பிக்குகளின் மகாவம்சக் கனவு இலங்கைத் தீவை நாசமாக்கி வருகிறது

தண்டனை பெற்ற ஞானசார தேரரை விடுவிக்க ஆதரவு வழங்கியவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்.

மட்டக்களப்பின் வியாழேந்திரன் எம்பி ஞானசார தேரரைக் கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் தூக்கிப் பிடித்தாரே ?
அவர் தற்போது தூங்கி விட்டாரோ ?

1952 இல் S.W.R.D. பண்டாரநாயக்க பிக்குகளை நம்பிக் கட்சி தொடங்கினார். 1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தை முன்னிறுத்தி தேர்தலில் வென்று பிரதமரானார்.

1959 செப்ரெம்பர் 25 இல் பிக்குவின் கையினாலேயே துப்பாக்கிச் சூடு பட்டார். மறுநாள் இறந்தார்.

அப்போது முன்னாள் பிரதமர் சேர்.ஜோண் கொத்தலாவல கூறினார் ” இந்தப் பிக்குகள் விசர்நாய்க் கூட்டம் மாதிரி . நான் அவர்களைக் கட்டி வைத்திருந்தேன்.

பண்டாரநாயக்க இந்த விசர் நாய்களைத் திறந்து விட்டுச் சகவாசம் நடத்தினார். அதுகள் தங்கட குணத்தைக் காட்டிப் போட்டுதுகள் ”
என்றாராம்.

பிக்குகளின் மகாவம்சக் கனவு இலங்கைத் தீவை நாசமாக்கி வருகிறது. அவர்களது நீண்ட நாள் இனவாதம் 50 வருடங்களின் பின்பு கைகூடி சிங்கள பௌத்த நாடாகலாம் போலத் தானுள்ளது.

கன்னியாவெந்நீரூற்றுப் பிள்ளையார் கோவில், நெடுங்கேணி வெடுக்குநாறி மலை,வெருகல் நீலிமலை அம்மன் கோவில்
( லங்காபட்டுன ),யாழ் நாவற்குழியில் 27 குடும்பங்களின் குடியேற்றம்,விகாரை என அரச ஆசீர்வாதம் பெற்ற பிக்குகளின் அட்டகாசங்கள் தொடர்கின்றது.

2005 இல் திருகோணமலை பஸ் நிலையத்திற்கு எதிரே மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் திடீரென ஒரு புத்தர் சிலை முளைத்தது.

அதனை அகற்ற வேண்டுமெனப் பலத்த போராட்டங்கள், தொடர் ஹர்த்தால்கள் நடந்தன.
இப்போது அதைப் பற்றிக் கேட்பார்.கதைப்பார் இல்லை.

திருகோணமலை நகர சபை உள்ளுராட்சி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு புதிய சந்தையொன்றை கட்டியது.

அது தமிழர் பிரதேசத்தில் உள்ளதென சமாதானத்திற்காக போர் புரிந்த ஜனாதிபதி சந்திரிகா தனது செயலர் பாலபெட்ட பென்டியை நேரடியாக அனுப்பித் திறக்க விடாமல் தடுத்தார்.

இப்பேர்ப்பட்ட சந்திரிகா தான் பிராந்தியங்களுக்கான அதிகார சபைத் தீர்வுப் பொதியை வரைந்தார்.

அதனைக் கிழித்தெறிவார்களெனத் தெரிந்தே தான் வரைந்து உலகத்திற்கு நடித்திருப்பார்.
துறவறம் பூண்ட பிக்குகளை அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக வளர விட்டுள்ளனர்.

அவர்கள் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை நிலை நாட்டவே செய்வார்கள்.
அரசும் கண்டும் காணாமல் விட்டே செல்லும்.