அமேதியில் வசிப்பவரான
அனோகெலால் திவாரி, “பொறுத்திருந்து பாருங்கள். மே 23 அன்று வாக்குகள் எண்ணப்படும்போது நரேந்திர மோதிஜி இந்தியாவின் முன்னாள் பிரதமராக அறியப்படுவார். காங்கிரஸ் அடுத்த ஆட்சியை அமைக்கும். ராகுல் அடுத்த பிரதமராவார்,” என்றார்.
அமேதியில் இருக்கும் ராகுல் ஆதரவாளர்களின் நீண்ட நாள் கனவு இது. இன்னும் சொல்லப்போனால் அவர் 15 வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்ததிலிருந்து அவர்களின் கனவு இதுதான்.
2004, 2009 மற்றும் 2014 நான் இவரது பிரசாரத்தைப் பின் தொடர்ந்தேன். ஒவ்வொரு முறையும் அவரது ஆதரவாளர்கள் – நாடாளுமன்ற உறுப்பினரை அல்ல, ஒரு பிரதமரையே தேர்ந்தெடுக்கிறோம் என்றே தெரிவித்தனர்.
இதே மனநிலை இப்போது வயநாட்டிலும் எதிரொலிப்பதாக பிபிசி இந்திக்காக வயநாட்டில் உள்ள செய்தித் தொடர்பாளர் இம்ரான் குரேஷி தெரிவிக்கிறார்.
ஒரு நாளுக்கு ஐந்து பிரசாரக் கூட்டம் வீதம் பேசிவரும் ராகுல் காந்தி இந்தியாவின் மூலை முடுக்குகளிலும் பயணிக்கிறார். அவரது தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்தியாவின் பிரதான எதிர்க் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியின் நிலைமை கிட்டத்தட்ட அவ்வளவுதான் என்று சென்ற தேர்தலின் தோல்வியின்போது பேசப்பட்டது.
ஆனால், தடுமாறும் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் ஊட்டியதோடல்லாமல் அவர் தனது தெளிவான எதிர்ப் பிரசாரங்களின்மூலம் ஒரு செயல்திட்டத்தையும் முன்வைத்திருக்கிறார்.
2004ல் அவர் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்திருந்த நேரம் அது. அவரது வெற்றி வாய்ப்பு பற்றி அவரிடம் கேட்டேன்.
“சில வெற்றிகள்… சில தோல்விகளை நீங்கள் பெறலாம். ஒருவேளை நான் வெல்லக்கூடும், வெல்லாமலும் இருக்கக்கூடும்,” என்றார்.
தோற்றுவிட்டால் என்ன செய்வீர்கள் என்று அவரைக் கேட்டேன்.
“ஒரு போரில் தோற்றுவிட்டேன் என்பதற்காக எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு என்னால் எதுவும் முடியாது என்று போக முடியுமா? மூட்டைமுடிச்செல்லாம் கட்டி ஒரு தேர்தல் தோல்விக்காக வீட்டுக்குப் போக முடியுமா? இல்லை.. இல்லை.”
அவரது வார்த்தைகளிலேயே சொல்வதென்றால், அவர் எப்போதைக்குமான ஒரு பணியில் இருக்கிறார்.
அதற்குள் அவரது கதையை நாம்
எழுதி முடித்துவிட முடியாது.