(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
பல சமயம், எதிர்பார்த்தவற்றை விட எதிர்பாராதவை சுவையானவை. எல்லாரும் எதிர்பார்க்கிறோம். நிறைவேறாத எதிர்பார்ப்பு ஒருபுறம் ஏமாற்றமாகவும் மறுபுறம் விரக்தியாகவோ, கோபமாகவோ வெளிப்படலாம். மக்களின் தீர்ப்புக்கள் பலசமயம் இவ்வாறானவையே. சிலவேளை, மக்களின் தீர்ப்புக்கள் புதிராகத் தோன்றலாம். அவற்றுட் தர்க்கத்தையோ, நியாயத்தையோ தேட இயலாமற் போகலாம். அதனால் தானோ என்னவோ, மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பென்கிறார்கள்.
பிலிப்பைன்ஸின் அண்மைய ஜனாதிபதித் தேர்தலில், யாரும் எதிர்பாராதவாறு ரொட்ரிகோ டுட்டார்ட்டே வென்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். அவ்வெற்றி எதிர்பாராதது. ஆனால், அது ஏற்படுத்திய அதிர்ச்சியலை அவரது வெற்றியிலும் பெரிது. டுட்டார்ட்டே, சர்வதேச ஊடகங்களின் முக்கிய பேசுபொருளாகியுள்ளார். இச்செய்தியின் முக்கியத்தின் இன்னொரு காரணம், உலக அரங்கில் பிலிப்பைன்;ஸின் முக்கியத்துவமாகும்.
மேற்குப் பசுபிக் மாகடலிலுள்ள ஏழாயிரத்துக்கு மேற்பட்ட தீவுகளாலான தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்;ஸ், உலகின் 12ஆவது பெரிய சனத்தொகையைக் கொண்டது. ஆசியாவில் அதிகூடிய கிறிஸ்தவர்களைக் கொண்ட பிலிப்பைன்ஸ், உலகின் அதிகூடிய கிறிஸ்தவர்களைக் கொண்ட 5ஆவது நாடாகவும் உள்ளமை அதன் மீதான கவனத்துக்கு மேலுமொரு காரணமாகும். ஆசியாவின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் அது கணிக்கப்படுகிறது. உலகலாவிய நிதி மூலதனம் மெதுவாக ஆசியக் கண்டத்தை நெருங்குகையில், பிலிப்பைன்;ஸ் போன்ற சனத்தொகை மிகுந்த நாடுகள் புதிய சந்தைகளாகின்றன.
பிலிப்பைன்ஸின் பூகோள அமைவிடம் கேந்திரமுக்கியமுடையது. முக்கியமான கடல் மார்க்க வழித்தடத்தில் அமைந்துள்ளமையும் சர்ச்சைக்குரிய தென்-சீனக் கடற்பரப்பை அண்டி அமைந்துள்ளமையும் பிலிப்பைன்ஸின் அரசியல் மாற்றங்களை மேற்குலகு கூர்ந்து கவனிக்கக் காரணமாகின்றன. ஆசியாவிற் கவனங்குவிக்கும் ‘ஆசியாவின் சுழலச்சு’ எனும் அமெரிக்க வெளியுறவு மூலோபாயத் திட்டமிடலுக்கு பிலிப்பைன்ஸும்; மலேசியாவும் முக்கிய நாடுகளாயுள்ளன. அமெரிக்காவுடன் இராணுவ உடன்படிக்கை கொண்ட நாடு என்ற வகையில், பிலிப்பைன்ஸ், அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இவ்வளவு காலமும் இருந்துள்ளது. அண்மைய ஜனாதிபதித் தேர்தலையும் அதற்கு அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்களின் எதிர்வினைகளையும் இப்பின்ணணியில் நோக்கல் தகும்.
ரொட்ரிகோ டுட்டார்ட்டேவின் வெற்றியை விளங்குவது, சிக்கலானதும் தத்துவார்த்தமாகச் சவாலானதுமாகும். இத்தாலியச் சிந்தனையாளர் அந்தோனியோ கிராம்ஸ்கியின் சொற்களில் இதைக் கூறின், ‘பழைய உலகம் மெதுமெதுவாகச் சாவைத் தழுவுகிறது. புதிய உலகம் பிறப்பதற்குப் போராடுகிறது’ எனலாம்.
எழுபத்தொரு வயதாகும் ரொட்ரிகோ டுட்டார்ட்டே, மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். சட்டத்தரணியான இவர், 1986ஆம் ஆண்டு டவாவோ நகர மேயர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற பின், ஜனாதிபதியாகும் வரை அந்நகரின் மேயராவார். அவரது அரசியலின் மையமும் முழுமையும், அவர் மேயராயிருந்த டவாவோ நகரமே. பிலிப்பைன்ஸின்
மிக ஆபத்தான போதைப்பொருள் வியாபாரத்துக்கும் பாவனைக்கும் பாதாள உலகக் கும்பல்களின் சொர்க்கபுரியாயிருந்த டவாவோ நகரை, பிலிப்பைன்ஸின் அதி பாதுகாப்பான நகரமாக மாற்றியமை அவரது சாதனையாகும். இன்று, பின்னிரவில் பெண்களும் குழந்தைகளும் பயமின்றி நடமாடக்கூடிய பாதுகாப்பாக நகராக டவாவோ உள்ளது. எனினும், சட்டவிரோத ஆயுதாரிகளை ஏவலாளர்களாகப் பாவித்துக் குற்றவாளிகளைக் கொன்றதாக, இன்னமும் அவர்மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. கடுமையாகப் பேசும், கலக மனப்பாங்கான தண்டனை விதிப்பாளர் என அறியப்படும் ரொட்ரிகோ டுட்டார்ட்டேயின்; தெரிவு, பிலிப்பினோ மக்களின் தெரிவு பற்றிப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தேர்தல் பிரசாரத் தொடக்கத்தில், ரொட்ரிகோ டுட்டார்ட்டே ஒரு பிரதான வேட்பாளராக கருதப்படவில்லை. பிரசாரத்துக்குப் பணம் திரட்டுவதே சிக்கலாயிருந்தது. ஆனால், பிரசாரம் தொடங்கிச் சில வாரங்களில் அவருக்கு ஆதரவு வலுத்தது. தலைநகர் மனிலாவை மையமாகக் கொண்ட ஆட்சிமுறையை ஒழிப்பேன் என்ற அவரது உறுதிமொழி, கிராம மக்களின் ஆதரவைப் பெற்றது. வன்முறையையும் குற்றங்களையும் ஒழிப்பதே எனது முக்கிய பணி, ஜனாதிபதியாகத் தெரிவானால், நான், டவாவோவில் செய்ததை பிலிப்பைன்ஸ் முழுவதும் செய்வேன் என்ற உறுதிமொழி பெருநகரங்களில் எல்லைகடந்த குற்றச் செயல்களால் துன்புறும் மத்தியதர மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.
டுட்டார்ட்டே ஜனாதிபதியானால், சர்வாதிகார ஆட்சி மீளும். எனவே ஜனநாயகத்தைக் காப்பாற்ற டுட்டார்ட்டேடுக்கு எதிராக வாக்களியுங்கள் என்ற கோஷம் எடுபடவில்லை. தசாப்தங்களாகப் பிலிப்பைன்ஸை ஆண்டுவரும் குறுங்குழுத் தன்னல ஆட்சிகளின் முகத்தில் பிலிப்பினோக்களின் பலமான அறையாகவும் இம்முடிவை மொழிபெயர்க்கலாம்.
பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை, நள்ளிரவில் மது அருந்தத் தடை, வீதி விபத்துக் குறைப்பு போன்றவற்றை, தனது நகராட்சிக் காலத்தில் டவாவோ நகரில் சாதித்ததால் வினைத்திறனுடன் இயங்கக்கூடியவர் என்ற படிமத்தை உருவாக்கியுள்ளார்.
டுட்டார்ட்டேயின் தேர்தல் பிரசாரம், முரண்களும் முரண்நகைகளும் நிறைந்ததாக இருந்தது. குற்றங்களைக் குறைப்பது ஊழலை நிறுத்துவது போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவது என்ற பிரதான கோஷங்கள் வரவேற்பைப் பெற்றன. கூட்டு வன்கலவிக்கு ஆளாகி இறந்த அவுஸ்திரேலிய கன்னியாஸ்திரியை, மேயர் என்றமுறையில் தனக்கே முதலில் தந்திருக்க வேண்டும் என்ற அவரது கூற்று அதிர்ச்சியளித்தது. கடந்தாண்டு, தனது விஜயத்தின் மூலம் மனிலாவில் முன்கண்டிராத வாகன நெரிசலை ஏற்படுத்தினாரென பாப்பரசர் பிரான்ஸ்ஸிஸைக் கடிந்தமை, கிறிஸ்தவப் பெரும்பான்மையுடைய நாட்டில் வியப்பூட்டியது. இத்தகைய கதம்பமாக அவரது தேர்தல் பிரசாரம் இருந்தது.
புகழ்பெற்ற போத்துகேய நாடுகாண் பயணி பேர்டினனட்; மகெலன், 1521இல் பிலிப்பைன்ஸைக் கண்டறிந்;த பின்பு ஸ்பெயினின் கொலனியாக நீண்டகாலம் இருந்த பிலிப்பைன்ஸ், 1898இல் அமெரிக்கக் கொலனியாகிப் இரண்டாம் உலகயுத்தத்தின் போது, ஜப்பானின் பிடியில் இருந்து அமெரிக்க ஆட்சிக்கு மீண்டு, 1946இல் சுதந்திரமடைந்தது. 1965 முதல் பேர்டினன்ட் மார்க்கோசின் சர்வாதிகார ஆட்சிக் கீழ் சீரழிந்தபோதும் மார்க்கோஸுக்கு மேற்குலக ஆதரவு இருந்தது. இக்காலப்பகுதியில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன.
அவற்றுக்கெதிராக மக்கள் போராட்டங்கள் மெது மெதுவாகத் தொடங்கின. மனித உரிமை மீறல்களைத் தண்டிக்க அங்கு சென்ற சர்வதேச நிறுவனங்கள், அங்கு தேசிய விடுதலை நோக்கில் நிகழ்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சிகரப் போராட்டங்களைப் பின்னடைவித்தன. மனிதாபிமானப் பணிகளின் பெயரிற் சென்ற சர்வதேச நிறுவனங்கள் பாரிய அரசியல், பொருளாதார, பண்பாட்டு சீரழிவுகளை ஏற்படுத்தின. அவை மார்க்கோஸ் ஆட்சியில் நிலைக்க உதவின. 1986இல் மக்கள் எழுச்சி மார்க்கோஸின் ஆட்சிக்கு முடிவுகட்டியது.
அதைத் தொடர்ந்த மூன்று தசாப்தங்களாக, ஆட்சியாளர்கள் ஜனநாயகம் என்ற பெயரில் வாக்குறுதிகளை வழங்கிவந்தபோதும் நடைமுறையில் மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை. அதேவேளை, 1969 முதல் இன ஒடுக்குமுறைக்குட்பட்ட முஸ்லிம்களான மொறோ மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மிந்தனாவோவின் மொரோ போராளிகள,; அரசாங்கத்துக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். மார்க்கோஸ் ஆட்சி அவர்களது போராட்டத்தைக் கடுமையாக அடக்கியது. மார்க்கோஸுக்கு
பின் போராட்டம் வலுவடைந்து பேச்சுக்கள் முற்றுக்கு வராததால் இன்னமுந் தொடர்கிறது.
இன்னொருபுறம், ஆசியாவின் மிக நீண்ட விடுதலைப் போராட்டம் பிலிப்பைன்ஸியே நடக்கிறது. பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி, 1968 முதல் இடையறாத போராட்டத்தைத் தொடர்கிறது. அதன் நிறுவனரான ஹோசே மரியா சிசொன் நாடுகடந்து நெதர்லாந்தில் வாழ்கிறார். இச்சிக்கலுக்கிடையே டுட்டார்ட்டேவின் தெரிவு நிகழ்ந்திருக்கிறது. டுட்டார்ட்டே சிசொனின் மாணவன் என்பது இங்கே கூற உகந்தது.
ஜனநாயகமா, சர்வாதிகாரமா என்ற இரு கதையாடல்களடையிலான போட்டியாகத் தெரிந்த ஜனாதிபதித் தேர்தலில், டுட்டார்ட்டேடின் வெற்றியை வெறுமனே மக்கள் சர்வாதிகாரத்தை விரும்புவதன் அறிகுறி எனச் சுருக்க முடியாது. அது ஒரு வகைத் திசைதிரும்பலாகும். செயற்றிறனற்ற தலைவர்கட்கும் வரன்முறையாகவிட்ட ஊழலுக்கும் தொடர்ந்து நிறைவேற்றாத வாக்குறுதிகட்கும் பழக்கப்பட்ட பிலிப்பினோக்கள், வழமையான தெரிவுகளைத் தவிர்த்து ‘வெளியாளாக’க் கருதப்பட்ட ஒருவரை தெரிந்திருக்கிறார்கள். இது புதிதும் புதிரானதும்.
இதை இரண்டு அடிப்படைகளில் விளங்கவியலும். முதலாவதாக, விருத்தியடையும் மூன்றாமுலக ஆசிய நாடுகளில் வலிய ஆட்சியாளர்களின் இடம் தனியானது. அது சமூகங்கள் மாறி, ஜனநாயக விழுமியங்கள் அதிகம் பேணப்படும் சமூகங்களாக அவை மாறிய பின்னும், வலிய தலைவர்களின் தனி இடம் பங்கப்படாமல் உள்ளது. இந்தியாவில் நரேந்திர மோடியின் வருகையும் அத்தகையதே: குஜராத்தின் வளர்ச்சியில் சாதித்ததாகச் சொல்லிய மாயத்தை முழு இந்தியாவிலும் நிகழ்த்துவேன் என்ற அடிப்படையில், மோடியின் வருகை நிகழ்ந்தது. அவ்வாறே பெருவின் சர்வாதிகாரியும் கொடுங்கோலனாகவும் அறியப்பட்ட அல்பேட்டோ ‡பூஜிமோரியின் மகள் கெய்க்கோ ‡பூஜிமோரி பெரு ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை வகிக்கிறார். இதன் இன்னொரு பக்கமாக டுட்டார்ட்டேயின் தெரிவைக் கருதலாம்.
இரண்டாவதாக, சர்வாதிகாரி மார்க்கோஸை விரட்டிய பிலிப்பினிய மக்கள், புரட்சியையடுத்த மூன்று தசாப்தங்களில் ஜனநாயகத்தின் பெயரில் பலவும் நடந்தேறிய பின், ‘ஜனநாயகச் சோர்வு’ மனநிலையில் உள்ளனர். ஜனநாயகப் போர்வையில் குறுங்குழுவினரின் தன்னல ஆட்சி நடந்ததை மக்கள் அறிவார்கள். எனவே கடுந்தொனியில் பேசிப், பேசுவதைச் செய்யும், சொற்சிலம்பங்கள் அற்ற ஓர் உறுதியான உருவகம் பிலிப்பினோ மக்களைக் கவர்ந்தது.
டுட்டார்ட்டேயை,பிலிப்பைன்ஸின் டொனால்ட் ட்ரம்ப் என மேற்குலக ஊடகங்கள் எழுதுகின்றன. ட்ரம்ப் போல, டுட்டார்ட்டே ஒரு கோடீஸ்வரரோ தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனரோ அல்ல. ஆட்;சியாளராகச் சில காரியங்களைச் செய்து காட்டியவர். இவர் மீது மேற்குலக ஊடகங்கள் காட்டும் காழ்ப்பு சில செய்திகளைச் சொல்கிறது. எதிர்பாராதவை எளிதிற் சீரணமாகா. அவிழ்க்கமுடியாத புதிர்களைக் கையாள அவதூறு ஆயுதமாகிறது.
பிலிப்பீனோக்களின் தெரிவுக்கு மிலான் குந்தராவின் பின்வருஞ் சொற்கள் பொருந்தும்: ‘அதிகாரத்துக்கெதிரான மனிதனின் போராட்டமென்பது, மறக்காமலிருப்பதற்கான நினைவின் போராட்டமாகும்’.