2009 பெப்ரவரி 3 இல் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கத்தை லண்டனில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து சந்திதேன். சிவாஜிலிங்கம் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த யுத்தத்தின் போது மேற்குநாடுகளில் தான் இருந்தனர். இச்சந்திப்பை முன்னாள் ரெலோ உறுப்பினர் த சோதிலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார். எம் கெ சிவாஜிலிங்கம் பிரபாகரனின் ஊரவர். உறவினர். பிரபாகரனை தன்னுடைய பதின்ம வயதில் காப்பாற்றியவர். பிரபாகரனுடைய பெற்றோருக்கும் இறுதியில் கூட இருந்து செய்ய வேண்டியனவற்றைச் செய்தவர். விடுதலைப் புலிகள் வேறொரு உலகத்தில் வாழ்ந்து வந்ததாகக் கூறியவர். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்துவிட்டு சரணடைவதே தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உகந்தது என மே 17 2009 இல் புலிகள் சரணடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரேயே பெப்ரவரி 3, 2009 இல் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார்.
இலங்கையில் அறியப்பட்ட மிக முக்கியமான ஊடகவியலாளரான தராக்கி என்று அறியப்பட்ட தர்மரட்ணம் சிவராம் தமிழ்நெற், தமிழ் கார்டியன் ஆகிய ஊடகங்களில் இணைந்து பணியாற்றியவர். இவர் படுகொலை செய்யப்பட்டது ஏப்ரல் 29, 2005. அப்போது ஜனாதிபதியாக சந்திரிகாகுமாரதுங்க இருந்தார். பிரதம மந்திரியாக மகிந்த ராஜபக்ச இருந்தார். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது நவம்பர் 19, 2005இல். ஆனால் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்னரேயே அதாவது தராக்கி சிவராம் கொல்லப்படுவதற்கு முன்னரே அவர் ‘Project Beacon’ பற்றித் தனக்கு நெருக்கமானவர்கள் சிலருடன் பேசியுள்ளார். இந்தப் புரஜக்ற் பீக்கன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டுப்படுத்துவதற்கான திட்டம் இணைத் தலைமை நாடுகளான: அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகிய நாடுகளால் வரையப்பட்டிருந்தது. நோர்வே பேச்சுவாரத்தை பற்றிய விபரங்களை இந்தியாவுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தி வந்ததால், இந்தியாவும் இந்த புரஜக்ற் பீக்கன் பற்றி நன்கு அறிந்தே இருந்தது.
தராக்கி சிவராமின் நெருங்கிய உறவினரொருவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்தும் ஈடுபடுத்துவதற்கு அழுத்தம் வழங்குவதற்கு இத்திட்டம் வரையப்பட்டது என்றும் அவர்கள் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகினால் அவர்கள் ஓரம்கட்டப்படவார்கள் என்ற எச்சரிக்கையை இத்திட்டம் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டிருந்தது என்றும் தெரிவித்தார்.
ஆனால் புலிகள் இந்த எச்சரிக்கையை பெரிதாகக் கருதவில்லை. ரணிலின் சதி என்றே கருதினர். ஏற்கனவே கருணாவை தங்களில் இருந்து பிரித்து இயக்கத்தை பலவீனப்படுத்தியதற்காக ரணிலுக்கு பாடம் புகட்ட புலிகள் நினைத்தனர். ‘மொக்கு சிங்களவன்’ என்று எண்ணும் புலிகள் ரணில் ‘நரித்தனமாகப் பேச்சுவாரத்தைக்கு அழைத்து இழுத்தடிப்பான்’ அதனால் மஹிந்தவை கொண்டுவந்தால் அடித்து நொருக்கி தாங்கள் நினைத்ததை சாதிக்கலாம் என்று கருதினர். அதனால் 2005இல் இடம்பெற்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க விரும்பிய வடக்கு கிழக்கு தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்த புலிகள், மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினர். அதற்காக 200 கோடி ரூபாய் பணத்தை ராஜபக்சக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்திய தலைவர் பிரபாகரனின் சாணக்கியம்.
பதவிக்கு வந்த ராஜபக்சக்கள் சில வாரங்களிலேயே டிசம்பர் 2005இல் இணைத் தலைமைநாடுகளின் ‘Project Beacon’ னை திருப்திப்படுத்தும் வகையிலான ‘Operation Beacon’ இராணுவத் திட்டத்தை இணைத்தலைமை நாடுகளிடம் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வைத்து கையளித்தனர். புலிகள் பேச்சு வார்த்தைகளில் ஆர்வம் காட்டாததால் ஒப்பிரேசன் பீக்கன் இராணுவத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவும் இணைத் தலைமை நாடுகளும் பச்சைக்கொடி காட்டினர். கண்துடைப்பிற்காக அல்லது எதிர்காலத்தில் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, கனரக ஆயுதங்கள் பயன்படுத்தக் கூடாது, பொது மக்களின் இழப்புகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசை இணைத் தலைமை நாடுகளும் இந்தியாவும் கேட்டுக்கொண்டன. தங்களுக்கு தேவையான வளங்களையும் இலங்கை அரசு கேட்டிருந்தது. இராணுவ தளபாடங்கள் மற்றும் தகவல் பரிமாற்றம் என்பன இலங்கைக்கு தாராளமாக வழங்கப்பட்டது.
புலிகளுக்கு மிகத் தெளிவாக அறிவிக்கப்பட்டு விரிக்கப்பட்ட வலையில் புலிகள் விழ ஆரம்பித்தனர். பேச்சுவார்த்தைகளில் இருந்து ஓரம்கட்டப்பட்ட அன்ரன் பாலசிங்கமும் ஒப்பிரேசன் பீக்கன் பற்றி அறிந்திருந்தார். தனிப்பட்ட சிலருடன் தலைவரின் எதிர்காலம் குறித்து வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.
யூலை 21 2006இல் புலிகள் மாவிலாற்றின் சுளியை மூடி அப்பகுதிச் சிங்கள விவசாயிகளுக்கான நீரோட்டத்தை தடுத்தனர். அரசு மாவிலாற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மட்டுமல்ல புலிகளையே துடைத்து அழிப்பதற்கான ‘ஒப்பிரேசன் பிக்கன்’ திட்டத்தை அடுத்த 5 நாட்களில் 2006 யூலை 26இல் மாவிலாற்றில் ஆரம்பித்தது. இரண்டு நாட்களில் மாவிலாற்றில் இராணுவம் நிலைகொண்டது. ஓகஸ்ட் 11இல் மாவிலாறு நீர் வழமைபோல் திறந்துவிடப்பட்டது.
30 ஏப்ரல் 2007 வரையான ஓராண்டுக் காலத்திற்குள் ஒப்பிரேசன் பீ(B)க்கன் திட்டத்தின்படி திருகோணமலையின் சம்பூர் முதல் பனிச்சங்கேணி வரையான கடற் பிரதேசத்தையும் நிலப்பரப்பையும் பாரிய அளவிலான உயிர்ச் சேதங்கள் இல்லாமல் இலங்கைப் படைகள் கைப்பற்றினர். இந்த ஒப்பிரேசன் பீ(B)க்கன் திட்டத்தின்படி மே 1, 2007 முதல் ஏப்பிரல் 30, 2008 ற்குள் மன்னார் முதல் பூனெரியன் வரையான கடற்பரப்பையும் அதனோடு இணைந்த நிலப்பரப்பையும் கைப்பற்றுவது, அடுத்து மே 1, 2008 முதல் ஏப்ரல் 30, 2009 வரையான காலப்பகுதிக்குள் ஆணையிறவு முதல் கொக்குத் தொடுவாய் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பரப்பையும் கைப்பற்றுவது என்பதும் திட்டம். மேலும் அம்பாறை, சிலாவத்துறை, பருத்தித்துறை ஆகியவற்றினது கட்டுப்பாட்டையும் உறுதி செய்வதன் மூலம் புலிகளுக்கு இராணுவ தளபாடங்கள் வந்தடைவதைத் தடுத்து நிறுத்துவதுடன், அவர்களை முள்ளிவாய்க்காலில் முடக்குவதே அத்திட்டமாக இருந்தது. அதன் பின்னரான மே 1, 2009 முதல் ஏப்ரல் 30, 2011 வரையான இரண்டு ஆண்டு காலப்பகுதி புலிகளைக் களையெடுப்பதற்கான காலப்பகுதியாக வகுக்கப்பட்டது. அப்போது மஹிந்த ராஜபக்ச தனது இரண்டாவது முறையும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுவிடுவார் என்பதே கணிப்பு.
இத்திட்டம் தொடர்பில் புலிகள் புலனாய்வு எல்லாம் செய்து எதனையும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கவில்லை. ஓப்பிரேசன் பிக்கன் திட்டம் மஹித் ராஜபக்ச பதவிக்கு வருவதற்கு முன்னரேயே தமிழ்செல்வனிடம் கையளிக்கப்பட்டிருந்து. ஆனாலும் இத்திட்டத்தை முறியடிப்பதற்கு புலிகளால் எவ்வித எதிர்வினையும் ஆற்ற முடியவில்லை. இராணுவத்தை சமாளிப்பதைத் தவிர அவர்களால் திட்டமிட்ட தாக்குதல்களைத் தொடர முடியவில்லை. புலிகளின் புலானாய்வுப் பிரிவினர் அறிந்திராத பாதைகளினூடாக சந்து பொந்துகளால் எல்லாம் அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். இந்த யுத்தம் இத்தனையாம் திகதி முடிவுக்கு வரவுள்ளது என்று தேசம்நெற் செய்தியை வெளியிடும் அளவுக்கு இந்த ஒப்பிரேசன் பீக்கன் இராணுவத்திட்டம் இருந்தது. சிவராமினால் உருவாக்கப்பட்ட ரமில்எடிட்டேர்ஸ்.கொம் (tamileditors.com) என்ற இணையத்தளத்தில் டிசம்பர் 24, 2007 இது பற்றிய கட்டுரையொன்றும் எழுதப்பட்டு ஏதோ இராணுவம் குறிப்பிட்டபடி முன்னேறவில்லையென அக்கட்டுரையில் சடையப்பட்டு இருந்தது.
வவுனியாவுக்கு திருப்பி அடித்திருப்பம் என்பதெல்லாம் வெறும் கற்பனை. எந்தவொரு சர்வதேச நாடும் பேச்சுவாரத்தை பற்றியே பேசவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் ஆயதங்களை ஒப்படைத்து சரணடையுமாறே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒரே குரலில் ஒலித்தன. அமெரிக்காவும் இந்தியாவும் புலிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் செல்வதை பல வழிகளிலும் தடுத்தன. புலம்பெயர்ந்த சர்வதேச அரசியல் புரியாத ஆர்வக்கோளாறான அமெரிக்காவில் உள்ள பேர்ள் (PEARL) போன்ற புலிகளின் ஆதரவாளர்கள் தான் சில முட்டாள்தனமான பிரம்மைகளை உருவாக்கினர்.
தமிழ்டிப்ளோமற் (TamilDiplomat) இணையத்தில் தராக்கி சிவராம் பற்றிய நினைவுக் கட்டுரையை அண்மையில் எழுதிய பரணி கிருஸ்ணராஜனி, புரஜக்ற் பிக்கன் பற்றி புலிகள் அறிந்திருந்தும் ஏன் அந்த வலைக்குள் விழாமல் இருப்பதற்கான மாற்றுவழி பற்றி அவர்கள் முயற்சிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கான பதிலை பரணி கிருஸ்ணராஜினியால் எழுத முடியவில்லை.
புலிகள் மற்றையவர்களின் பலவீனங்களை நன்கு அறிந்திருந்த அளவுக்கு தங்களுடைய பலவீனங்கள் பற்றி எந்த அறிவையும் பெற்றிருக்கவில்லை. தங்களது எல்லைகளுக்கு அப்பால் சர்வதேச அரசியல் பற்றிய அறிவு இருக்கவில்லை. முகநூலுக்கு வரும் லைக்குகளையும் கொமன்ற் களையும் பார்த்து இன்புறுவது போல் புலம்பெயர்ந்து வாழும் விசிலடிச்சான் குஞ்சுகளின் சூரியத்தேவன், தேசியத் தலைவர், அடங்காத் தமிழன் போன்ற விம்பங்கள் ‘பனை மரத்தில வெளவாலா எங்களுக்கே சவாலா’, ‘உள்ளுக்கு விட்டு அடிப்போம்’ போன்ற புலித்தேசிய அல்வா ஆய்வாளர்களின் பிதற்றல்கள் எல்லாமே மே 16, 2009 வரை புலிகளை கனவுப் போதையில் வைத்திருந்தது. வன்னியில் இருந்த புலிகள் குண்டுச் சத்தத்தில் கனவுப் போதையில் இருந்து விழித்துக் கொண்டபோது அது காலம் கடந்ததாகி விட்டது. புலம்பெயர் தேசத்தில் குண்டு விழாததால் இன்னமும் பலர் கனவுப் போதையில் இருந்து எழவில்லை. அவர்கள் ஒரு பரலல் யூனிவேர்ஸில் (parellel universe) தான் இன்னமும் வாழ்கின்றனர். அவர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் த கணேசலிங்கம் போன்ற அரசியல் முட்டாள்கள் பொங்கு தமிழ் நடத்தி தங்களில் தேசியம் பொங்கி வருவதாகக் காட்டிக்கொண்டு முத்தையா யோகேஸ்வரி போன்ற சிறுமிகளை வன்புனர்வதிலும் அதனை வெளியே வந்துவிடாமல் மறைப்பதிலுமே படுபிசியாக இருந்தனர். ‘புரஜக்ற் செக்ஸில்’ (project sex) ‘ஒப்பிரேசன் இன்ரகோர்ஸ்’ (operation intercourse) இல் பிஸியாக இருந்தவருக்கு புரஜக்ற் பீக்கன் பற்றியோ ஒப்பிரேசன் பீக்கன் பற்றியோ எதுவும் தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை.
ஏப்ரல் 30, 2009 இல் தான் இந்த யுத்தம் முடிவடைய வேண்டும் என ராஜபக்சக்கள் கணிப்பிட்டதற்கு முக்கிய காரணம் மே 16இல் இந்திய தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக. இந்த யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் வரை பாரிய உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டே வந்தது. 2006 யூலை முதல் 2009 பெப்ரவரி வரை 3000 பேர்வரை கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால் யுத்தம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க இழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏப்ரல் 5 இல் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தை இராணுவம் முற்றுகையிட்டபோது, அது உடைக்கப்பட்டு பிரபாகரன் காப்பாற்றப்பட்டார். புலிகளின் பெரும் தளபதிகள் இதன்போதே கொல்லப்பட்டனர். இப்போது தான் கனவுலகத்தில் பொங்குதமிழ் நடத்தி யுத்த முழக்கம் முழங்கிய புலம்பெயர் தமிழர்கள் சிலர் விழித்துக்கொண்டனர்.
இந்த யுத்தத்தை என்ன விலைகொடுத்தும் எப்படியாவது மே 16 வரை இழுத்துச் செல்ல வேண்டும் என்று புலிகள் பெருமுயற்சி எடுத்தனர். அதனால் தான் பாரிய அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டது. யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புமே தங்களது வெற்றியை நிலைநாட்டுவதிலேயே குறியாக இருந்தனரேயல்லாமல், மக்கள் பற்றி எவ்வித கரிசனையும் கொண்டிருக்கவில்லை. யுத்தத்தின் சகல விதிமுறைகளும் தூக்கியெறியப்பட்டது. இறுதிச் சில வாரங்கள் யுத்தத்தின் எவ்வித விதிகளும் கடைப்பிடிக்கப்படாமலேயே யுத்தம் நடைபெற்றது.
இந்திய தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் வெற்றியும் அமையப் பெற்றால், தாங்கள் காப்பாற்றப்படுவோம் எனப் புலிகள் மலையாக நம்பியிருந்தனர். புலிகள் தங்கள் ஆய்வுக் கதையாடல்களிலும், மக்கள் வகைதொகையாகக் கொல்லப்பட்டால் சர்வதேசம் தலையிடும் என்று ‘கொசோவோ’ உதாரணத்தையும் வைத்துக்கொண்டு ரீல்கள் விட்டு அங்கு மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாகினர். கலாநிதி ரட்டணம் நித்தியானந்தன் போன்ற அரசியல் முட்டாள்கள் வணங்கா மண் அனுப்புகிறோம் என்று தங்களுக்கு தமிழ் தேசியச் சாயம் பூசி கூத்தாடினர். இப்போது பாலியல் துஸ்பிரயோகம் செய்தவருக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளார்.
மே 16, 2009இல் ‘மம்மிக்காக காத்திருக்கும் தம்பி’ என்ற கட்டுரையை தேசம்நெற் வெளியிட்டது. அதே தினம் ‘இந்திய தேர்தல் முடிவு விடுதலைப் புலிகளின் கருப்புச் சனி’ என்று மற்றையொரு கட்டுரை எழுதினேன். ஆம் புலிகள் எதிர்பார்த்தது நிகழவில்லை. தமிழகத்தில் கருணாநிதியும் டெல்லியில் காங்கிரஸ்ம் ஆட்சியமைத்தது. உண்மையில் புலிகள் எதிர்பார்த்தது நடந்திருந்தாலும் அவர்களை யாராலும் காப்பாற்ற முடிந்திராது என்ற உண்மையை உணரும் அரசியல் அறிவை அவர்கள் கொண்டிருக்கவில்லை. அவர்களை உசுப்பிவிட்ட புலத்து தமிழர்களுக்கும் அது பற்றிய தெளிவு இருக்கவில்லை.
வன்னியின் மொத்த நிலப்பரப்பு 7,859 சதுர கிலோ மீற்றர். முல்லைத்தீவின் மொத்த நிலப்பரப்பு 2,817 சதுர கிலோ மீற்றர். ஆனால் மார்ச் மாதம் 3ம் திகதி புலிகள் வெறும் 14 சதுர கிலோ மீற்றர் எல்லைக்குள் குறுக்கப்பட்டு விட்டனர். அப்போது அங்கு 2,00,000 பேர் இருந்தனர். மே 16, 2009 இல் புலிகளுடைய நிலப்பரப்பு வெறும் 5 சதுர கிலோ மீற்றர்களாகக் குறுக்கப்பட்டு விட்டது. மறுநாள் மே 17இல் வெளிவந்த சூசையின் தொலைபேசி அழைப்பில் “போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது” எனத் தெரிவித்து இருந்தார்.
இச்சண்டையில் சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகியோர் கொல்லப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகின்றது. தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் இறுதிக் கட்டத்தில் பொட்டம்மான் தன்னுடைய குடும்பத்தோடு. தற்கொலை செய்துகொண்டு தன்னுடைய உடலும் யாருக்கும் கிடைக்காதவாறு பார்த்துக்கொண்டார் என பொட்டம்மானோடு உரையாடியதாகக் கூறும் முன்னாள் போராளி விபரிக்கின்றார்.
எண்பதுக்களின் பிற்பகுதியில் இந்திய இராணுவ காலகட்டத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்களுக்கு அதனைத் தெரிவித்துள்ளார். அவர் போகின்ற இடங்களுக்கு பெற்றோல் கானும் (petrol can)கொண்டுசெல்வது வழமை என இந்திய இராணுவ காலகட்டங்களில் புலிகளின் உறுப்பினராக இருந்த அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஆனால் இத்தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.
இப்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருப்பவர்களின் எண்ணிக்கை 165,000 எனப் புலிகள் அறிவித்தனர். இவர்கள் பெரும்பாலும் புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் அவர்களின் குடும்பங்களுமே என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. மணித்தியாலங்கள் கடந்து செல்ல 5 சதுர கிலோ மீற்றர் 500 சதுர மீற்றரானது. இராணுவம் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்ட படையினரை மே 17 அதிகாலை மீட்டெடுத்தது. மே 18 அதிகாலை 250 சதுர மீற்றராகவும் ஆனது.
மே 17 இரவு – மே 18 அதிகாலையில் செல்வராஜா பத்மநாதன் (கெ பி), ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியான விஜய் நம்பியாருடன் தொலைபேசியில் கதைத்து பிரபாகரனை எப்படியாவது விடுவிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு முன்னரே மே 15 2009 வெள்ளிக் கிழமை இரவே புலிகள் கெபி க்கு தாங்கள் சரணடையத் தயார் என்ற செய்தியை அனுப்பியதாகவும் தான் வெளிநாட்டு ராஜதந்திரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்தததாகவும் கெபி தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். அன்று வெள்ளிக் கிழமை மாலையாகிவிட்ட நிலையில் ராஜதந்திரிகள் அலுவலகங்களை மூடிக்கொண்டு வீட்டுக்கு போய்விட்டதாகவும் தன்னால் அமெரிக்க ஐரோப்பிய ராஜதந்திரிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கெபி தெரிவித்தார். அதேசமயம் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ புலித்தேவன் ஆகியோர் தொடர்பை மேற்கொள்ள முடிந்த ஊடகவியலாளர்கள் பிரான்ஸிஸ் ஹரிசன், மேரி கொலின் மற்றும் சர்வதேச நாடுகளில் உள்ள ராஜதந்திரிகளுக்கு தாங்கள் சரணடைய உள்ளதைத் தெரியப்படுத்தி உள்ளனர். இந்த அழைப்புகள் மே 18 அதிகாலை 5:45 மணி வரை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது கொழும்பில் பசில் ராஜபக்சவுக்கும் தெரியப்படுத்தப்பட்டு இருந்தது.
தேசம்நெற் க்கு அன்று கிடைத்த தகவல்களின் படி புலிகள் தரப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் அனைத்தையுமே அரசதரப்பு ஏற்றுக்கொண்டதாக புலிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த வேண்டுகோள்களை உறுதிப்படுத்துவதற்கு எவ்வித பொறிமுறையும் அங்கிருக்கவில்லை. யுத்த களத்தில் இவ்வாறான சரணடைவுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மாதம் எடுக்கும். ஆனால் புலிகள் கையறு நிலையில் சரணடையும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எஞ்சியிருந்தவர்கள் அனைவருமே வெள்ளைக்கொடியோடு சரணடைந்தனர்.
மே 17 காலையில் 250 சதுர மீற்றர் பரப்பளவிற்குள் இருந்து புலிகள் வெள்ளைக் கொடியோடு சரணடையும் வேளை ஏனைய இடங்களில் மக்களோடு மக்களாக வெளியேறுகின்ற போது பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவ்வாறு இல்லாமல் மக்களோடு மக்களாக வெளியேறிய புலிகளின் முக்கிய தலைவர்களையும் முகாம்களில் இருந்து இராணுவம் அழைத்துச் சென்றது.
இவர்கள் யாவரும் உலகின் அனைத்து யுத்த விதிகளையும் மீறி படுகொலை செய்யப்பட்டனர். அந்த மே 17 அன்று வெள்ளைக் கொடியோடு மக்களோடு அல்லாமல் சரணடைந்தவர்களில் யாரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை. “அன்று தலைவருக்கு பக்கத்தில் நின்றேன். தப்பி வந்தேன்” என்று இதுவரை யாரும் சொல்லவில்லை. அவர்கள் அனைவருமே தலையில் முகத்தில் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். இதுவரையான இந்த விபரிப்பை கதையாடலை தமிழுணர்வாளர்களோ புலித் தேசியவாதிகளோ பெரிதாக யாரும் மறுக்கப்போவதில்லை. இலங்கை இராணுவம் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர்கள் யாவரும் யுத்தத்தின் போதே கொல்லப்பட்டனர் என்ற விபரிப்பை கதையாடலை மட்டுமே இலங்கை இராணுவம் திரும்பத் திரும்ச்சொல்வார்கள்.
அதன் பின் துடைத்துத் துப்பரவு செய்யும் ஒப்பிரேசன், கொமான்டர் ரஞ்சித் பந்துல கொடிப்பிலி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. மேஜர் ஜெனரல் ஜெயத் டயஸ், சவிந்திர டி சில்வா போன்ற இராணுவ அதிகாரிகள் இறுதிநேர ஒப்பரேசனில் தொடர்பில் இருந்தவர்கள். அதில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மனியின் இலங்கைத் தூதுவராயத்தில் பணியில் நியமிக்கப்பட்டு பின்னர் எழுந்த மனித உரிமைக் குற்றச்சாட்டுகளால் அங்கிருந்து வெளியேற வேண்டியேற்பட்டது.
சரணடைந்தவர்களில் மகளீர் அணித் தலைவி தமிழினி பிடிபட்டு இருக்கும் போது ஆனந்தி சில்வா அவரைக் கண்டு ‘தமிழினி அக்கா’ என்று அழைத்துள்ளார். சீலையோடு தலையை குனிந்தபடி இருந்த தமிழினி குரலைக் கேட்டு தலையை நிமித்தினார். மேஜர் ஆனந்தி சில்வா தமிழை ஒரு தமிழனைப்போல் கதைக்கவும் எழுதவும் தெரிந்தவர். இவர் 2002 புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் ஒரு ஊடகவியலாளராகக் கலந்துகொண்டார். அதன்போது புலிகளுடன் நல்லுறவைப் பேணிய ஆனந்தி சில்வா புலிகளைப் பற்றி செய்தித் தொடர் எழுதப்போகிறேன் என்று அவர்களுடன் உடன்பட்டு வன்னியில் சில மாதங்கள் தங்கியிருந்தார். அதனால் தமிழினியோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அன்று தமிழினி அவருடைய கண்ணில் பட்டதால் உயிர் தப்பி இருந்தார்.
சரணடைந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற விபரிப்பை ஏற்கும் தமிழுணர்வாளர்கள், புலித்தேசியவாதிகள் அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பிரபாகரனும் ஒருவர் என்பதை மிகக்கடுமையாக எதிர்த்து, இலங்கை இராணுவத்தின் கதையாடலை இந்த இடத்தில் ஏற்றுக்கொள்கின்றனர். மே 16 இல் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் பிரபாகரன் மட்டும் தன் மனைவி மகள் கடைசி மகனைப் பிரிந்து ஒழிந்திருந்து சண்டையில் கொல்லப்பட்டார் என்கின்றனர். இன்னுமொரு சிலர் பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுக்கொன்றார் என்கின்றனர்.
இன்னுமொருவர் சொர்ணத்தைச் சுடச்சொல்லி பிரபாகரன் கட்டளையிட சொர்ணம் அவரைச் சுட்டார் என்கின்றனர். ஆனால் அதற்கு முதல் நாளே சொர்ணம் சண்டையில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த உரையாடல்களைச் சொல்பவர்கள் யாரும் தாங்கள் பிரபாகரனுடன் இறுதி நேரத்தில் நின்றதாகவோ தொடர்பில் இருந்ததாகவோ தெரிவிக்கவில்லை. இக்கதைகள் அனைத்தும் தாங்கள் பிரபாகரன் மீது கட்டிய விம்பத்தை தொடர்ந்தும் காப்பாற்றும் ஒரு முயற்சியே.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் புலம்பெயர்ந்த தமிழர்களுடனான உரையாடல்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். அதனை பல இராணுவத் தளபதிகளும் கூறியுள்ளனர். ஆனால் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை வெளியிடவில்லை.
அக்காலங்களில் பல்வேறு தவறான செய்திகள் ஊகங்களாக வெவ்வேறு ஊடகங்களில் வந்தபோதும் தேசம்நெற் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியது. இலங்கையில் அன்று எமது ஊடகவியலாளராக இருந்த காலம்சென்ற பி எம் புன்னியாமீன், யுத்தகளத்தில் நின்ற இராணவத் தளபதியூடாக அதனை உறுதிப்படுத்தி இருந்தார். மே 20 அன்று தேசம்நெற் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்ட செய்தியை ஈழத்தமிழ் ஊடகங்களில் முதன் முதலாக வெளியிட்டது. மறுநாள் 21இல் “இந்தியாவின் மிகப்பெரும் துரோகம்! பிரபா உட்பட புலிகளின் தலைவர்கள், அவர்களின் குடும்பங்கள் சரணடைந்த பின்னரேயே கொல்லப்பட்டனர்!!” என்ற செய்திக்கட்டுரை தேசம்நெற்றில் வெளியானது. பரதெனிய பல்கலைக்கழகத்தில் என்னுடைய நண்பரோடு ஒன்றாகப் பயின்ற இன்னுமொரு இராணுவத் தளபதியும் பிரபாகரனின் குடும்பத்தினர் சரணடைந்ததை உறுதிப்படுத்துகின்றனர். ஆனால் இவர்கள் யாரும் வெளிப்படையாக வந்து இதுதான் நடந்தது என்று சொல்வதற்கு அண்மைய எதிர்காலத்தில் எவ்வித வாய்ப்பும் இல்லை.
பிரபாகரன் பற்றிய எந்தக் கதையாடலை யார் கேட்க விரும்புகின்றனரோ அதற்கமைய இந்தக் கதையாடல்கள் அமையும். உண்மைகள் உறங்குவதில்லை.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி – சுபாஸ் சந்திரபோஸ் விமானவிபத்தில் கொல்லப்பட்டதாகவும் அவருடைய அஸ்தி ஜப்பானில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. அந்த இடத்துக்கு இந்திய அரசு வாடகையும் செலுத்துகின்றது. ஆனால் சுபாஸ் சந்திரபோஸ் ரஷ்யாவில் தலைமறைவாக வாழ்வதை பிரதமர் நேரு அப்போதைய பிரித்தானிய பிரதமர் அட்லிக்கு காட்டிக்கொடுத்து ஸ்ராலினூடாக அவரைக் கைது செய்து தூக்கிலிட்டனர் என்பது சில தசாப்தங்களின் பின் வெளியான உண்மை. உண்மைகள் எப்போதும் கசப்பானவை.
மே 16இல் புலிகளின் கையறுநிலை அப்போது மத்திய கிழக்கில் ஜோர்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. புலிகளின் பிரபாகரனின் சரணடைவு பற்றியும் மஹிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். “நான் பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நாட்டுக்கு நான் திரும்பப்போகின்றேன்” என்று குறிப்பிட்டு விட்டு மஹிந்த ராஜபக்ச மே 17 காலை கட்டுநாயக்காவில் தரையிறங்கி மண்ணை முத்தமிட்டார். பிரபாகரன் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றார் என்ற மமதையை மஹிந்த ராஜபக்சவின் உடல்மொழியும் உரையும் உறுதிப்படுத்தியது.
எல்லோருடனும் வெள்ளைக்கொடியோடு பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் சரணடைந்தனர் என்ற உண்மை மிகக் கசப்பானது. அதற்குப் பின் நடந்த சம்பவங்கள் இன்னமும் கசப்பானவை. ஈபிடிபி தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்த அண்மையில் வெளியிட்ட பதிவில் வருமாறு குறிப்பிடுகின்றார்.
தான் இதையெல்லாம் செய்யவில்லை என்று தோழர் டக்ளஸ் தேவானந்தா சொல்ல வருவதன் மூலம் அவர் குறிப்பிடுவது. இதையெல்லாம் பிரபாகரன் செய்தார் என்பதற்கே. அவர் குறிப்பிட்டுச் சொல்கின்ற விடயங்களும் அதற்கும் மேலாக நடந்ததும் வீடியோக் கிளிப்பாகப் பதிவு செய்யப்பட்டு வந்தது. அதன்படி சரணடைந்த பிரபாகரனின் குடும்பத்தினர் பனாங்கொடை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரபாகரன் குடும்பத்தினர் மனித விழுமியங்களுக்குப் புறம்பாக நடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். மதிவதனியும் துவாரகாவும் பாலியல்துன்புறுத்தல்களை அனுபவித்தனர். இவை பதிவு செய்யப்பட்ட காணொலி அங்கிருந்த இராணுவத் தளபதிகளினால் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. அரசியல் உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு காண்பிக்கப்படுவதற்காக இது பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அந்தக் காணொலி தேசம்நெற் க்கு நெருக்கமான ஒருவராலும் பார்க்கப்பட்டது. அதுபற்றிய பதிவும் தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. அந்தக் காணொலியின் பிரதியை எடுக்க முயன்றபோது அது உடனடியாகவே மறைக்கப்பட்டது. அந்த காணொலியில் காணம்பிக்கப்பட்ட விடயத்தையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாதாரணமாக ஒரு தமிழனாக இந்த விடயத்தை ஜீரணப்பது மிகக் கடுமையானது. புலிகளுடைய பிரபாகரனுடைய எதிரிகள் கூட இந்நிலைமையை ஜீரணிக்க கஸ்டப்பட்டார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது அவருடைய அரசியல் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை வைப்பவர்கள் கூட பிரபாகரன் தனது குடும்பத்தோடு இறுதிவரை அம்மண்ணில் நின்று போராடியதையும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் அப்போராட்டத்துக்கு அர்ப்பணித்ததையும் மிகப் பெருமையாகவே கருதுகின்றனர். இந்த சரணடைவது என்பது யுத்தத்தின் ஒரு அம்சம். தவிர்க்க முடியாதது.
ஒரு சில நாட்கள் சரியான உறக்கமும் உணவும் இல்லாதிருந்தால் நாம் சிந்திக்கவோ சரியான முடிவுகளை எடுக்கவோ முடியாது. அப்படி இருக்கையில் ஒரு சில கிலோ மீற்றருக்குள் ஒரு சில வாரங்கள் தக்க உணவு, உறக்கமின்றி நிம்மதியின்றி இருந்த ஒருவர் மிக நேர்த்தியான முடிவை எடுக்க முடியாது. அன்று இந்த சரணடைவைத் தவிர வேறேதும் வழியில்லை.
இந்நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அறிவின்மையும் வஞ்சப்புகழ்ச்சிகளும் அவர்களுடைய சுயநலன்களும் முக்கிய காரணம். பிரபாகரனும் புலிகளும் தமிழ் சமூகத்தின் உற்பத்திகள் தான். அவர்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. பிரபாகரன் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என இரா சம்பந்தன் அவர்களும் விரும்பி இருந்தார். அவர் புலிகளையோ மக்களையோ காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை இதை எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.
விடுதலைப் புலிகளை குறிப்பாக பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் படுகொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இலங்கைக்கு அவ்வளவாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஜேவிபி இன் ரோஹன விஜய வீர, பிகெகெ ஓச்சுலான் போன்று சிறையில் அடைத்து தமிழ் மக்களது உள்ளுணர்வை நொருக்க ராஜபக்சக்கள் விரும்பி இருக்கலாம். சில சமயம் ஏனைய ஆயுத அமைப்புகள் அரசியலுக்கு வந்தது போல் புனர்வாழ்வு பெற்று பிரபாகரனும் பிற்காலங்களில் அரசியலுக்கு வந்திருக்கலாம். இப்படித்தான் நடக்கும் என்று அறுதியிட்டு கூற முடியாது. ஆனால் பிரபாகரன் சரணடைந்தது இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் இந்தியாவே பிரபாகரனது குடும்பத்தில் எந்தவொரு உறுப்பினரும் உயிருடன் இருக்கக் கூடாது என்ற உத்தரவை இலங்கை அரசுக்கு வழங்கியதாகவும் இலங்கை உயர்பீடத்தில் இருந்து சில தகவல்கள் தேசம்நெற்க்கு எட்டியது. பிரபாகரனோ அல்லது அவரது குடும்பத்தினரோ உயிருடன் இருந்தால் தமிழகத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஏப்பிரல் 5இல் விடுதலைப் புலிகள் பின்னடைவைச் சந்தித்த போது, புளொட் அமைப்பினூடாக இந்தியாவுக்கு புலிகள் தாங்கள் சரணடைவதற்கு தயாராக இருப்பதை தெரியப்படுத்தி இருந்தனர். இதனை புளொட் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தினூடாக இந்திய அரசுக்கு தெரியப்படுத்தி இருந்தது. இந்தியத் தூதரகம் பிரபாகரனும் பொட்டம்மானும் தவிர்ந்த ஏனைய போராளிகளை தாங்கள் காப்பாற்றவும் ஏற்றுக்கொள்ளவும் தயார் என்றும் ஆனால் அவர்கள் இருவரையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரியப்படுத்தி இருந்ததாக புளொட் வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவித்தன.
இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இன்றி இலங்கை அரசால் இந்த யுத்தத்தை வென்றிருக்க முடியாது. ஆகையால் இந்தியாவின் விருப்பத்திற்கமைய பிரபாகரனின் குடும்பத்தினர் மீளவும் முள்ளிவாய்கால் கொண்டு செல்லப்பட்டு அங்கு படுகொலை செய்யப்பட்டனர். மே 17 அதிகாலையில் சரணடைந்த பிரபாகரன் குடும்பத்தினர் மே 18இல் மீண்டும் முள்ளிவாய்க்காலுக்கு கொண்டுவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். பிரபாகரனின் துணைவியார் மதிவதனியினதும் துவாரகாவினதும் உடல்கள் இந்தியாவின் என்டிரி NDT சனலில் மட்டும் ஒரு தடவை காண்பிக்கப்பட்டது. அதன்பின் அப்படங்கள் உடனடியாகவே நீக்கப்பட்டது. அதனைத் தவிர வேறு எங்கும் அவர்களின் படங்கள் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டது.
பிரபாகரனின் தலையில் ஏற்பட்ட காயத்தை ஆய்வு செய்த ஐரோப்பிய நிபுணர் பிரபாகரனுக்கு மிகக் கிட்ட (ஒரு மீற்றருக்குள்) இருந்தே துப்பாக்கி வேட்டுத் தீர்க்கப்பட்டு கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுவொரு தற்கொலையல்ல படுகொலையென்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சமூகம் இந்தப் படிப்பினைகளில் இருந்து நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும். அடைந்தால் தமிழீழம் இல்லையேல் மரணம், செய் அல்லது செத்துமடி போன்ற உணர்ச்சிகரமான போதையூட்டும் மொழிகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும். வாழ்க்கை என்பது அது அல்லது இது என்ற பைனறி (binary language) மொழியல்ல. வடக்கு கிழக்கை ராஜ்ஜியமாக ஆண்ட புலிகள் அரசியல் அனாதைகளாகி பூஜ்ஜியமானது மிகச் சோகமான வரலாற்றுப் பதிவு. அரசியலுக்கு மேல் மக்களுக்கு மேல் ஆயுதங்களைக் காதலிப்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிகக் காத்திரமான பாடம்.
தேசம்நெற் பிரபாகரனின் மரணச் செய்தியை வெளியிட்டு நான்கு நாட்களின் பின், மே 24 அன்று அனைத்துலக வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்ட செல்வராசா பத்மநாதன் என்ற குமரன் பத்மநாதன் (கெபி) “தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீர வணக்கங்கள்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டு பிரபாகரனின் மரணத்தை உலகிற்கு அறிவித்தார். சில தினங்கள் பிரபாகரனின் மரணத்தை மறுத்துவந்த கெபி அதன்பின் அடேல் பாலசிங்கம் மற்றும் சிலரோடு உரையாடி புலிகளின் தலைவரின் மரணத்தை அறிவித்து அவருக்கான கௌரவத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவ்வறிக்கையை வெளியிட்டார். அதன் பின் தேசம்நெற் கெபி உடன் தொலைபேசியூடாக நேர்காணல் ஒன்றை மேற்கொண்டது. இந்நேர்காணலை அவருடைய ஆதரவாளரான லண்டனில் வாழும் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான வாசுதேவன் ஏற்படுத்தித் தந்தார். அந்நேர் காணலின் ஒலிப்பதிவு:
எதிர்காலத்தில் அரசியல் படுகொலையற்ற அரசியல் செய்வோம்! செய்வதற்குமுன் சிந்தித்து செய்வோம்!! எதற்காகவும் செத்துமடிய வேண்டாம்!!