(கே. சஞ்சயன்)
யாழ்ப்பாணத்தில் இம்முறை, மே தினப் பேரணிகள் களைகட்டியிருந்தன. அத்தகைய மே தினப் பேரணியொன்றில், வெளியிடப்பட்ட கருத்து, சமூக ஊடகங்களில் பெரும் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய, அந்தக் கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்கள் வெளிப்படுத்திய கருத்துகள், இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளன. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், த.தே.ம.மு, நடத்திய மே தினப் பேரணிகளில் ஒப்பீட்டளவில் இது பெரியது.
த.தே.ம.மு, இதற்கு முன்னர் கரவெட்டியில் நடத்தி வந்த மே தினப் பேரணியை, இம்முறை நல்லூருக்கு நகர்த்தியிருந்தது. காரணம், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். நகரம், நல்லூர்ப் பகுதிகளில் அதற்கு செல்வாக்கு இருப்பது உறுதியாகியிருந்தது. அதைவிட நகரத்தின் மையப் பகுதியை அண்டி, இத்தகைய பேரணிகளை நடத்தும் போதுதான், அது பெரியளவில் பொதுமக்களினதும், ஊடகங்களினதும் கவனத்தை ஈர்க்கும்.
யாழ்ப்பாணத்தில் இம்முறை நடத்தப்பட்ட மேதினப் பேரணிகளில், நல்லூர், சங்கிலியன் பூங்காவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திய மே தினக் கூட்டத்தில் தான், அதிகளவிலான மக்கள் திரண்டிருந்தனர் போலத் தென்படுகிறது.
அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசாவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஸும் வெளியிட்ட கருத்துகள், பலரையும் முகஞ்சுழிக்க வைத்திருக்கின்றன.
இதில், அ.த.கா தலைவர் ஆனந்தராசா உரையாற்றிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இறந்து விட்டார் என்றும், இனிமேல் தமது கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் தலைமையில், தீர்வு ஒன்றைப் பெறுவதற்கு, தமிழ் மக்கள் அணி திரள வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
அடுத்து, த.தே.ம.மு இன் பேச்சாளர் சுகாஸ் உரையாற்றிய போது, இரண்டு ஒப்பற்ற தலைவர்களுக்குப் பிறகு, காலம் உருவாக்கிய தலைவர் என்று பிரபாகரனையும், அவருக்குப் பின்னர் கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் காலம் வெளிப்படுத்தியுள்ள தலைவர்தான் கஜேந்திரகுமார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இவரே தமிழ்த் தேசத்தின் கடைசித் தலைவன் என்றும், இந்தத் தலைவனின் பின்னால், அணி திரள வேண்டும் என்றும் சுகாஸ் கோரியிருந்தார்.
இந்த இருவரினதும் கருத்துகளும் கடுமையான விமர்சனங்களுக்கும் எதிர்வினைகளுக்கும் உள்ளாகியிருக்கின்றன. இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமான, முதலாவது விடயம், விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மரணம் பற்றியது. இரண்டாவது, அவருக்கு நிகரான தலைவராக கஜேந்திரகுமாரை முன்னிறுத்த முற்பட்டது.
2009 மே மாதம், முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கற்பனாவாத நிலைக்குள், தமிழர்களை வைத்திருக்கப் பலரும் முயன்று வந்திருக்கிறார்கள். அப்போது, பிரபாகரனின் மரணம் பற்றிக் கூறியவர்கள், தமிழினத் துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டனர். ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரும், அதே நிலைக்குள் தான், தமிழ் மக்களை வைத்திருக்கப் பலரும் முனைகின்றனர். இது முற்றிலும், சுயநல அரசியல் நோக்கிலானது என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை, அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான ஒரு பொறியாக, விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணத்தைப் பயன்படுத்துவதற்குத் தமிழர் தரப்புத் தவறி விட்டது.
ஒன்பது ஆண்டுகளாக, அதுபற்றி அவர்கள் சிந்திக்கவேயில்லை. பிரபாகரன் பற்றிய கற்பனாவாத நிலைப்பாட்டில் இருந்தவர்கள் பலருக்கும், இப்போது உண்மை தெரியும். ஆனால், அதை வெளிப்படுத்தும் தைரியம் யாருக்கும் இல்லை.
இப்படியான நிலையில், மே தின மேடையில், எதற்காகப் பிரபாகரனை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இழுத்தது?
இது சூட்சுமான விடயம். தமிழ் மக்களின் தலைவராக, பிரபாகரன் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அவர் இல்லை என்பதை வெளிப்படுத்தினால் தான், இன்னொருவரை அந்த இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும்.
அதாவது, கஜேந்திரகுமாரை அந்த இடத்துக்குக் கொண்டுவர வேண்டுமாயின், பிரபாகரனின் சகாப்தத்துக்கு முடிவு கட்ட வேண்டும். அதைத்தான் மே தின மேடையில், செய்ய முயன்றிருக்கிறார்கள். தேர்தல் மேடையில் இதைக் கூறினால் வாக்குகள் விழாது என்பதால், மே தின மேடையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய பேரவை என்று மாறிமாறி வெவ்வேறு பெயர்களில், ‘ஒளித்து விளையாடும்’ தரப்புகள் என்னவோ, ஒன்றுதான் என்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியம்தான்.
த.கா தலைவர் ஆனந்தராசா, பிரபாகரனின் மரணம் பற்றிக் கூறியதும், அதற்கு எதிர்வினைகள் வரத் தொடங்கியதும், அவரது தனிப்பட்ட கருத்து அது என்று நழுவத் தொடங்கியிருக்கிறது மக்கள் முன்னணி.
இதுபற்றி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன், ஆனந்தராசாவின் கருத்துகளைப் பற்றி மட்டும்தான் கூறியிருக்கிறாரே தவிர, தமது கட்சியின் பேச்சாளரான சுகாஸின் கருத்துகளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்த விவகாரம், தனியே பிரபாகரனின் மரணம் பற்றிய கருத்தை வெளியிட்டதால் மாத்திரம், பூதாகாரமாகவில்லை.
பிரபாகரனுக்குப் பிந்திய ஒப்பற்ற தலைவனாக, காலம் தந்த கடைசித் தலைவனாக, கஜேந்திரகுமாரைப் பிரகடனப்படுத்த முற்பட்டதுதான் அதிகம் சர்ச்சையை உருவாகியது. அதுவும், உள்ளூராட்சித் தேர்தல் மூலம், காலம் தந்த தலைவனாக, அவரை அடையாளப்படுத்த முற்பட்டிருந்தார் சுகாஸ்.
ஒரு கட்சி, தனது தலைவனை ஒப்பற்ற தலைவனாகச் சித்திரிப்பது வழக்கம். அவ்வாறான நிலையில் தான், மே தினக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வர்ணிக்கப்பட்டாரா என்று பார்க்க வேண்டியுள்ளது.
நிச்சயமாக அவ்வாறு இல்லை. தமிழினத்தின் கடைசித் தலைவனாக, ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா, வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோருக்குப் பின்னர், காலம் தந்த தலைவனாக, அவரை அடையாளப்படுத்தியுள்ளனர்.
ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா, வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்றவர்கள், ஒவ்வொரு காலகட்டத்தில், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்தவர்கள்.
ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா, ஆகியோருடன் கஜேந்திரகுமார் ஒப்பீடு செய்யப்படுவதையிட்டு, யாரும் எதிர்க்குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை.
ஆனால், பிரபாகரனுடன் அவரை ஒப்பீடு செய்து, அவருக்கு நிகரான தலைவராக, அவருக்குப் பிந்திய தலைவராகப் பிரகடனம் செய்ய முற்பட்டதுதான், கடுமையான எதிர்வினைகளுக்குக் காரணமாகியுள்ளது.
மாற்றுத் தலைமையை உருவாக்கும் தகுதி, தமக்கு மாத்திரமே உள்ளது என்று கூறி வந்துள்ள த.தே.ம. மு, இந்த இலக்கை முன்வைத்துத் தான், அத்தகைய கருத்தை வெளியிட்டதா என்ற சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் வெளியான காட்டமான எதிர்ப்புகளால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆடிப்போய் விட்டது. இதனால் தான், உடனடியாகவே, கட்சியின் செயலாளர் கஜேந்திரன், அப்படியான எண்ணம் தமது கட்சியின் தலைவருக்கு இல்லை என்றும், தமிழினத்தின் தலைவராகத் தன்னை யாரும் ஒப்பீடு செய்ய வேண்டாம் என்று கூறியிருப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த மறுப்பை, ஏன் அதே மேடையில் அவர்கள் வெளியிடவில்லை; உடனடியாகவே வெளியிட்டிருக்கலாமே என்று, பலரும் கேள்விகளை எழுப்புகின்றனர். அதில் நியாயமும் உள்ளது.
அதேவேளை, பிரபாகரனின் மரணம், பிரபாகரனுக்குப் பிந்திய தலைவனாக கஜேந்திரகுமாரைப் பிரகடனம் செய்வதற்கான ஒரு வெள்ளோட்டமாகத் தான், இந்த அறிவிப்பை அந்தக் கட்சி வெளியிட்டது என்று கருதுவோரும் உளர்.
அது உண்மையாயின், ‘பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன’ கதையாகத்தான் முடிந்திருக்கிறது. ஏனென்றால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இப்போது எதிர்வினைகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல், பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு வந்திருக்கிறது.