியமர்ந்தால், தமிழர்களின் சனத்தொகையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டு விடும் என்ற அச்சம் இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதனால் அந்த முடிவை எடுக்காது.
இந்திய அரசாங்கம், இலங்கைத் தமிழர்களை “வெளியே போ” என்றும் சொல்லாது. ஏனென்றால், அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டு, மீண்டும் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்தால், அதற்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் அதற்கு இருக்கிறது.
இலங்கைத் தமிழர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது; அவர்கள் திரும்பிப் போகலாம் என்று கூறும் இந்திய அரசாங்கம் கூட, அவர்களைத் திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகளை எடுக்கத் தயாரில்லை. திருப்பி அனுப்புவதில்லை என்ற முடிவில் இருந்தாலும், இந்தியக் குடியுரிமையையும் வழங்கவும் தயாராக இல்லை. 30 ஆண்டுகளுக்கு மேலாக எந்த உரிமைகளும் இல்லாமல் வாழ்ந்து விட்ட இலங்கைத் தமிழர்கள், தொடர்ந்தும், அவ்வாறே வாழ வேண்டும் என்பதே இந்திய அரசின் முடிவாக உள்ளது.
இதற்கு எதிராக இந்திய அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு வெளியிட்டாலும், அதனைக் கண்டு கொள்ளும் நிலையில் இந்திய மத்திய அரசாங்கம் இல்லை.
இருந்தாலும், இலங்கையில் உள்ள தமிழ்த் தலைமைகள் கள்ள மௌனம் காக்கிறார்கள். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.