இதில் உண்மையும் வேடிக்கையும் ஒன்றுண்டு. இந்த அநியாயங்களையெல்லாம் செய்வது வேறு யாருமல்ல. நம்மவர்கள்தான். நமக்கும் இவர்களைப் பற்றித் தெரியும். நம்முடைய அயலில் – ஊரில் – உள்ளவர்களே இதையெல்லாம் செய்கிறார்கள். அல்லது அக்கம் பக்கத்து ஊர்களில் இருப்பவர்கள். இதெல்லாம் தவறென்று நமக்கும் தெரியும். நமக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே தெரியும். இது எதிர்காலத்தில் உண்டாக்கப்போகும் பேராபத்தைப்பற்றியும் நமக்குத் தெரியும். அதைத்தான் சூழலியலாளர்கள் தொடக்கம் சமூக அக்கறையுள்ளோர் அனைவரும் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் இதைத் தடுப்பதற்கு யாருமே இல்லை. படித்தவர்களாக இருக்கிறோம். பலதையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அதிகாரிகளாக, கல்விமான்களாக, துறைசார்ந்தோராகப் பலர் இருக்கிறார்கள். நமக்கான தேசத்தைப் பற்றிக் கனவு வேறு காண்கிறோம். ஊர்களில் கிராம முன்னேற்றச் சங்கம், சனசமூக நிலையம், விளையாட்டுக்கழகம், இளைஞர் கழகங்கள், மாதர் சங்கங்கள், ஆலய நிர்வாகங்கள், ஆன்மீக சபைகள் என ஏராளம் பொது அமைப்புகள் எல்லாம் இருக்கின்றன. இப்படியெல்லாம் இருக்கும்போது இந்தப் பகற் கொள்ளை நடக்கிறது.
மண்கும்பானில் தொடர்ந்து மணல் அகழ்ந்தால் மண்டைதீவு உட்பட அல்லைப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்கள் எல்லாமே முற்றாகப் பாழடைந்து விடும் என்கிறார் புவியியற் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை. இதேநிலைதான் மணல்காட்டிலும். மணல்காட்டை இப்பொழுது போய்ப் பாருங்கள். அங்கே மணலுமில்லை. பனைகளும் கடலோரக் காடுகளுமில்லை. எல்லாமே பாழாகி, அந்த நில அமைப்பே கெட்டு விட்டது. இனி அந்தப்பிரதேசம் முழுவதும் உவராகி விடும். மணல் ஒன்றும் பெருகி நிரவுவதில்லை. அல்லது மரம், செடியைப்போல வளர்வதில்லை. ஒரு அளவுக்கு மேல் மணலை அகழ்ந்தால் நிலப்படிகத்தின் தன்மையே மாறி விடும். அது சுற்றயலையே கெடுத்து விடும். இது விஞ்ஞானபூர்வமான உண்மை.
இப்படித்தான் குடாநாட்டின் களப்புக்காடுகளும் அழிக்கப்படுகின்றன. களப்புக் காடுகள் (அலையாத்திக் காடுகள்) அந்தக் களப்புகளில் உள்ள உயிரினங்களுக்குப் பாதுகாப்பும் அவற்றின் உயிர் வாழ்வுக்குமானது. இந்தக் களப்புகள்தான் நம்முடைய சூழலை உயிர்ப்புடன் –ஈரலிப்புத்தன்மையுடன் வைத்திருக்கின்றன. இந்தக் காடுகள் இயற்கை அழகு மட்டுமல்ல, இயற்கையின் வளமுமாகும். இவற்றை அழித்து விட்டால் களப்புகளின் தன்மையே மாறி வெறும் நீர் வெளியாகி விடும். காலப்போக்கில் அந்த நீர்வெளி சேற்றுப் பரப்பாகி நாற்றமெடுக்கத் தொடங்கி விடும். பிறகு களப்புகள் மட்டுமல்ல, அதை அண்மித்த பகுதிகளும் கெட்டு விடும்.
இதே நிலைதான் யாழ்ப்பாணத்தில் உள்ள பனைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. ஒரு காலம் பனையில் தங்கியிருந்த வாழ்க்கை இன்றில்லை. முன்பு பனையிலேயே யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை மையம் கொண்டிருந்தது. பெட்டி, கடகம், பாய், பட்டை, உமல், தூக்குப் பை, ஓலை, மட்டை, கிழங்கு, ஊமல், பனாட்டு, ஒடியல், புழுக்கொடியல், மரம், சலாகை என்று நூறுக்கு மேலான தேவைகளைப் பனை நிறைவேற்றியது. இப்பொழுது அது மாறி விட்டது. என்பதற்காக பனைகளை முற்றாகவே அழிக்கத் துணிந்து விட்டார்கள் எல்லோரும்.
ஆனால், “யாழ்ப்பாணத்தின் ஒரே காடு, மரங்களின் தோப்பு பனைகள்தான் என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பனை விஞ்ஞானி. இந்தப் பனைகளை இழந்தால் நிச்சயமாக யாழ்ப்பாணம் பாலையாகி விடும்” என்று எச்சரிக்கிறார் அவர்.
அவர் சொல்வது உண்மையே. யாழ்ப்பாணத்தின் காடு மட்டுமல்ல, யாழ்பாணத்தின் முகம், யாழ்ப்பாணத்தின் அடையாளம், யாழ்ப்பாணத்தின் வளம் எல்லாமே பனைதான். அந்தப் பனைக்குக் கேடு வரும் என்றால் அது யாழ்ப்பாணத்துக்கான கேடுதான்.
இப்பொழுதே யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீருக்குப் பெரிய பிரச்சினை. இருக்கின்ற நிலத்தடி நீரும் கெட்டு விட்டது. அதை எப்படிச் சீர்ப்படுத்துவது, மேம்படுத்துவது என்று யாருக்குமே தெரியவில்லை. ஏற்கனவே பல இடங்களில் நல்ல தண்ணீருக்குப் பெரிய பிரச்சினை. தீவுப்பகுதிகள், வடமராட்சி, வலிகாமம் மேற்கில் சில பகுதிகள், தென்மராட்சியில் சில பிரதேசங்களில் எல்லாம் நீர்ப் பிரச்சினை உண்டு.
இந்தத் தண்ணீர்ப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு – யாழ்ப்பாணத்துக்கு – எங்கே இருந்து தண்ணீரைக் கொண்டு வருவது என்று யாருக்குமே தெரியவில்லை. கிளிநொச்சியில் உள்ள இரணைமடுக்குளத்திலிருந்து தண்ணீரைக் கொண்டு வரலாம் என்று திட்டமிட்டார்கள். இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனைப் பெற்று 23000 மில்லியனில் குளத்தை விரிவாக்கிக் கட்டினார்கள். நீரின் கொள்ளளவு கூட்டப்பட்டது. ஆனாலும் அங்குள்ள விவசாயிகள் நீரைத் தர முடியாது என்று சொல்லி விட்டார்கள். விவசாயிகளுக்கு செடில் குத்தி உஷாரேத்தி ஆட விட்டிருக்கிறார்கள் சில அரசியல்வாதிகள். எனவே அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இதற்குப் பதிலாக ஒரு மாற்று வழியைக் கண்டு, மருதங்கேணி –தாளையடியிலிருந்து கடல் நீரைச் சுத்திகரித்து, நன்னீர் விநியோகத்தைச் செய்யலாம் என்றொரு மாற்றுத்திட்டம் உருவாக்கப்பட்டது. அதுவும் நிறைவேறவில்லை. புதுக்காட்டுச் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் பொருத்தப்பட்ட நீர்க்குழாய்களில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நிரம்பி வழிகிறது காற்று.
இனப்பிரச்சினையைத் தீர்த்தாலும் இந்தத் தண்ணீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது போலிருக்கு என்கிறார் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்.
யாழ்ப்பாணத்துக்கான தண்ணீரைப்பற்றிச் சிந்திப்பவர்களில் சிவச்சந்திரன் முக்கியமானவர்.
சிவச்சந்திரன் இன்னொன்றையும் சொல்கிறார். “யாழ்ப்பாணக் குடாநாட்டில் மிஞ்சியிருக்கும் ஒரேயொரு காடு இயக்கச்சி –பளைப்பிரதேசத்தில் உள்ள காடுதான். அதை என்ன பாடுபட்டாவது நாம் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் யாழ்ப்பாணம் பாலையாகிவிடும்” என்று. இப்பொழுது அந்தக் காடும் அழிக்கப்படுகிறது. ஏறக்குறைய இனி அங்கே காடே இல்லை என்றாகி விட்டது. இதில் வனவளப்பிரிவுக்கும் நிலச் சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் அரச காணிகளில் உள்ள காடுகளே அதிகமாக அழிக்கப்படுகின்றன. ஏறக்குறைய 4000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள காடுகள். இதைத் தடுத்து நிறுத்துவார் யாருமில்லை. உரிய தரப்புகள் என்று சொல்லப்படும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு, பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், மக்கள் பிரதிநிதிகள் என்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் போன்ற எல்லாத்தரப்புகளுக்கும் இதைப்பற்றி எடுத்துச் சொல்லியும் எதுவும் நடக்கவில்லை. வேலியே பயிரை மேய்ந்தால் யார் தான் என்ன செய்ய முடியும்? காடழிப்பு, மணல் அகழ்வு, மரக்கடத்தல் போன்றவற்றில் பெரிய கைகளே சம்மந்தப்பட்டுள்ளன என்பது ஊரறிந்த சேதி.
எனவேதான் நாமும் சொல்கிறோம், யாழ்ப்பாணம் பாலையாகிக் கொண்டிருக்கிறது என்று. இந்தப் பாலையில் சோலையைக் காண்பது எப்படி? பாலையில் வாழ்வை நடத்துவது எப்படி? நாம் வீடுகளையும் கோயில்களையும் கல்யாண மண்டபங்களையும் பென்னாம்பெரிய மாடங்களையும் பிரமாண்டமாகக் கட்டலாம். பாலையில் எப்படி வாழ்வது?
பாலையில் அபாய மணிகள் நம்முடைய காதுகளில் கேட்கிறது. தயவு செய்க, செவி கொள்க!
(அரங்கம்)