இவ்வாறான சில கருத்துகளை முன்வைப்பதற்கு விருப்பமில்லை; மனம் இடங்கொடுக்கவில்லை என்றாலும், இத்தகைய யதார்த்தபூர்வமான கருத்துகளைப் பதிவு செய்தாகவேண்டும் என்ற தேவை இருக்கத்தான் செய்கின்றன.
இனவாதமும் இனப்பற்றும், நாட்டை இழந்துவிடுவோம் என்ற அச்சமும் பெரும்பான்மைச் சிங்களவர்களிடம் இருப்பதன் வெளிப்பாடே, இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் முடிவாகும்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் தோல்வி கண்டதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்வதற்கு, எல்லோரும் முனைகின்றனர்; ஆனாலும் அது ஒரு விளைவே தவிர; காரணம் அல்ல!
இலங்கையில், கடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில், புதிதாக உருவான ஒரு கட்சியின் வேட்பாளர், நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாகிறார். இதே போன்றதொரு வரலாறு, 2008இல் கிழக்கிலும் நடந்தேறியது. புதிதாக உருவான கட்சியான, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முதலமைச்சரானார். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும், நாட்டில் ஏற்பட்ட அரசியல் இடைவெளிகள்தான் காரணமாகும்.
யுத்தம் முடிவடைந்து, நாட்டில் ஏற்பட்டிருந்த மகிழ்ச்சியுடனான குழப்பமான சூழலில், ஐக்கிய தேசியக் கட்சியும் சந்திரிகா, மங்கள சமரவீர உள்ளிட்ட தரப்பினரும் இணைந்து, வெளிநாடுகளிலிருந்த நிலைமை மாற்றத்துக்குமாகப் புதிதாக, ஜனாதிபதியை 2015இல் ஏற்படுத்தினர்.
அதன் பின்னர், தெற்கிலும் சிங்கள மக்கள் மத்தியிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, மஹிந்தவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராகக் கடந்த ஒக்டோபரில் நியமித்தார். அது, சட்டச் சிக்கலாக மாறி, பதவி மீளப் பறிக்கப்பட்டது.
அந்தவகையில், கடந்த ஐந்து வருடங்களை, மைத்திரிபால சிறிசேன திருப்திகரமான செயற்பாடுகள் அற்றதாகவே கடத்திவிட்டார். இது ஒரு வகையில், ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாதகமானதாகவே இருந்தது. இந்தப் பாதகமும் கோட்டாபயவுக்கான ஆதரவாக மாறிவிட்டது.
இந்த நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் இயலாமையால் உருவானதுதான் பொதுஜன பெரமுன என்னும் புதிய கட்சி ஆகும்.
அதே போன்றுதான், கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய பகிஷ்கரிப்பின் காரணமாகத் தலை தூக்கியிருப்பதே பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகும்.
இப்போது, புதிதாக முளைவிட்டிருக்கின்ற வியாழேந்திரனின் தமிழர் முற்போக்கு முன்னணியும் அப்படித்தான். இதற்கு இடம் கொடுப்பதா இல்லையா என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவாகும்.
இது இவ்வாறு இருக்க, காலம், நேரம் போன்ற சாதக பாதகங்களின் அடிப்படையில், தயார்படுத்தல்களின் பின்பே, ஒரு போட்டியில் ஈடுபடுவதற்குத் தயாராக வேண்டும். புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர், ஒருவகையில் தன்னை மிகைப்படுத்தி, அளவிட்டுக் கொண்டமையின் வெளிப்பாடே இந்தத் தோல்வி.
ஆனாலும், தமிழர்கள் தங்களுடைய எதிர்ப்பையும், சிங்கள மேலாதிக்கத் தலைவர் ஒருவர் தமக்குத் தேவையில்லை என்பதன் கருத்தையும் சொல்லிவிட்டனர்.
அதேபோன்று, சிங்கள மக்களைப் பொறுத்தவரையில், கடந்த கால 70 வருடகால யுத்தத்தின் பிரதி பலிப்பானது, தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பயங்கரவாதத்துக்கும் எதிரானவர்களாகவே அவர்களை வளர்த்துவிட்டிருக்கிறது. இது அவர்களைச் சிறியதொரு விடயத்துக்கும் அச்சப்பட வேண்டியவர்களாக மாற்றிவிட்டிருக்கிறது; நடந்து முடிந்த தேர்தலில், தமிழர்களுடன் இணைந்து வாழுகின்ற பிரதேசங்களான திருகோணமலை, அம்பாறை, வவுனியா, நுவரெலியா போன்ற பிரதேசங்களில், சாத்வீக குணமுள்ள, வன்முறைக் கலாசாரம், அடக்குமுறைகளுக்கு எதிரானவரையே அதிகமான சிங்களவர்கள் கூட விரும்பியிருக்கின்றனர் என்ற விடயம் வெளிப்படுகிறது.
ஆனால். சிங்கள மேலாதிக்கவாதத்தின் வெளிப்பாடு, அவர்கள் செறிந்து வாழும் அத்தனை மாவட்டங்களிலும் வெளிப்பட்டிருக்கிறது.
சிங்களவர்களிடமிருக்கின்ற அச்ச உணர்வை ஏப்ரல் 21 உதித்த ஞாயிறு தாக்குதல் மேலும் ஒருபடி மேலோங்கச் செய்தது. ‘கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்’ போன்று, குண்டு வெடிப்பு நடைபெற்று முடிந்தபின்னர், அவர்களைக் கைது செய்து, மீண்டும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் அழுத்தங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டமை போன்ற காரணங்கள் இருந்தன.
இதுவே, உண்மை இயலாதவர்களின் கைகளில் அரசாங்கத்தைக் கொடுத்துவிட்டோமே என்ற சிங்களவர்களின் குற்ற உணர்வும் கூட, புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். அதே போன்று, விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகக் கூடாது, அவர்களுக்கான வாய்ப்பை வழங்கக்கூடாது என்ற வகையிலான அச்ச உணர்வும் சிங்கள மக்களை உசுப்பி விட்டது.
தமிழர்களின் பக்கம் அமைதி வேண்டிய, அச்சமற்ற சூழல் இருக்க வேண்டும் என்பது போல, 70 வருடகாலப் பிரச்சினையை, 35 வருட ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள் என்ற வகையில், மஹிந்த குடும்பம் மீது இருக்கின்ற பேரன்பான ஆதரவை யாரும் அசைத்துவிட முடியாது. இது ஒருவகையில், வரலாற்று மாற்றமாக இருக்கத்தான் போகிறது.
இந்த இடத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், புதிய ஜனாதிபதியின் வெற்றியை அடுத்து, “வடக்கு, கிழக்கு மக்கள், இந்த ஜனாதிபதித் தேர்தலிலே, தமது இந்த வாக்களிப்பின் மூலம், பிரத்தியேகமான செய்தி ஒன்றைப் புதிய ஜனாதிபதிக்குச் சொல்லியிருக்கின்றார்கள். அந்தச் செய்தியை, அவர்கள் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற ஆணையைப் புதிய ஜனாதிபதி கருத்திற்கொண்டு செயற்படுவார் என்று நம்புகின்றோம்” என்று ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார்.
இராஜதந்திர ரீதியாகவும் தப்பித்துக் கொள்ளும் வகையிலும் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. இது போன்று, பலரும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
2015ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், அளிக்கப்பட்ட வாக்குகளைப் பின்தள்ளும் வகையில் வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், தங்கள் ஒன்றுபட்ட வாக்களிப்பைக் காண்பித்திருக்கின்றனர்.
எவ்வாறாயினும், தமிழ் மக்களின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும். எல்லோரும் சொல்வது போன்று, தமிழ் மக்கள் அபிவிருத்தி என்ற விடயப்பரப்புக்குள்ளும், தொழில்வாய்ப்பு என்பதற்குள்ளும் சிக்குண்டவர்கள் அல்ல. உரிமையும் ஜனநாயகப் போராட்டமுமே முக்கியமானது என்பது இதற்குள் இருக்கின்ற செய்தி.
ஒருவகையில், இலங்கையின் வடக்கு, கிழக்கில் இணைந்து செயற்பட்ட 13க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கும், இது ஒரு செய்திதான். இதனை அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.
தமிழர்களின் வரலாற்றில் திருப்புமுனைகளாக அமைந்த, 2004 ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில் நடைபெற்ற இனமுரண்பாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.
2015 தேர்தல் பெரும்பான்மைக் கட்சிகள் இணைந்தாலும், நமது நாட்டில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்வதில் பிரச்சினை இருக்கும் என்பதனை நிரூபித்தது. அது போன்று, இம்முறை நடைபெற்ற தேர்தல் எதுவுமற்றவர்களாக எந்த விடயத்துக்கும் தேவையற்றவர்களாகவே காட்டிவிட்டது. ஆனாலும், நாங்கள் பிரிந்தே இருக்கிறோம் என்பதைச் சொல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
இவ்வாறான நிலையில், தமிழர்களின் இன உணர்வு, சுயநிர்ணயம் என்பவை சார்ந்த, ஒரு முனைக்கு நேர் எதிராகச் சிங்களவர்களின் இன உணர்வும் பெருந்தேசிய மேலாதிக்கமும் மறுமுனையாக நின்று கொண்டே இருக்கும்.
இதற்கும் நாம், போராட்டக் குணத்துடன் இருப்பதா, சாத்வீகக் குணத்துடன் இருப்பதா என்பதும் நம்முடைய கைகளிலேயே இருக்கிறது. சிங்களவர்கள் எப்போதும் தமிழர்களுக்கான உரிமைகளைச் சமத்துவத்தைச் சமஷ்டி ஆட்சியை வழங்கப் போவதில்லை. அப்படியானால், இந்தத் தேர்தலும் தோல்வி என்ற முடிவுக்கே வரமுடியும். அதுவே உண்மையும் கூட.
எல்லோரும் சொல்வது போல, போராட்டத்தில் தோற்றுவிட்டடோம் என்பதை ஏற்றுக் கொண்டு, தோற்றவர்களாக இலங்கை நாட்டில் வாழத் தலைப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதே, இதன் மறுவகையான வடிவம்.
கோட்டாபய நாட்டின் ஜனாதிபதியானால் அச்சம் வலுக்கும்; வன்முறைகள் வெடிக்கும்; அமைதி குலையும் என்றவாறான கருத்துகளை, நம் மனங்களில் இருந்து பிடுங்கி வீசிவிட்டுப் பயணிக்க வேண்டும்.
ஆனால், இந்த நாட்டில் பெரும்பான்மை, பௌத்த மக்களின் வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யமுடியும் என, தான் ஆரம்பத்திலிருந்து கருதினாலும் இலங்கையின் தமிழ், முஸ்லிம் மக்களிடம் எமது வெற்றியில் பங்கேற்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.
ஆனால், எதிர்பார்த்தளவு பலன்கள் எமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இனிவரும் காலங்களில் உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள் என்ற புதிய ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று நடக்கப் பழகிக் கொள்வோம்.