எதிர்ப்புகள் வெளியில் தெரியாமலும், எதிர்ப்பாளர்கள் செல்வாக்குப் பெறாமலும் புதின் எவ்வாறு கையாள்கிறார்? வழக்கறிஞர் கரின்னா மாஸ்கலேன்கோ விவரிக்கிறார். “தனக்கு எதிராகச் செயல்பட நினைக்கும் அனைத்துத் தொழிலதிபர்களையும் சிறையில் தள்ள வேண்டியது அவசியமில்லை; மிகவும் பணக்காரரும் சுதந்திரமானவரும் அனைவருடனும் நல்ல தொடர்பில் உள்ளவருமான ஒருவரை மட்டும் சிறையில் தள்ளினால் போதும், மற்றவர்களுக்கு அது எச்சரிக்கையாக அமைந்துவிடும். தன்னைக் கடுமையாக விமர்சிக்கும் எல்லா பத்திரிகையாளர்களையும் ஒடுக்க வேண்டிய அவசியமே இல்லை. தலைசிறந்தவரும், மிகுந்த துணிச்சல் உள்ளவருமான ஒரு பத்திரிகையாளரை ஒடுக்கினால் போதும்; மற்றவர்கள் பாடம் படித்துவிடுவார்கள் என்று நம்புகிறார் புதின்” என்கிறார் மாஸ்கலேன்கோ. இந்த வியூகம் ஒன்றும் புதுமையானதில்லை. காலங்காலமாக யதேச்சதிகாரிகள் கையாள்வதுதான்.
அராஜக அடக்குமுறை
எதிர்க்கட்சி வரிசையிலேயே மிகவும் முக்கிய மானவராக இருந்த போரிஸ் நெம்சோவ் 2015-ல் கொல்லப்பட்டார். அந்தப் படுகொலையின் பின்னணியில் ‘கிரெம்ளின்’ இருப்பதாகப் பத்திரிகைகள் எழுதின. நெம்சோவுக்குப் பிறகு புதினை எதிர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் அலெக்ஸி நவால்னி. அவர் மீது வெவ்வேறு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு சிறைக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். அது மட்டுமல்ல; இன்னதென்று இனம் காண முடியாத ரசாயனத் திராவகங்களும் அவர் மீது ஊற்றப்பட்டன. ரஷ்ய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் புதினைக் கடுமையாக விமர்சித்துவந்தவருமான டெனிஸ் வொரனன்கோவ் போன்றவர்கள் அந்நிய நாடுகளின் தலைநகரங்களில் பட்டப்பகலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இப்படியான கொலைகள், அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் சிலர் ஜனநாயகத்துக்காக உறுதியாக நிற்பதும் தொடர்கிறது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த லுபோவ் சோபல் குறித்து ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் மாஸ்கோ நிருபர் ஆண்ட்ரூ ஹிக்கின்ஸ் எழுதியதைப் படிக்கப் படிக்கப் பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது. 31 வயதான சோபல், மாஸ்கோ நகர வழக்கறிஞர், புதினைக் கடுமையாக விமர்சித்த நவால்னியின் சகா. புதினுக்கு மிகவும் வேண்டியவரான யெவ்ஜெனி பிரிகோஷின் செய்த ஊழல்களை ஒன்றுவிடாமல் ஆராய்ந்து பின்தொடர்ந்தார். 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்காளர்களின் மனங்களைத் திசைதிருப்பும் வகையில் தொடர்ந்து டிரால்செய்ததில் முக்கியப் பங்கு பிரிகோஷினுக்கு உண்டு. பிரிகோஷினின் ஊழல்களைப் புலனாய்வுசெய்த செய்தியாளர்கள் பலர் மேலே அனுப்பப்பட்டனர்.
எலியட் நெஸ் போல சோபலும் தனது புலனாய்வில் தீவிரமாக இருந்தவர். நெஸ் கையில் கத்தியுடன் இருந்தார், சோபலிடம் அது இல்லை, துப்பாக்கியும் இல்லை, பேட்ஜும் இல்லை, அவரைக் காக்கச் சட்டமும் இல்லை. ஆனால், எப்போதும் புதினுக்கு எதிரான போராட்டங்களில் அவர் முன் வரிசையில் நிற்கிறார்.
நிழலுலக நண்பர்கள்
சோபலின் கணவருக்கு விஷம் ஊட்டப்பட்டது. அவரைத் தாக்க வந்தவர்கள் சோபலின் முகத்தில் கருப்புநிற திரவத்தைப் பூசினார்கள். அதை ‘பிரமிதியஸ்’ என்றும் அழைப்பார்கள். அது நிமிஷத்துக்கு நிமிஷம் தீவிரமாகி இறுதியில் உயிரைப் பறித்துவிடும் ரசாயன நஞ்சு. அதன் பாதிப்பிலிருந்து அவர் மீட்கப்பட்டார். காவல் துறை அவரைப் பெண்ணென்றும் பாராமல் அவருடைய அலுவலகத்திலிருந்து காவல் நிலையத்துக்கு வீதியில் இழுத்துவந்தது. “அரசை எதிர்ப்பவர்களை இணங்கவைக்கவோ பணியவைக்கவோ முடியாது என்கிற நிலையில், அவர்கள் கொல்லப்படுகிறார்கள். தன்னை எதிர்ப்பவர்களைத் தீர்த்துக்கட்டுமாறு புதின் உத்தரவிட வேண்டிய அவசியம்கூட இல்லை, அவருடைய நிழலுலக நண்பர்கள் தங்களுடைய நண்பரின் நிம்மதிக்காக இதை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து முடிப்பார்கள். பலமற்றவர்களைப் பலசாலிகள் அச்சுறுத்துவதைச் சிறு வயது முதலே எதிர்த்துவந்திருக்கிறேன். சிறு வயதிலிருந்தே நேர்மையாக நடக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்டவள் நான். எனவே, எனக்கு அச்சமில்லை!” என்கிறார் சோபல்.
எளிதில் அடங்க மறுக்கும் எதிர்ப்பாளர்கள் மட்டும் சர்வாதிகாரிகளின் வீழ்ச்சிக்குக் காரணமாவதில்லை, சர்வாதிகாரிகளால் கொல்லப்படும் அசாதாரணமான மக்கள் தலைவர்களும், சர்வாதிகாரிகளை வீழ்த்திவிடுவார்கள். தென்னாப்பிரிக்காவின் ஸ்டீவ் பைகோ, பிலிப்பின்ஸ் நாட்டின் பெனிக்னோ அகினோ, போலந்தின் ஜெர்சி பொப்பிலுஸ்கோ போன்றவர்களால் சர்வாதிகாரிகள் எப்படி வீழ்ந்தார்கள் என்பதை வரலாறு சொல்கிறது.
சரியும் செல்வாக்கு
நெம்சோவ் இப்போது கிரெம்ளினை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார். செர்கி மேக்னிட்ஸ்கி, நடாலியா எஸ்டிமிராவா, அலெக்சாண்டர் லிட்வினன்கோ, அன்னா பொலிடிகோவ்ஸ்காயா போன்றோர் புதின் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட அரசியல் எதிரிகள். தொடர்ந்து உயர் பதவியில் நீடித்திருக்க புதின் கடைப்பிடிக்கும் உத்தி இதுதான்: அடிவருடிகளுக்குப் பணத்தை அள்ளி வீசு; எதிரிகளுக்குப் பீதியூட்டு; மக்களிடம் ‘எதிரிகளால் ஆபத்து’ என்ற தேசியவாதப் பிரச்சாரம்செய்! இவ்வளவுதான்… ஆயுட்காலம் முழுக்க ஆட்சியில் இருந்துவிடலாம் என்று நம்புகிறார் புதின். ஆனால், சர்வதேச ஒதுக்கல், தொடர்ந்து தேங்கிய நிலையில் உள்ள பொருளாதாரம், மக்களால் விரும்பப்படாத ஓய்வூதியச் சீர்திருத்தங்கள், நம்பகத்தன்மையற்ற வெளிநாட்டுச் சாகசங்கள் என்று ஆட்சிக்கு எதிரான அதிருப்தியும் வெறுப்பும் வளரும் வேகம் மோசமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டன.
முக்கியமான மாற்றம் இளைஞர்களிடம் வெளிப்படுகிறது. ஹாங்காங்கைப் போல ரஷ்யாவிலும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் இளைஞர்கள்தான் முன்னிலை வகிக்கின்றனர். புதினை நம்பும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 30% ஆக இருந்தது; இப்போது 19% ஆகச் சரிந்திருக்கிறது. ஆயுட்காலம் முடியும் வரையில் உயர் பதவியில் இருக்க விரும்பும் புதினுக்கு இது நல்ல சகுனம் இல்லை. கடந்த 20 ஆண்டுகளில் இருந்திராத வகையில் முதல் முறையாக புதினின் வீழ்ச்சிக்கு வழிகோலக்கூடிய அனைத்து அம்சங்களும் இணைந்துவருகின்றன. அதில் முக்கியத்துவம் வாய்ந்தது சோபல் போன்ற பெண்களின் வீரம். “வாழ்க்கையில் இனிமை எது, பயங்கரம் எது என்று தெரிந்து வைத்திருந்தும், ‘வருவது வரட்டும்’ என்று அச்சமில்லாமல் விளைவுகளைச் சந்திக்க மக்கள் துணிந்துவிடும்போது வரலாறு மாறுகிறது” என்று கிரேக்க அறிஞர் பெரிக்ளஸ் கூறியது நினைவுக்குவருகிறதா? எனக்கு பெரிக்ளஸ் கூறியதை சோபல் நினைவூட்டுகிறார்.
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’,
தமிழில்: சாரி