முரளி தமிழர்களுக்கு விரோதமான அரசியல் கருத்தை கொண்டிருந்தார் என்கிறீர்கள். சரி அந்த அடிப்படையில் பார்த்தால் பிரபாகரன் யார்? பிரபாகரன் ஈழத்தில் தமிழ் மக்களுக்காக போராட்டம் ஆரம்பித்தார் என்பது உண்மைதான். ஆனால் அந்த போராட்டத்தை தவறான பாதையில் நகர்த்தி சென்றதும், இறுதியில் அவ்வளவு பேரழிவிற்கும் வித்திட்டதற்கும் பிரபாகரனுக்கும் சம்மந்தம் இல்லை என்கிறீர்களா?
- பிரபாகரனாலும் அவரது சகாக்களாலும் மேற்கொள்ளப்பட்ட மாற்று இயக்க போராளிகள் மீதான மிலேச்சத்தனமான படுகொலைகள்.
- மாற்று சிந்தனையாளர்கள் மீதான படுகொலைகள்.
- கட்டாய ஆட்சேர்ப்புகள், சிறுவர் போராளிகள் என்ற வகையில் பலிகொடுக்கப்பட்ட மக்கள்.
- தமக்கு அடுத்து தமிழர் அரசியலை கொண்டுநடத்த தெளிவான சிந்தனை முறை ஒன்றை உருவாக்காமல் விட்டமை. (புலிகள் இல்லாமல் போனதன் பின்னர்கூட புலிகளற்ற ஒரு அரசியலை முன்னெடுக்க தமிழர்களால் முடியாமல் இருப்பதற்கு முழுமையான காரணம் புலிகள் மாத்திரமே)
- இறுதி யுத்தத்தில் தம்மை நம்பி வந்த சொந்த மக்களையே படுகொலை செய்தமை.
இவ்வளவையும் செய்த பிரபாகரனை எந்த அடிப்படையில் புனிதப்படுத்த முனைகிறீர்கள். இவையெல்லாம் மக்கள் விரோத செயற்பாடுகள் இல்லையா? ஒடுக்குமுறைக்குள்ளாகி விடுதலைக்காக போராடிய இனமொன்றை “தனிநாடு, அதுவும் புலிகள் மூலம் மாத்திரம்தான்” என்ற ஒரு சிந்தனையை தவிர வேறு எந்த சிந்தனைகளுமின்றி உழலும் நிலைக்கு கொண்டுவந்தது எத்தனை பெரிய வரலாற்று துரோகம். அதை செய்தவரை எப்படி புனிதப்படுத்துகிறீர்கள்?
தமிழர் விரோத கருத்தை கொண்டிருக்கும் ஒருவரை தமிழினத்துரோகியாக்கி நிராகரிக்கும் நீங்கள், தமிழர் விரோத செயலை முன்னெடுத்த ஒருவரை எப்படி புனிதராக்கி கொண்டாடுகிறீர்கள்? உங்களுடைய நீதிக்கான அளவுகோல் என்ன?
ஆக, சக மனிதர்கள் மீதான படுகொலையை நிபந்தனைகளோடு, அதாவது செய்தவர் நமக்கு வேண்டப்பட்டவரா, வேண்டப்படாதவரா என்ற அடிப்படையில்தான் உங்கள் நீதி தீர்மாணிக்கப்படுகிறதா?
இந்த அடிப்படை அறமின்மை சரி என்று நினைக்கிறீர்களா? இந்த அறமற்ற நீதிக்கோரிக்கையுடன் சர்வதேசத்தின் முன் நிற்பது எந்த வகையிலாவது நீதியை பெற்றுத்தரும் என நம்புகிறீர்களா?