இதற்கு இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல. சுதந்திரத்தின் பின்னரான காலத்தில் இருந்து, தமிழ், சிங்களம் ஆகிய இரு தேசிய இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் சிங்களப் பெரும்பான்மையினரின் விட்டுக்கொடுப்பற்ற ஏகாதிபத்திய மன நிலையும், ஆயுதப்போராட்டத்தில் நிறைவுற்றிருந்தது.
ஆயுதப்போராட்டம் மௌனித்ததன் பின்னரான காலச் சூழலில், அகிம்சை வழியிலான போராட்டங்களை முன்னெடுக்கத் தலைப்பட்ட தமிழர்கள், ‘எழுக தமிழ்’ என்ற உணர்வு ரீதியானதும் தேசியம் சார்ந்ததுமான நிகழ்வொன்றை, வடக்கு, கிழக்கில் ஏற்பாடு செய்திருந்ததுடன், தமிழ் மக்களின் பேராதரவையும் பெற்றிருந்தது.
மத்தியில் ஆட்சிப்பீடமேறிய ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கம், இலங்கையின் மற்றுமொரு தேசிய இனமான முஸ்லிம்கள் மீதும் தனது கோர முகத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, இன்று தமிழ், முஸ்லிம் ஆகிய இரு சிறுபான்மை இனங்களும், தமக்கான நீதியைச் சர்வதேசத்திடம் கோர வேண்டிய தேவை ஏற்பட்டது.
இதன் ஒரு கட்டமாக, வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில், பாரிய எழுச்சியாக ‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ வரையான பேரணி ஒழுங்கமைக்கப்பட்டது. இப்பேரணி, தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வு ரீதியான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாகவும் இலங்கை அரசாங்கத்தின் ஏதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்து, அரசியல் கலப்பின்றி சிவில் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.
மக்கள் ஆதரவு குறித்து ஏக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணிக்கு, மக்கள் அலை அலையாக வந்து, பங்கேற்று அதைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஏற்பாட்டாளர்களுக்குப் போனமை பேரணிக்குக் கிடைத்த வெற்றியாகும்.
வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய கட்சிகளின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணி, பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட இருந்தபோது, பொலிஸார் நீதிமன்றங்களின் ஊடாகத் தடை உத்தரவுகளை மாறி மாறிப் பெற்றிருந்தனர். இவை, பேரணிக்குத் தடையாக இருக்கும் என எண்ணிய பொலிஸாருக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், பேரணி ஆரம்ப நாளன்று மக்கள் மிகவும் ஆக்ரோசத்துடன் பங்கேற்றிருந்தனர்.
சாதாரணமாக ஆரம்பிக்கப்பட இருந்த பேரணியை, நீதிமன்றங்களின் தடை உத்தரவுகள் ஊடாக, பெரும் பூதாகாரமாக்கிய பொறுப்பு, பொலிஸாரையே சாரும்.
பொலிஸாரின் இத்தகைய தடையை ஏற்படுத்தும் செயற்பாடுகள், தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில், அரசாங்கத்துக்கு எதிரான மனோ நிலையை, மேலும் உரமேற்றி, மக்களை அமோகமாகப் பங்கேற்கத் தூண்டியது.
இளைஞர்களின் பங்கேற்பு என்பது, உணர்வு ரீதியாக அமைந்திருந்தமையை அவதானிக்க முடிந்திருந்தது. நீண்ட கால இடைவெளிக்கு பின்னர், உரிமைசார் விடயமொன்றுக்காக நடத்தப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டமொன்று, மக்களை உணர்வோடு பங்கேற்க வைத்திருந்தமையானது வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளையே சாரும்.
குறித்த போராட்டத்துக்குத் தலைமைதாங்கிய வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் குழுவில் முன்னோடியாகச் செயற்பட்ட நல்லூர் தவத்திரு வேலன் சுவாமிகள் நடந்து கொண்ட விதம், அனைவராலும் வரவேற்கப்பட்டது.
இத்தகைய நெடிய தூரப் பயணத்தில், எந்த சலிப்பும் இல்லாமல், குறித்த போராட்டத்தை வழிநடத்திச் செல்வதென்பது, பாரிய விடயமாகக் கருதப்படும் நிலையில், வேலன் சுவாமிகளும் மத தலைவர்களும் தடைகளுக்கு மத்தியில் வழி நடத்திய விதம், அனைவராலும் வரவேற்கப்பட்டது.
இவர்களது இந்த உந்துதலே, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆழ உணர்வுகளைத் தட்டி எழுப்பியிருந்தது. அரசாங்கத்தின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு மத்தியில், இவ்வாறான ஓர் அகிம்சை வழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தடைகளும் அவர்கள் மீதான அச்சுறுத்தல்களும், மேலும் மேலும் போராட்டக்காரர்களை வலுவடையச் செய்ததுடன் அச்சம் என்ற உணர்வைத் தவிடு பொடியாக்கியது.
வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், நிலங்கள் அபகரிப்பு, கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக, அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி, அவற்றைக் கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் தன்னெழுச்சியுடன் இடம்பெறும் இப்போராட்டத்தில் முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டமை இப்போராட்டத்துக்குக் கிடைத்த மற்றுமோர் அங்கிகாரம் ஆகும்.
தமிழர்கள் எந்த அளவுக்கு உணர்வு ரீதியாக ஆதரவை, இந்தப் பேரணிக்கு வழங்கி இருந்தனரோ, அது போலவே முஸ்லிம்களும் தமது ஆதரவை நல்கியிருந்தது மாத்திரமின்றி, பேரணியில் உணர்வு ரீதியாகக் கலந்துகொண்டிருந்தனர்.
வடக்கு, கிழக்கில் தமிழ் இளைஞர்களின் போக்கு, பிழையான திசையில் செல்வதாகவும் சமூகத்துக்குப் பிறழ்வான செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வரும் நிலையில், இளைஞர் படையொன்று ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி’ வரையான போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை, சித்திரிக்க முடியாத அளவுக்கு நம்பிக்கையை தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
வானைப் பிளந்த கோசங்களும் ‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ என்ற ஆவாவும் ஒன்று சேர்ந்து காணப்பட்ட இந்த மக்கள் எழுச்சி, தென்னிலங்கை அரசாங்கத்துக்கு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. பெரும்பான்மையும் பௌத்த சிந்தனாவாதமும் தென்னிலங்கை பெரும்பான்மை மக்களிடம் எடுபட்டாலும் கூட, அது ஒரு போதும் தமிழ், முஸ்லிம் மக்களிடம் எடுபடாது என்பதுடன், வெறும் அபிவிருத்தியை மாத்திரம் இந்த மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதையும் பறைசாற்றியுள்ளது.
கறுத்த உடையும் தலையில் கட்டிய கரிய துண்டும், பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்களை ஒரு புரட்சியாளர்களாகவும் தம் தாயகம் மீது வேட்கை கொண்டவர்களாகவும் காட்டி நின்றதுடன், இரு இனக்குழுமங்கள் தமக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட தேசத்தில் வாழுகின்றன என்ற செய்தியை சர்வதேசத்துக்கு உரக்கவும் கூறியுள்ளது.
தமிழர் தாயகப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பகுதிகளாக காணப்படும் பதவியா, மணலாறு போன்ற ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்களில், திட்டமிட்டுக் குடியேற்றப்பட்ட பகுதிகளினூடாக வருகின்ற போது, பேரணி பாரிய சவாலைச் சந்தித்திருந்தது.
அங்கு பொலிஸாரை விட, குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களின் சில செயற்பாடுகளால், பேரணியில் கலந்துகொண்டவர்கள் சில இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்திருந்தது. எனினும், இவற்றையெல்லாம் கடந்து வடக்குக்குள் முல்லைத்தீவை வந்தடைந்தபோது, யுத்தத்தின் கோரத்தாண்டவத்தைக் கண்டு மீண்டெழ முயற்சிக்கும் முல்லை மக்களின் பேராதரவு, பேரணிக்கு மேலும் வலுச்சேர்த்தது மாத்திரமல்ல, வடக்கு மக்களையும் ஒரு கணம் உணர்வு ரீதியாகத் தூண்டியிருந்தது.
இதன் வெளிப்பாடே வவுனியாவில் அலைகடலென தமிழ், முஸ்லிம் மக்கள் அணி திரளக் காரணமாகவும் அமைந்திருந்தது. எதிர்பாராத மக்கள் அலை! அதற்குள் உத்வேகம் கொண்ட இளைஞர்களும் யுவதிகளும், பெரும் எழுச்சியுடன் வவுனியா நகர்ப் பகுதியை வலம் வந்தபோது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கண்ணீர், பேரணியில் வந்தவர்களின் கண்களை, ஒரு கணம் நனைக்க வைத்து விட்டது எனலாம்.
இந்நிலையில், மன்னாரிலும் பாரிய உணர்வலையுடன் மக்கள் அணி திரண்ட நிலையில், கிளிநொச்சியில் விசேட தேவைக்குட்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என அனைவருமே மஞ்சள், சிவப்புக் கொடிகளை ஏந்தியவாறு, பேரணிக்கு ஆதரவு கொடுத்ததுடன் மாத்திரமின்றி, வரலாறு காணாத மக்கள் வெள்ளம், கிளிநொச்சி நகரில் கூட்டியிருந்தமை சர்வதேசத்தின் தலையீட்டின் தேவையை உணர்த்தி இருக்கின்றது.
இலங்கை தேசத்தின் ஆட்சி அதிகார வர்க்கம், சிறுபான்மையினர் மீது மேற்கொண்டு வரும் அடக்கு முறைகளுக்கும் பேரினவாத சிந்தனையின் தாக்கத்துக்கும் சிறுபான்மையினரின் ஒன்றுமையைப் பறைசாற்றி நிற்கும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் முடிவல்ல; இது தமிழர் அரசியலில், சிவில் சமூக அமைப்புகளின் ஊடாகப் புதிய பாதையைத் திறந்துள்ளது என்பதே உண்மை. தமிழ் அரசியல் தலைமைகளை விட, சிவில் அமைப்புகள் வடக்கு, கிழக்கில் பலம் பெற வேண்டும் என்பதையும் அதைத் தமிழ் மக்கள் ஆதரிக்கின்றனர் என்பதற்கும் எடுத்துக் காட்டாக இந்தப் பேரணி அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை.
எனவே, கால ஓட்டத்தில் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்பு, பலமான ஒரு கட்டமைப்பாக உருவெடுத்து, தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைக்கான குரலாக, ஓங்கி ஒலிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.