ஆனால் காலப் போக்கில் இந்த உண்மை நிகழ்ச்சிகள்(Reality Shows) முற்று முழுதான செயற்கையான நிகழ்ச்சிகளாக்கப்பட்டு ஏற்கனவே திட்டமிடப்பட்ட தெரிவுகளை முன்னிறுத்தும் நிகழ்ச்சிகளாக பரிணாமம் பெற்றன. அது பங்கு பற்றுபவர்களின் அலங்காரம் கூடவே சேர்ந்து பின்னணியில், முன்னணியில் ஆடுபவர்கள், பாடுபவர்கள் பகிடி(வதை) (ஒரு வகையில் இவை வதைதான்) செய்பவர்கள் ஏன் இதற்கான மத்தியஸ்தர்களாக வரும் பிரபல்யங்களின் செயற்கையான செயற்பாடுகள் என்று பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதில் தெரிவான திறமைகள் சமூகத்தில் தம்மை மட்டும் வளர்த்துக் கொள்ளல் என்ற சுயநலத்திற்குள் வீடு, மனை, கார், பங்களா, என்றும் உலகம் சுற்றும் பிரபல்யங்களாக மாற்றபட்டு ஏனையவர்களையும் ‘நீங்களும் வெல்லலாம்..” என்ற அதிஷ்டலாபச் சீட்டு நம்பிக்கையிற்குள் வீழத்தும் செயற்பாடுகளுக்குள் ஒரு தொகுதி இளசுகளை வீழ்த்தியுள்ளது. விதிவிலக்காக சில திறமைகள் வெளிகொணரப்பட்டதையும் நாம் மறுக்கவில்லை. சாதாரண பாமர மக்கள் இதன் பங்களிகளாக மாறுவது சாத்தியப்பட்டுள்ளதா…? என்றால் பொது போக்கில் இல்லை என்றே கூறலாம். இந் நிகழ்ச்சிகளை சற்றே ஆழமாக பார்த்தால் இது புரியப்படலாம்.
இதனால் இந்த வளர்ச்சிப் போக்கில் பல பார்வையாளர்கள் இந்நிகழ்ச்சியில் இருந்து தம்மை ஒதுக்கிக் கொண்டனர். ஆனாலும் தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது நிகழ்ச்சிக்கான ரேற்ரிங்கை(Rating) தக்க வைத்து பணம் சம்பாதித்தல் என்ற ஒரு நோக்கத்திற்காக தமது சமூகப் பொறுப்பை மறந்து செயற்படுவது மிகவும் வருத்தக்கது, இந்த நிகழ்ச்சிகளை முன் நகர்த்துவது கண்டனத்திற்குரியது.
இதன் உச்சக் கட்டமாக பலராலும் அரக்காமல் தொலைக்காட்சிப் பெட்டியிற்கு முன்னால் அமர்ந்து பார்க்ப்படும் ‘பிக் பாஸ்(Big Boss)” வெறும் மூன்றாம் தர விடயங்களை (gossip)( முக்கியமாக புறணி கதைத்தல்) முதன்மைபடுத்தி நடாத்தப்படுவதும் இதில் பலரும் விட்டில் பூச்சிகளைப் போல் வீழ்ந்து கிடப்பதுவும், இன்னமும் வீழ தயாராக இருப்பதுவும் ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் வெளிப்பாடு அல்ல. இதில் தொலைக்காட்சி ஊடகங்களின் சமூகப் பொறுப்பற்ற தன்மையுடன் தமது சுயத்தை அறியாது இதில் வீழ்ந்து போகும் பொது மக்களும் தம்மை மீள்பார்வைக்குள் உள்ளாக்க வேண்டும் என்பது சரியான பார்வையாக இருக்க முடியும்.
இதற்கு மனோதத்துவ மருத்துவர் ஷாலினியின் கருத்துக்களை துணைக்கு அழைக்கின்றேன். ‘…….பிக் பாஸ் உட்பட எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதற்காக அதிக நேரம் செலவிடுவது, அதைப் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருப்பது, முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அதையே விவாதிப்பது எல்லாம், மக்கள் அதற்கு அடிமையாகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. மனநல மருத்துவராக எச்சரிக்கவேண்டியது எங்கள் கடமை. மக்கள் எதற்காகவும் அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் புறக்கணிப்பதுதான் நல்லது.”