(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஆட்சிகள் மாறுவது இயல்பு. ஆனால், ஆட்சிக் கவிழ்ப்புக்கள் அவ்வாறல்ல. அவை, மக்களின் விருப்புக்கு மாறாகத் திட்டமிட்டு, வேறு நோக்கங்கட்காக நடந்தேறுவன. உலகிற் பல ஆட்சிக் கவிழ்ப்புக்கள் நடந்துள்ளன. அவை இராணுவப் புரட்சிகள், அரண்மனைச் சதிகள், படுகொலைகள் எனப் பல்வகைப்படுவன. ஒவ்வொன்றும் ஏதோவொரு காரணங் கருதியே நிகழ்த்தப்படுகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களில், ஜனநாயகம் என்பதை அரசியலின் அடிப்படையான குறிகாட்டியாக, அரசாட்சியின் பிரதான தூணாகத் தோற்றங்காட்டி அதில் நம்பிக்கை ஏற்பட்டதாற், பழக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முறைகள் ‘ஜனநாயகமற்றவை’ என வெறுக்கப்பட்டன. அதனால் ‘அரசியல் யாப்பு நெருக்கடி’களின் ஊடாக, ஆட்சி மாற்றங்கள் நடந்தன. இப்போது ஆட்சிக் கவிழ்ப்பின் இன்னொரு காட்சி, பிரேசிலில் புதிய வடிவில் அரங்கேறுகிறது.
பிரேசில், இப்போது அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவல்லதோர் அரசியற் சூறாவளியில் சிக்கியுள்ளது. பிரேசிலின் ஜனாதிபதி டிவ்மா ரூசெவ்வைப் பதவி விலக்க, அவர் மீது ஊழல் குற்றப் பிரேரணை, நாடாளுமன்றின் கீழவையில் (காங்கிரஸ்) முன்மொழியப்பட்டுள்ளது.
இம்முன்மொழிவை, மேலவையான மூதவை (செனட்) அனேகமாக அங்கிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரேசிலின் முதலாவது பெண் ஜனாதிபதியான டிவ்மா ரூசெவ்வைப் பதவி விலக்குவது உறுதியாயுள்ளது.
2014ஆம் ஆண்டு, பிரேசிலிய நீதிபதி சேர்ஜியோ மோரோவிடம் வழங்கிய இரகசியத் தகவல்களின் அடிப்படையில், முன்னெடுத்த நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து விசாரணைகள், பிரேசிலிய அரச எண்ணெய்க் கம்பெனியான பிரேசிலிய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தில் (பெற்றோபஸ்) இடம்பெற்றதாகக் கூறப்பட்ட கையூட்டுப் பெறுதல், ஊழல், நிதி மோசடிகள் வரை விரிவடைந்தன. விசாரணைக்குரிய ஆவணங்களும் தகவல்களும் நீதிபதிக்கு இரகசியமாக வழங்கப்பட்டன. அவற்றை வழங்கியோர் யார் என்பதோ, அவை எவ்வாறு நீதிபதி சேர்ஜியோ மோரோவின் நேரடிப் பார்வைக்கு வந்தன என்பதோ இதுவரை கூறப்படவில்லை. ழுpநசயவழைn ஊயச றுயளா எனப்படும் இவ்விசாரணை, பலரைக் குற்றவாளிகளாக இனங்கண்டதுடன், மோசடிகள் நீண்டகாலமாக நடைபெற்றுள்ளதாகவும் சொல்லியது. பெற்றோபஸ் நிறுவன இயக்குநர்களின் ஒருவராவார் என்ற வகையில், பிரேசிலிய ஜனாதிபதி டிவ்மா ரூசெவ் ‘பொறுப்புக்கூற வேண்டியவர்’ என்ற அடிப்படையில் குற்றச்சாட்டப்பட்டுள்ளார். அவரைப் பதவி விலக்கும் செயற்பாடு அதனடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் இயக்குநராக இருந்தபோது, பணம் பெற்றாரென்றோ ஊழலில் ஈடுபட்டாரென்றோ நிறுவ, ஒரு சாட்சியும் இல்லை. நீதிமன்றமோ விசாரித்த பொலிசாரோ அவரைக் குற்றவாளியாகக் கருதவில்லை. ஆனால் ‘பொறுப்புக்கூற வேண்டியவர்’ என்பதைக் காரணமாக்கிப் நாடாளுமன்றின் கீழவை அவரைப் பதவிவிலக்கும் முடிவை எடுத்தது.
முதற்கட்டமாக, 65 பேரடங்கிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு, ஜனாதிபதியைப் பதவிநீக்கும் செயன்முறையைப் நாடாளுமன்றம் அனுமதிப்பதா இல்லையா என்பதை முடிவுசெய்ய நியமிக்கப்பட்டது. கடும் வாக்குவாதங்களின் பின் நிகழ்ந்த வாக்கெடுப்பிற் செயன்முறையை அனுமதிக்க வேண்டுமென வாக்களித்த 38 பேரில் 35 பேருக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிறுவப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடக்கின்றன. நாடாளுமன்று, இச்செயன்முறையை அனுமதிக்கக் கூடாது என 27 பேர் வாக்களித்தனர். அடுத்து, நாடாளுமன்றம் ஜனாதிபதியைப் பதவிநீக்கும் செயன்முறையைத் தொடங்கியது.
ஜனாதிபதி டிவ்மா ரூசெவ்வைப் பதவியிலிருந்து அகற்ற முன்னிற்று செயற்படுபவர்கள் இருவர். ஒருவர், துணை ஜனாதிபதி மைக்கல் டெமர் மற்றவர் நாடாளுமன்றக் கீழவையின் சபாநாயகரான தலைவர் எடுவாடோ குன்ஹா. டிவ்மா ரூசெவ்வைப் பதவி விலக்கினால், துணை ஜனாதிபதி மைக்கல் டெமர் எஞ்சிய பதவிக் காலத்துக்கு ஜனாதிபதியாக இருப்பார். பெட்ரோபஸ் ஊழல் விசாரணைகளின் போது, 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாகப் பெற்றமை நிறுவப்பட்டதால், டெமர், நீதிமன்றால் குற்றவாளியாகக் காணப்பட்டவர். டெமர், குன்ஹா இருவரும் பிரேசிலிய ஜனநாயக இயக்கக் கட்சியைச் சார்ந்தவர்கள்.
இவ்விசாரணையின் விதிமுறைகளை நிர்ணயித்த சபாநாயகர் குன்ஹா, வழமையான வாக்களிக்கும் விதிமுறைகட்கு மாறான வாக்களிப்பு விதிமுறைகளை உருவாக்கினார். இத்தனைக்கும், ஊழல் மூலம் 40 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதித்ததாக பெட்ரோபஸ் ஊழல் விசாரணைகளின் போது ஆதாரங்களுடன் நிறுவியதால், நீதிமன்றத் தீர்ப்பைக் காத்திருக்கும் குன்ஹாவை, சட்டவிரோதமாகப் பதினொரு சுவிஸ் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பதற்காக, பிரேசில் உயர் நீதிமன்றமும் விசாரிக்கிறது. பனாமா ஆவணங்களில் பல மில்லியன் கணக்கில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் ஒருவராகவும் இவரது பெயர் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றிய நாடாளுமன்ற விசாரணைகட்கு இவர் தலைமை தாங்கியமை, விசாரணைகளின் நேர்மையை விளக்கப் போதியது.
நாடாளுமன்ற வாக்கெடுப்பில், 367க்கு 137 என்ற வாக்கு வேறுபாட்டு அடிப்படையில், ஜனாதிபதி டிவ்மா ரூசெவ் குற்றவாளியாகக் கருதப்பட்டார். அவரைப் பதவி விலக்குமாறு மேலவைக்குப் (செனட்டுக்கு) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டிவ்மா ரூசெவ்வுக்கு எதிராக வாக்களித்த 367 பேரில் 303 பேரின் ஊழற் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. 594 உறுப்பினர்ளைக் கொண்ட கீழவையில் 318 பேர் ஊழற் குற்றச்சாட்டு நிறுவப்பட்டவர்கள். 81 பேரைக் கொண்ட செனட்டில் 41 பேர் ஊழற் குற்றச்சாட்டுக்கு உரியவர்கள். இவ்வாறு ஊழற் பெருச்சாளிகள் நிறைந்த ஒரு நாடாளுமன்றம், ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை விசாரித்துத் தீர்ப்பளிக்கிறது என்றால், அதன் பின்னால் இருப்பவை யாருடைய நலன்கள் என்ற கேள்வி எழுகிறது.
ஊழல் பற்றிய தகவல்களைப் பெற்று விசாரித்த சேர்ஜியோ மோரோ, 1996ஆம் ஆண்டு நீதிபதியாகக் கடமையாற்றத் தொடங்கியதையடுத்து, அமெரிக்க அரச புலமைப்பரிசிலில் ஹவாட் சட்டக் கல்லூரியில் மேற்படிப்பை மேற்கொண்ட வேளை, அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுடனான நெருக்கம் ஏற்பட்டது. நாடு திரும்பி மத்திய நீதிமன்ற நீதிபதியாகப் பதவியுயர்வு பெற்ற இவரை, 2007ஆம் ஆண்டு அமெரிக்க அரசு விருந்தினராக அழைத்து ஊழலுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுப்பது பற்றிப் பயிற்றுவித்தது. அதனுடன் தொடர்புடைய அமெரிக்க நிறுவனங்களுடன் இடையறாது தொடர்பு பேணி வந்திருக்கிறார். இவரது மொத்த விசாரணையுமே, ஜனாதிபதி டிவ்மா ரூசெவ்வின் பிரேசிலியத் தொழிலாளர் கட்சி உறுப்பினர்களை மட்டுமே குறிவைக்கிறது. ஊழற் குற்றம் நிறுவப்பட்ட ஏனைய கட்சியினர் பற்றி விசாரியாமல் இழுத்தடித்துள்ளார். இதனாலேயே, தான் துணை ஜனாதிபதி டெமரொவோ சபாநாயகர் குன்ஹாவோ இதுவரை தண்டிக்கப்படவில்லை.
இங்கு அடுத்து எழும் வினாக்கள், விசாரணைகளைத் தொடங்குதற்கான தகவல்கள் எவ்வாறு பெறப்பட்டன, அவை எவ்வாறு நீதிபதி மோரோவின் கைக்கு வந்தன, அமெரிக்காவின் ‘தேசிய பாதுகாப்பு நிறுவனம்’ உலகத் தலைவர்களை ஒட்டுக் கேட்பதாகவும் தகவல்களைத் திருடுவதாகவும் விக்கிலீக்சும் பின்னர் எட்வேர்ட் ஸ்னோடனும் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளனர். இப்பின்னணியில், சில காலத்துக்கு முன்னர், ஜேர்மனிய சான்சிலர் அங்கெலா மேக்கலின் உரையாடல்களை ஒட்டுக்கேட்டமை அகப்பட்டு, அமெரிக்கா அவமானப்பட்டமை நினைவுறுத்தத்தக்கது. எனவே அமெரிக்காவின் உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு நிறுவனம், நீதிபதி மோரோவுக்கு தகவல்களை வழங்கியது எனலாம்.
இதில், டிவ்மா ரூசெவ்வும் அவரது தொழிலாளர் கட்சியும் மட்டும் குறிவைக்கப்படும் காரணங்கள் வெளிப்படையானவை. பிரேசில், மிக நீண்டகாலமாக அமெரிக்காவின் ஆளுகைக்குட்பட்ட நாடாக இருந்தது. அதன் மூலம் பிரேசிலின் வளங்கள் கட்டுப்பாடின்றி அமெரிக்க பல்தேசியக் கம்பெனிகளால் மலிவாகச் சுரண்டப்பட்டன. பிரேசிலின் அதிகார வர்க்கம் அமெரிக்காவுக்குச் சேவகம் செய்யும் பெருமுதலாளிகளைக் கொண்டிருந்தது.
அந்நிலையில், தொழிலாளர் உரிமைகளைக் காக்கவும் தொழிற்சங்க இயக்கத்துக்குப் புத்துயிர் ஊட்டவும் 1980களில் தொழிலாளர் கட்சி தோன்றியது. இதன் நிறுவகர்களின் ஒருவரான லூலா டா சில்வா, சிறந்த கட்சி கட்டும் செயற்பாட்டாளராக அறியப்பட்டவர். நெடிய போராட்டத்தின் பின்பே, 2002இல் தொழிலாளர் கட்சி வென்று, லூலா டா சில்வா ஜனாதிபதியாகத் தெரிவானார்.
அவர், 2006ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவானார். அவரது எட்டு ஆண்டுகால ஆட்சி, பிரேசிலின் எளிய மக்களுக்கு வாழ்வளித்துப் பல மில்லியன் கணக்கான பிரேசிலியர்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து, இலட்சோபலெட்சம் குழந்தைகளுக்குக் கல்வி அறிவுகொடுத்ததென அறியப்பட்டது. தனது சமூக நலத்திட்டங்களால், உலகளாவ நன்கறியப்பட்டவரான லூலா, அமெரிக்காவுக்குச் சவால் விடுபவரானார். இவரது பதவிக்காலம் முடிந்ததும் இவருக்கு இரண்டாம் நிலையில் இருந்த தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த டிவ்மா ரூசெவ், 2010இல் ஜனாதிபதியாகத் தெரிவாகிப் பின்னர் 2014 இல் மீளத் தெரிவாகியுள்ளார்.
கடந்த இரு தசாப்தங்களாக பிரேசிலை ஆண்டுவரும் தொழிலாளர் கட்சி, மேற்குலக நலன்கட்கு முற்றிலும் ஆதரவானதல்ல. உலகளாவ, அரசியலிலும் பொருளாதாரத்திலும் பிரேசில் தன்னை ஒரு முக்கிய அரங்காடியாக வளர்த்துள்ளது. குறிப்பாக பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு, மேற்குலகுக்கு வலுவான மாற்றமைப்பாக உருவாகியுள்ளது. அதில், உலகின் ஐந்தாவது பெரிய நாடும் ஏழாவது பெரிய பொருளாதார சக்தியுமான பிரேசிலின் பங்கு பெரிது. அமெரிக்கா பிரிக்ஸ் கூட்டமைப்பை அச்சத்துடன் நோக்குகிறது. ரஷ்ய-சீன ஒத்துழைப்பும் அதற்கு பிரேசிலின் துணையும் பிரிக்ஸின் மிகப்பெரிய பலமாகும்.
பிரேசிலில் ஆட்சி மாற்றம் அமெரிக்க நலன்களுக்கு மட்டுமன்றி, பிரேசிலின் வளங்களைச் சூறையாடத் துடிக்கும் பல்தேசியக் கம்பெனிகளுக்கும் அவசியமானது. அமெரிக்காவின் கொல்லைப்புறம், கடந்த இரு தசாப்தங்களாக அமெரிக்கக் கட்டுப்பாட்டுள் இல்லை.
தென்னமெரிக்காவில் உருவான உறுதியான தலைவர்களான வெனசுவேலாவின் ஹியூகோ சாவேஸ், பொலிவியாவின் ஈவோ மொறாலஸ், ஆர்ஜென்டீனாவின் நெஸ்ட்டர் கிர்ச்னர், பிரேசிலின் லூலா டா சில்வா ஆகியோரின் ஒத்துழைப்பால், அமெரிக்காவுக்கு எதிரான வலுவான ஒரு சக்தியாகியது. இதில் சாவேஸ், கிச்னர் ஆகிய இருவரும் புற்றுநோயால் மரித்தனர். மொறாலஸ் மீண்டும் ஜனாதிபதியாகாதவாறு அமெரிக்கா கவனித்துள்ளது. ஆர்ஜென்டினாவில் அமெரிக்கச் சார்பு வலதுசாரி ஜனாதிபதியாகியிருக்கிறார். வெனசுவேலா ஜனாதிபதி நிக்கலஸ் மடூரோ நெருக்கடிகளை எதிர்நோக்குகிறார். டிவ்மா ரூசெவ்வை பதவியில் இருந்து அகற்றின் தென்னமெரிக்கா மெதுமெதுவாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டுள் வரும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
பிரேசிலின் முன்னாள் அதிபர் லூலா, ஊழல் குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டுள்ளார். அவருக்கெதிரான குற்றச்சாட்டு எதுவும் நிறுவப்படவில்லை. பெற்றோபஸ் ஊழல் விசாரணை என்ற மொத்த நிகழ்ச்சி நிரலும் தொழிலாளர் கட்சியையும் அதன் தலைவர்களையும் அவமானப்படுத்தி அரசியலில் இருந்து அகற்றி, பிரேசிலில் மேற்குலகச் சார்பு ஆட்சி எப்போதும் நிலைப்பதை உறுதி செய்ய முயல்கிறது. ஏனெனில், 2018ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் லூலா மீண்டும் போட்டியிடும் வாய்ப்புக்கள் உள்ளன. இது, டிவ்மா ரூசெவ்வை பதவி விலக்கத் துடிப்பவர்களின் நலன்கட்கு நல்லதல்ல.
இப்போது பிரேசிலில் புதுவகையான சதியொன்று அரங்கேறுகின்றது. நாடாளுமன்ற ஜனநாயகச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எத் தவறும் செய்யாத ஒருவரைத் தண்டிக்க முடியும் என்பதை பிரேசில் கோடு காட்டியுள்ளது.
நிறப் புரட்சிகள், அரபு வசந்தம், மனிதாபிமானத் தலையீடு, அரசியலமைப்பு நெருக்கடி என ஆட்சி மாற்றத்துக்கான புது வழிகள் கடந்த ஒன்றறைத் தசாப்தங்களில் அரங்கேறியுள்ளன. பிரேசில் ஆட்சி மாற்றம் இன்னொரு புதிய பரிமாணத்தை வெளிப்படுதுகிறது.