சாதாரண விஜயத்துக்கும், அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஆண்டுதோறும் நியூயோர்க்கில் நடக்கும் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர்கள் போவதும், அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பதும் போன்றதல்ல அரசுமுறைப் பயணம். இதற்கு முன்னால் இந்திய பிரதமர்களில் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு மட்டுமே (2009) அந்த கெளரவம் வழங்கப்பட்டது.
ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். சிவப்புக் கம்பள வரவேற்பு, வெள்ளை மாளிகை விருந்திற்கு வரும்போது 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை, அமெரிக்க ஜனாதிபதி பென்சில்வேனியா விருந்தினர் மாளிகையான “பிளேர் ஹெளஸ்’-இல் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதியுன் சந்திப்பு என்பன அதன் சிறப்புகள். இதற்கு முன்னர் பிரதமர் மோடி மேற்கொண்ட 2014, 2016, 2017, 2019 அமெரிக்கப் பயணங்களிலிருந்து இப்போதைய அரசுமுறைப் பயணம் வேறுபடுகிறது, முக்கியத்துவம் பெறுகிறது.
2005-இல் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி நுழைவு அனுமதி மறுத்த அமெரிக்கா, இப்போது சிவப்புக் கம்பள அரசுமுறைப் பயணத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதுடன், இரண்டாவது முறையாக அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பையும் வழங்கியிருப்பது, எந்த அளவுக்குப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்தியாவுக்கும் அமெரிக்கா முக்கியத்துவம் தருகிறது என்பதன் வெளிப்பாடு.
பரஸ்பர அவநம்பிக்கையும், சந்தேகமும் நிறைந்த இந்திய – அமெரிக்க உறவில் மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை பிரதமராக இருந்த பி.வி. நரசிம்ம ராவைத்தான் சாரும்.
அவர் கட்டமைத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளும், தாராளமயமாக்கல் கொள்கைகளும் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை இந்தியாவுக்கு ஈர்த்தன. இந்தியாவை ஒரு முக்கியமான சந்தையாக அமெரிக்கா பார்க்கத் தொடங்கியது.
ஜனாதிபதி பில் கிளிண்டனின் இந்திய விஜயம் (2000), வாஜ்பாய் அரசின் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை சற்று தளர்த்த உதவியது. 2008-இல் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, இந்தியாவும் அமெரிக்காவும் மேற்கொண்ட அணு எரிசக்தி கூட்டுறவு ஒப்பந்தம்தான், இருநாட்டு உறவுக்குமான அடித்தளத்தை உருவாக்கித் தந்தது.
அப்போது டாக்டர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த முயற்சி, இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் முழுமை பெற்றிருக்கிறது எனலாம். இந்த இடைவெளியில் அமெரிக்கா நான்கு ஜனாதிபதிகளை சந்தித்துவிட்டது.
ஜோ பைடன் ஜனாதிபதியான பிறகு, வெள்ளை மாளிகையின் அழைப்பின் பேரில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் மூன்றாவது உலகத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கு முன்னர் பிரான்ஸ், தென்கொரியா ஜனாதிபதிகளுக்கு மட்டுமே அந்த கெளரவம் வழங்கப்பட்டது.
பிரதமர் மோடிக்கு அரசுமுறைப் பயண அழைப்பு வழங்கியது முதல், ஜூன் 22 வெள்ளை மாளிகை விருந்தில் கலந்துகொள்ள விழைபவர்களை சமாளிக்க முடியாமல் திணறுவதாக ஜனாதிபதிர் பைடனே தெரிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு மோடியின் அரசுமுறைப் பயணம் அமெரிக்காவில் கவனம் ஈர்த்திருக்கிறது.
191 பில்லியன் டொலர் (சுமார் ரூ. 15.66 லட்சம் கோடி) இந்திய – அமெரிக்க வர்த்தகத்தின் அளவு என்றால், இரு நாடுகளிலும் நிறுவனங்கள் செய்திருக்கும் முதலீடுகள் தலா 40 பில்லியன் டொலரிலும் (சுமார் ரூ. 3.27 லட்சம் கோடி) அதிகம். அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. அமெரிக்க வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை 49 லட்சம் என்றால், 2 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிக்கிறார்கள்.
இவையெல்லாம் மட்டுமல்ல, இந்தியாவுடனான நட்புறவை மேம்படுத்த அமெரிக்கா விரும்புவதற்கான காரணம், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு இந்தியாவின் நட்புறவு அவசியம். இந்தியாவை அகற்றி நிறுத்திவிட்டு எந்தவொரு சர்வதேச பிரச்னையையும் உலகம் எதிர்கொள்ள முடியாது என்பதை அமெரிக்க நிர்வாகம் புரிந்து கொண்டிருக்கிறது.
சீனாவும் ரஷியாவும் கைகோக்கும் நிலையில், ஜனநாயக நாடான இந்தியாவும் அமெரிக்காவும் பழைய மனநிலையிலிருந்து வெளியே வந்து இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 2020 கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலின்போது, அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவியும், ராணுவப் பின்புலமும் உறுதிப்படுத்தப்பட்டதால்தான் சீனாவைத் துணிவுடன் நம்மால் எதிர்கொள்ள முடிந்தது. சீனாவுடன் மோதல் ஏற்பட்டால், ரஷியா நடுநிலை வகிக்குமே தவிர, உதவ முன்வராது. அதனால், அமெரிக்க நட்புறவு என்பது இந்தியாவுக்கு தவிர்க்க முடியாததாகிறது.
2008-இல் டாக்டர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டிய இந்திய – அமெரிக்க உறவுக்கான இருவழிப் பாதையை, 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது அரசுமுறைப் பயணத்தின் மூலம் திறந்து வைக்கிறார்!
அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, ஆரம்பம் முதல் நிறைவு வரை எம்.பி.க்களின் கைத்தட்டல்களால் அமெரிக்க பாராளுமன்றம் அதிர்ந்தது.
15 முறை எழுந்து நின்று பிரதமர் மோடியை பாராட்டி எம்.பி.க்கள் கைதட்டினர். 79 முறை இருக்கையில் அமர்ந்தவாறே கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
ஆளும் ஜனநாயக கட்சி எம்.பி.யான பிரமிளா ஜெயபால் பிரதமர் மோடியை மிக தீவிரமாக விமர்சித்து வருகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர் உட்பட 75 எம்.பி.க்கள் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் அண்மையில் ஒரு கடிதம் அளித்தனர். அதில் “இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இதுகுறித்து இந்திய பிரதமரிடம் எடுத்துரைக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பாராளுமன்றத்தில் பேசியபோது, பிரமிளா ஜெயபால் உட்பட அவரது அணியை சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சுருக்கமாக சொல்வதென்றால் இதுவரை இந்தியாவில் வீசிய மோடி அலை கரை கடந்து அமெரிக்க பாராளுமன்றத்தில் சுனாமி பேரலையாக சுழன்றடித்தது.
சீனா மீது குற்றச்சாட்டு: பிரதமர் மோடி தனது உரையின்போது, இந்திய, பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல்களை, அந்த நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்தார். இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி உதவி என்ற பெயரில் அந்த நாடுகளை சீனா கடனில் மூழ்கடிப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதை அந்த நாட்டின் பெயரை குறிப்பிடாமல் அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி பேசி முடித்த பிறகு அமெரிக்க எம்.பி.க்கள் அவரை சூழ்ந்து ஆட்டோகிராப் பெற்றனர்.
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில், தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு அடுத்து அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் 2-வது முறை பேசிய உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
சர்ச்சைக்குரிய 3,500 கிலோமீட்டர் நீளமுள்ள இமயமலை எல்லை தொடர்பாக இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே பதட்டமான எல்லை மோதல் நான்காவது ஆண்டை எட்டியுள்ள நிலையில் மோடியின் விஜயம் அமைந்துள்ளது.
சீனாவிற்கு எதிரான அதன் அனைத்துத் தரப்பு இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாயத் தாக்குதலுக்கு இந்தியாவை இன்னும் இறுக்கமாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சர்ச்சையைத் தூண்டுவதற்கு வாஷிங்டன் இந்தக்காலம் முழுவதும் பாடுபட்டள்ளது.
மோடி அரசாங்கம், இந்திய ஆளும் வர்க்கத்தின் பெரும்பாலும் ஒருமித்த ஆதரவுடன், பெய்ஜிங்கிற்கு எதிராக மக்கள் விரோதத்தை தூண்டிவிடவும், அமெரிக்காவுடனான இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர இராணுவ-பாதுகாப்பு உறவுகளின் பரந்த விரிவாக்கத்தை நியாயப்படுத்தவும் எல்லை மோதலை பயன்படுத்தியது மற்றும் இவ்வாறாகவே அதன் முக்கிய ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாடன் அதன் உறவும் இருக்கிறது.
படைப்பிரிவுகளின் கமாண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டம் உட்பட உயர்மட்ட இராஜதந்திர ஈடுபாடுகளுக்கு இடையே கடந்த மூன்று வருடங்களாக 18 சுற்றுகள் விரிவாக்கப் பேச்சுக்கள் நடந்த போதிலும், இரு தரப்பும் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள், டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை உலகின் சில வாழ முடியாத தரிசு நிலப்பகுதியில் எதிர் எதிரே முன்னோக்கி நிறுத்தியுள்ளன.
எல்லை மோதல் இரண்டு நாடுகளுக்குமே அச்சம் தருகின்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற நிலையில் மற்றும் வாஷிங்டனின் பெருகிய ஈடுபாடு வளர்ச்சி கண்டுள்ள நிலையில் அமெரிக்கா உளவுத்துறை வழங்கிய ‘நிகழ்நேர’ உதவியுடன் கடந்த டிசம்பரில் சீனத் துருப்பு ஊடுருவலை முறியடித்ததாக இந்தியா பெருமையாகக் கூறியுள்ளது.
தற்போதைய மோதல் மே 2020 இல் தொடங்கியது, மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) மற்றும் இந்திய துருப்புக்கள் மேற்கு இமயமலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சின் மற்றும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லடாக் இடையே உள்ள நிச்சயமான கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஏசி) இடம் தொடர்பாக பல இடங்களில் மோதிக்கொண்டன. அடுத்த மாதம், 1962 சீன-இந்திய எல்லைப் போருக்குப் பிறகு ஆசியாவின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு இடையே மிகத் தீவிரமான மோதலாக அது சுழன்றது. கட்டம் கட்டமாக மோதலை தவிர்க்கும் நடவடிக்கையாக கருதப்பட்டதை செயல்படுத்தும் போது, இந்திய மற்றும் சீன படையினர் 2020 ஜூன் 15 இரவு, கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு குறுகிய மேட்டில் பல மணி நேரம் பாறைகள் மற்றும் தடிகளுடன் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். எதிரெதிர் மோதலில் குறைந்த பட்சம் 20 இந்திய மற்றும் 4 சீன படையினர் கொல்லப்பட்டனர்.
இரண்டரை மாதங்களுக்குப் பிறகு, பல ஆயிரம் இந்தியத் துருப்புக்கள் அருகிலுள்ள பல கல்வான் பள்ளத்தாக்கு மலையுச்சிகளை ஒரு ஆபத்தான இரவுநேர சூழ்ச்சியின் மூலம் எதிர்ப்பின்றி கைப்பற்றினர், இதை பின்னர் இந்திய அதிகாரிகளே ஒப்புக்கொண்டனர், அதாவது இந்த நடவடிக்கை சீன துருப்புக்களுடன் நேரடி மோதலுக்கும் முழு அளவிலான போருக்கும் கூட வழிவகுத்திருக்க கூடும் என்றனர். அதன்பிறகு, செப்டம்பர் 2020 இல், 1975க்குப் பிறகு முதன்முறையாக LAC யில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளில், சர்ச்சைக்குரிய எல்லையானது, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் வேகமாக இராணுவ உள்கட்டமைப்பு-கட்டுமான நடவடிக்கைகளை முன்னெடுத்து செய்ததன் காரணமாக பெரிதும் பலப்படுத்தப்பட்டுள்ளது. புதிய அரண்கள், விமான ஓடுபாதைகள், சாலைகள், சுரங்கப்பாதைகள், பாலங்கள் மற்றும் இரயில் இணைப்புகள் துருப்புக்கள் மற்றும் பொருட்களை விரைவாக நகர்த்துவதற்காக தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மற்றும் புதிய போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை வாங்குவதற்காக மற்றும் இந்தியாவின் அணுசக்தி முக்கோண விரிவாக்கம் டிரயட் ஆகியவற்றுக்காக கடந்த பட்ஜெட்டில் ராணுவ செலவினத்தை 13 சதவீதம் அதிகரித்து 5.94 டிரில்லியன் ரூபாயாக ($72.6 பில்லியன்) உயர்த்தியது.
அதிகரித்த இராணுவ – மூலாயாய ஒத்துழைப்பு பைடனுடன் மோடி நடத்தவிருக்கும் பேச்சுக்களின் மையமாக இருக்கும், அதே போல் சீனாவிற்கு போட்டியாக பூகோளரீதியான உற்பத்தி-சங்கிலி மையமாக இந்தியாவை வளர்ப்பதற்கு தடையாக இருப்பதாக வாஷிங்டன் மற்றும் வால் ஸ்ட்ரீட் கருதுவதை அகற்றுவதும் இருக்கும்.
மோடியின் வருகைக்கு தயாராக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் இந்த மாதம் புது தில்லிக்கு தனித்தனியாக விஜயம் செய்தனர்.
வாஷிங்டன் நீண்ட காலமாக இந்தியாவிற்கான ஆயுத விற்பனையை அதிகரிக்க பாடுபட்டு வருகிறது, அது அமெரிக்க ஆயுதத் தொழில் துறைக்கு ஊக்கம் அளிப்பது மற்றும் இந்தியாவை அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை சார்ந்திருக்க செய்யும் இரட்டை நோக்கத்தை கொண்டதாகும். ரஷ்யா மீது அமெரிக்க-நேட்டோ தூண்டிய போர் வெடித்தவுடன், வாஷிங்டன் புது டெல்லிக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான நீண்டகால மூலோபாய உறவுகளை குறைத்து இறுதியில் துண்டிப்பதற்கான குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்க ஆயுதக் கொள்வனவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான தனது தயார்நிலையைக் காட்டும் ஆர்வத்துடன், இந்திய அரசாங்கம் கடந்த வாரம் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான செலவில் 31 அமெரிக்கத் தயாரிப்பான MQ-9B ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்தது.
நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களின் கீழ், சீனாவின் ‘எழுச்சியை’ எதிர்ப்பதற்கும் முறியடிப்பதற்கும் அதன் திட்டங்களில் ஒரு முக்கிய அங்கமாக இந்தியாவுடன் ஒரு இராணுவ-மூலோபாய கூட்டணியை பின்பற்றி வருகிறது. ஆனால், சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் விரிவடையும் செல்வாக்கினால் வாஷிங்டன் மேலும் குழப்பமடைந்து, கிளர்ச்சியடைந்தது, அது பெய்ஜிங்கை அதன் முக்கிய மூலோபாய எதிரியாக பகிரங்கமாக அடையாளப்படுத்துவதற்கு வழிவகுத்தது, இது மேலும் பொறுப்பற்றதாக வளர்ந்துள்ளது.
2017ல் டோக்லாம் பீடபூமியில் (சீனா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் பிரதேசம்) சீன மற்றும் இந்திய துருப்புக்கள் பத்து வாரங்கள் நேருக்கு நேர் மோதியபோது எடுத்த நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறாக, வாஷிங்டன் தற்போதைய இந்திய- சீன மோதல் குறித்து ஆரம்பத்திலேயே நடுநிலைமையைக் கைவிட்டுள்ளது. இந்திய எல்லை மோதலில். அது சீனாவை ‘ஆக்கிரமிப்பாளன்’ என்று முத்திரை குத்துவதுடன், தென் சீனக் கடலில் சீனாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே அது தூண்டிவிட்டு வரும் மோதல்களுடன், நடந்து கொண்டிருக்கும் இமாலய எல்லைப் பிரச்சனையை இணைத்துள்ளது.
சீனாவின் இராணுவ ஊடுருவலை முறியடிக்கும் வகையில் ‘செயல்படக்கூடிய’ நிகழ்நேர செயற்கைக்கோள் நுண்ணறிவை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கியதாகக் கூறப்படும் சில வாரங்களுக்கு முன்பு, இந்திய மற்றும் அமெரிக்க துருப்புக்கள் சர்ச்சைக்குரிய சீன-இந்திய எல்லையில் இருந்து 100 கிலோமீட்டருக்கும் குறைவான இடத்தில் மலைப் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.
அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தான் மீதான இந்திய ‘மின்னல் தாக்குதல்களுக்கு’ அமெரிக்கா பச்சைக் கொடி காட்டியதுடன், இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் மோடி அரசாங்கத்தின் அரசியலமைப்பு சதியை ஆதரித்துள்ளது, இது இந்தியாவின் தனி முஸ்லீம் பெரும்பான்மை மற்றும் சட்டப்பூர்வமான அரை தன்னாட்சி மாநிலத்தை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசமாக மாற்றியது.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்துடன் ‘பூகோள ரீதியான மூலோபாய கூட்டு’ உடன்படிக்கை குறித்து குறைந்தபட்சம் 2006ல் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, இந்திய முதலாளித்துவம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான உறவுகளை அதன் வெளியுறவுக் கொள்கை மற்றும் புவிசார் அரசியல் மூலோபாயத்தின் அடித்தளமாக மாற்றியது..
எவ்வாறாயினும், 2014 இல் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான தீவிர வலதுசாரி பாஜக அரசாங்கத்தின் கீழ் மற்றும் குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியா அதன் ஒருங்கிணைப்பை வியத்தகு முறையில் துரிதப்படுத்தியுள்ளது, மேலும் வாஷிங்டனின் சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகளில் இந்தியாவை ஒரு உண்மையான முன்னிலை அரசாக மாற்றியுள்ளது.