(Menaka Mookandi)
“இன்று, வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி, பலரும் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புப் படையினரால், இறுதி யுத்தத்தில் பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட போது, தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் தலைமைகளிடமும், இந்திய அரசாங்கத்தால் அது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாள்களில், பிரபாகரன் கொல்லப்பட்டு விடலாம். அதனால், சர்வதேசத் தலையீடு அவசியமா என்று, தமிழ்நாடு அரசியல் தலைமைகளிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் அனைவரும், பிரபாகரனை முடித்துவிடுங்கள் என்று கூறியதாக, இந்திய அரசாங்கத்தின், முக்கிய ஆலோசகர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்” என்று, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
“அன்று, வடக்கிலிருந்த எந்தவோர் அரசியல்வாதியோ அல்லது, தமிழ்நாட்டின் ஜெயலலிதாவோ கருணாநிதியோ, எவருமே, பிரபாகரனைக் காப்பாற்ற நினைக்கவில்லை. அவர்கள் அனைவருமே, வெளிப்படையாக ஒரு கொள்கையையும் உள்ளுக்குள் வேறொரு கொள்கையையுமே கொண்டிருந்தனர். எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கமானது, சிங்கள சமூகத்தால், தமிழ்ச் சமூகம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று நினைக்கவில்லை. காரணம், தமிழ்ச் சமூகத்துடன் மிக நெருக்கமாகவே தான், சிங்களச் சமூகம் காணப்படுகின்றது. கலாசாரம், பண்பாடு, வழிபாடென, அனைத்து விடத்திலும், இவ்விரு சமூகங்களும் ஒத்துப்போகின்றன. இதனால், இவ்விரு சமூகங்களும், எந்தவொரு வேறுபாடுமின்றி, ஒற்றுமையாக வாழவேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பயணித்திருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தமிழ்மிரருக்குப் பிரத்தியேகமாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதியின் ஐ.நா பொதுச் சபை உரையானது, இலங்கை மீதான சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு யோசனைகளை முன்வைக்கும் வகையிலும் அமையுமென, பாரிய எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், இலங்கைப் பிரச்சினைகளில், சர்வதேசத்தின் தலையீடு அவசியமில்லை என்ற வலியுறுத்தலை மாத்திரமே, ஜனாதிபதி தனதுரையின் போது முன்வைத்தார். இது குறித்து, அமைச்சரிடம் கேட்ட போது, அவர் தொடர்ந்து கூறியதாவது,
“இது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டமாகும். இதில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்கள், தங்களது நாடுகள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க, இந்தப் பொதுச் சபைக் கூட்டத்தொடரைப் பயன்படுத்துவது உண்மை. ஆனால், ஒரு நாடு அடைந்துள்ள அபிவிருத்தி, அந்த நாடுகளின் பொதுக் கொள்கைகள் தொடர்பில் பேசவேண்டும் என்பது தான் கட்டாயமாகும்.
“ஜனாதிபதியின் இம்முறை உரையானது, இலங்கையின் புதிய ஆரம்பம் தொடர்பிலும் அதன் தேவை தொடர்பிலுமே வலியுறுத்தப்பட்டது. அடுத்ததாக, எமது நாட்டுக்குள் இருக்கும் பிரச்சினைகளை, வெளிநாடுகளின் தலையீடுகள் இன்றி, எமது நாட்டுக்குள்ளேயே அவற்றைத் தீர்த்துக்கொள்வதற்கு இடமளியுங்கள் என்றும், ஜனாதிபதியால் வலியுறுத்தப்பட்டது. இது தான், எமது கொள்கைக் கட்டமைப்பாகும்.
“இலங்கை தொடர்பான மனித உரிமைக் குற்றச்சாட்டுகள், இந்த ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டதன்று. அது தொடர்பான குற்றச்சாட்டுகள், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர், எதிர்வரும் 2019 மார்ச் மாதத்திலேயே இடம்பெறவுள்ளது. அதனால், அந்தக் கூட்டத்தொடரின் போது, இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை அரசாங்கம் என்ற ரீதியில், சில விடயங்களை வலியுறுத்த, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
“இவ்வாறிருக்க, பொதுச் சபைக் கூட்டத்தொடரில், இலங்கையின் புதிய கொள்கைக் கட்டமைப்பொன்றே, ஜனாதிபதியால் இம்முறை முன்வைக்கப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்துக்குப் பின்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரத்து 600 பேர், வெறுமனே விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளையும் பாதுகாப்புப் படையினரையும் ஒப்பிட முடியாது. இலங்கைப் படையினரென்பது, இலங்கை அரசாங்கத்தின் சட்டபூர்வப் படைத்தரப்பையே குறிப்பிடுகின்றது. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமென்பது, உள்நாட்டிலும், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என, சர்வதே ரீதியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். இது, வெறுமனே இவ்வாறு அறிவிக்கப்படவில்லை. எல்.ரீ.ரீ.ஈயினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், பயங்கரவாத நடவடிக்கைகள், இன அழிப்பு நடவடிக்கைகளைக் கொண்டே, சர்வதேச ரீதியிலான பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
“1987 ஒக்டோபர் மாதம் முதல், யாழ்ப்பாணத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் இந்த இன அழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. பிற இனத்தவர்கள் எவரையும், யாழ்ப்பாணத்தில் அவ்வியக்கத்தினர் இருக்கவிடவில்லை. தமிழ்த் தலைவர்கள், தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரையும், விடுதலைப் புலியினர் தான் படுகொலை செய்தனர். ஆனால், எந்தவொரு சிங்கள இனவாதியும், தமிழ்த் தலைவரையோ அல்லது தமிழ் அரசியல்வாதிகளையோ, இவ்வாறு படுகொலை செய்யவில்லை.
“எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 60 பேர், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 58 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மறுபுறம், இலங்கைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 40 பேர், கைதாகி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உண்மையில், இவர்கள் அனைவரும் சிறைத்தண்டனை அனுபவிக்கத் தொடங்கி, சுமார் 10 வருடங்களாகின்றன. எல்.ரீ.ரீ.ஈயைச் சேர்ந்த பலரும், பல வருட காலங்களாக, சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். அதேபோன்று, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பலரும், பல வருடங்களாக, சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
“யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், யுத்தச் சட்டங்களைக் கடைப்பிடித்து, யுத்தத்தில் ஈடுபடவில்லை. அவ்வியக்கத்தினரால், 9 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். நாடுகளின் அரச தலைவர்களைக் கொன்றிருக்கிறது. தவிர, தமிழ் மக்களை, பணயக் கைதிகளாக்கி, கிராமங்களிலிருந்து, சுமார் 3 இலட்சம் மக்களை, பலவந்தமாக அழைத்துச் சென்றனர். அந்த மக்கள், சுமார் இரண்டரை வருட காலமாக, பாரிய துன்பங்களை அனுபவித்தனர். இதனால், அம்மக்களுடைய வாழ்விடங்கள், வீடு வாசல்கள் எல்லாம் அழிந்தன. இவ்வாறான செயற்பாட்டை, சாதாரண யுத்தமென வரைவிலக்கணப்படுத்திவிட முடியாது. புலிகள் இயக்கத்தினர் தான், அம்மக்களை பலவந்தமாக அழைத்துச் சென்றனர். இதுவும் ஒரு யுத்தக் குற்றச்சாட்டாகும்.
“அதேபோன்று, இலங்கைப் படையினர், புலிகள் இயக்கத்துடனான யுத்தத்தின் போது, அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் படுகொலை செய்த பின்னர், தாம் வெற்றியாளர்கள் என்றும் தமிழ் மக்கள் தோல்வியடைந்தவர்களென்றும், அம்மக்களைக் கொலைசெய்யச் செல்லவில்லை. அம்மக்களை மீட்டு, அவர்களுக்கு உண்ண உணவு, அணிந்துகொள்ள ஆடையளித்தது மாத்திரமன்றி, அம்மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளைக் கூட, படைத்தரப்பினர் தான் செய்து வருகின்றனர்.
“உண்மையில், எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈயினருக்கு உதவியவர்களுக்கு எதிரான யுத்த நீதிமன்றமொன்றை அமைத்து, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இலங்கை அவ்வாறு செய்யவில்லை. இந்த விடயத்தில், மஹிந்த ராஜபக்ஷவினால் தவறிழைக்கப்பட்டுவிட்டது. முறையான சர்வதேச விசாரணையின்றி, எல்.ரீ.ரீ.ஈயினர் அனைவரையும், கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி விடுவித்துவிட்டார். அது மாத்திரமன்றி, குறிப்பிட்ட சிலரை, இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவில் சம்பளம் பெறுபவர்களாக நியமித்தார். கிழக்கு மாகாணத்தில், சுமார் 600க்கும் மேற்பட்டோரைக் கொலை செய்த ராம், நகுலன் போன்றவர்களும், இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்தனர். இவற்றையெல்லாம் பார்க்கும் போது, வேடிக்கையாக இல்லையா?
“ கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், எவ்விதப் பிரச்சினையுமின்றி இருக்கின்றாரென்றால், ராம், நகுலுனும் வெளியே இருக்கின்றார்கள் என்றால், யுத்தத்தில் பங்குபற்றிய 12 ஆயிரத்து 600 பேரும் வெளியே இருக்கின்றார்கள் என்றால், நெடியவனையோ அல்லது ருத்ரகுமாரனையோ கைது செய்ய, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதற்கான தேவையும் இல்லையென்றால், சிற்சில குற்றங்களில் ஈடுபட்ட சுமார் 60 பேரைத் தடுத்து வைத்திருப்பதில், எவ்வித அர்த்தமும் இல்லை. அதேபோன்று, இலங்கைப் படையினருக்குத் தண்டனை வழங்க, தமிழ்த் தரப்பினருக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை. அதேபோன்று, அரசியல் தலைவர்கள், தமிழ்த் தலைவர்கள் உட்பட, சுமார் 9 ஆயிரம் பொதுமக்களைப் படுகொலை செய்தவர்களை, அரசியல் கைதிகளென விழிக்கவும் முடியாது.
“இன்று, தமிழ்த் தரப்புக்காகப் பேசும் அனைவரும், ஒரு காலத்தில், தமிழ்ச் செல்வனின் அடிமைகளா இருந்தவர்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். அவர்களைத் தமிழ்ச் செல்வன், நாயை நடத்துவது போன்றே நடத்தினார். இதற்கான குரல் பதிவுகள் எம்மிடம் இருக்கின்றன. தேவையாயின் அவற்றை அம்பலப்படுத்துவோம். ஆனால் எமது சமூகத்தில், நாம் இந்தத் தமிழ்த் தலைவர்களை அவ்வாறு நடத்தியதும் இல்லை, நடத்தப்போவதும் இல்லை. சம்பந்தர் போன்றோரை, சிரேஷ்ட கொள்கைமிகு தலைவர்களாகவே நாம், கௌரவமாக நடத்துகின்றோம். அதனால் அவர்களும், பழிவாங்கும் செயற்பாட்டுக்குள் செல்லாதிருக்க வேண்டுமென்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோன்று, சிங்களவர்களையும் முஸ்லிம்களையும், யாழ்ப்பாணத்துக்குள் அனுமதிக்கப் போவதில்லையென, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முட்டாள்தனமாக கருத்தை முன்வைத்து வருகின்றார். காரணம், எந்தவொரு நபரும், தன்னார்வத்துடன் வடக்கில் சென்று குடியேற விரும்புவதில்லை. குடிநீரின்றி, வரட்சியால் வாடிப்போயுள்ள பிரதேசத்தில் சென்று குடியேற வேண்டுமென்ற எண்ணம், அவர்களுக்கு இல்லை. கொழும்பு நகரில், 33 சதவீதமானோர், தமிழர்களாகக் காணப்படுகின்றனர். யாழ்ப்பானத்தில் 11 சதவீதமான சிங்களவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள். இவை தான் இன அழிப்பு நடவடிக்கைகள். இவ்வாறான செயற்பாடுகள் தான், போர்க் குற்றங்கள்.
பிரபாகரனால், ‘கெங்கரு கோர்ட்’ என்ற நடைமுறையொன்று பின்பற்றப்பட்டு வந்தது. தமிழ் அரசியல்வாதிகளில் எவரைக் கொலை செய்வதென்று தீர்மானிப்பதற்கே, இந்த கெங்கரு கோர்ட் பயன்படுத்தப்பட்டது. இதில், கொழும்பிலிருந்த சட்டத்தரணிகள் குழுவொன்று உள்ளடக்கப்பட்டிருந்தது. பிரபாகரன் மறைந்திருந்த புதுக்குடியிருப்பு பதுங்கு குழியைப் படையினர் கைப்பற்றிய போது, இது தொடர்பான சகல விடயங்களும், படையினரால் மீட்கப்பட்டன. இவ்வனைத்துச் சாட்சியங்களும், எம்மிடம் உள்ளன. இவற்றை நாம் வெளியிடத் தொடங்கினால், ஜனநாயகப் போர்வையைப் போர்த்திக்கொண்டுள்ளவர்கள், ஆடையின்றித் திரியவேண்டிய நிலைமை ஏற்படும். ஸ்ரீ
“எது எவ்வாறாயினும், இந்தச் சகல விடயங்களையும், நாம் அனைவரும் மறந்துவிட வேண்டும். காரணம், நாடு என்ற ரீதியில், நாம் முன்னோக்கி நகர வேண்டும். கடந்த காலச் சம்பவங்களை மறந்து, நாட்டை முன்னேற்றுவது தொடர்பில், அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும். அனைவருக்கும், ஜனநாயகம் கிட்டியுள்ளது. அந்த ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி, நாட்டையும் மக்களையும் அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்ல, தமிழ் அரசியல்வாதிகள் முன்வர வேண்டும். இதை, தமிழ் மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். அதேபோன்று, அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களைக் குழப்பி, அதனூடாக வெற்றியை அடைந்துகொள்ள, ஒருபோதும் முடியாது”