புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண் கவிஞர் செல்வி.

(யசோதா)

1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று செல்வி கேள்வி எழுப்பினார்.
புலிகள் செல்வியை ஒழித்துக்கட்டுவதற்கு முடிவெடுத்து இருந்ததாகவே செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால் மற்றுமொரு மனித உரிமைவாதியான ரஐனி திராணகமவைப் போன்ற அதே தன்மையான ஒரு சூழ்நிலைக்கு செல்வியின் நிலமையும் இட்டுச் செல்லாதவாறு இருக்கும்படியாக புலிகள் வேறு முடிவை எடுத்தனர்.

அதுவே கைது செய்தலாக முடீவுற்றது. செல்வியின் இருப்பிடத்திலிருந்து செல்வியின் கையெழுத்துப் பிரதிகள் குறிப்புக்கள் கடிதங்கள் புத்தகங்கள் அனைத்துமே அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.

செல்வி வவுனியாவில் உள்ள சேம மடு என்னும் கிராமத்தில் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகம் அரங்கியலும் என்ற பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவி. அத்தோடு இவர் நாடக நெறியாளரும் நடிகையுமாவார். ‘தோழி’ இதழின் ஆசிரியரும் கூட. செல்வி தன் நாடகங்களினாலும் கவிதைகளினாலும் குறுகிய காலத்திலேயே மதிப்பிடக்கூடிய படைப்பாளியாக விளங்கினார். புலிகளுக்கு ஆதரவாக இருப்பதை விடுத்து சுயெற்சையாக சுதந்திரமாக இயங்குவதற்கு பல்கலைக்கழக சக மாணவர்களை செல்வி ஊக்குவித்தார்.

இதனை அடுத்து செல்வி அரசுக்கு சார்பானவர் என்ற ஒரு கருத்தை விதைப்பதற்கு புலிகள் முனைந்தார்கள். மாறாக செல்வி அரசுக்கோ ஏனை அமைப்புகளுக்கோ ஆதரவாக இல்லாது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக செயல்படுவது எனும் முடிவில் உறுதியாக இருந்தார்.

யாழ்ப்பாணத்தில் அல்லல்படும் தாய்மார்களுடன் முன்னின்று செயல்பட்டதினால் அவர் சமூகத்திற்கு நன்கு அறியப்பட்டவராக இருந்தார். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளிலும் செல்வி ஈடுபட்டிருந்தார். பூரணி பெண்கள் இல்லத்தின் செயல்பாட்டாளர்களில் ஒருவராகவும் முக்கிய பங்கை வகித்தார்.

ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள் என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்துள்ளன அத்தோடு செல்வியின் கவிதைகளும் சிவரமணியின் கவிதைகளும் சேர்ந்த தொகுப்பொன்றை தாமரைச் செல்வி பதிப்பகம் தமிழகத்தில் வெளியிட்டிமிருந்தது. செல்வியின் கவிதைகள் தமிழகத்திலுள்ள சிறு பத்திரிகைகளான மனஓசை, மண் அரங்கேற்றம் இவை தவிர ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளது. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றுள்ளன.

செல்வியின் விடுதலையைக்கோரி சர்வதேச மனித உரிமை அமைப்பான Amnesty International பலவாறு முயன்றது. தனது இதழான Focus செல்வியைப் பற்றி 1994ம் ஆண்டு மார்ச் இதழில் விடுதலையைக் கோரி எழுதியது. புலிகள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது செல்விக்கு வழங்கப்பட்டது.

International PEN என்று அழைக்கப்படும் சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான (Poets Essayists and Novelists) PEN அமைப்பு கார்ல்ஸ் வொர்த்தியால் தொடங்கப்பட்டதாகும். இவ் விருதானது தங்களுடைய நம்பிக்கைகளுக்காகவும் இலட்சியத்திற்காகவும் எழுத்துத்தளத்திலும் கலைத் தளத்திலும் படைப்புக்களை உருவாக்கியவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.

செல்வி ஈழத்தின் நெருக்கடியான போராட்ட சூழ்நிலையில் இத்துறைகளில் சேவை புரிந்தமைக்காக இவ் விருது வழங்கப்பட்டது.
சிறந்த பெண்ணியவாதியான செல்வி யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.

செல்விக்கு விருதினை வழங்கிய அமைப்பானது தனது வெளியீட்டு பிரசுரமொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: ‘மரணத்தையோ அல்லது சிறைவாசத்தையோ கவிஞர்கள் எதிர்கொண்ட போதும் அவர்கள் மனிதனது மொழியை பேசுகிறார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு உருக்கொடுக்கிறார்கள்.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அதற்கு போராடுவதற்கும் உலகம் தழுவிய முயற்சிகள் இருந்த போதிலும், மனிதனுடைய கௌரவத்தை நேர்மையாக பகிரங்கப்படுத்தும் குரல்களுக்கான அவமதிப்பும், கவிதைக்கான அவமதிப்பும் என்பது மனித வாழ்வுக்கேயான அவமதிப்பாக அநேகமாக வெளிப்படுகின்றது’.
இந்த பிரசுரத்தின் இறுதிவரிகள் இவ்வாறு நிறைவுபெறுகின்றன.

‘மனித உயிருக்கும் உடலுக்கும் மரியாதை குன்றிப்போதல் மேலோங்கிவரும் இவ் உலகில் பலியாகிப்போன இன்னல்களுக்குள்ளான சகல கவிஞர்களையும் இன்னும் நூற்றுக்கணக்கான அறியப்படாத தனிநபர்களையும் அங்கீகரிக்கும் அதே நேரத்தில் இந்த வருடத்திற்கான விருதினை தமிழ் கவிஞையான செல்விக்கு வழங்குவதற்கு இவ் அமைப்பின் தலைமைப்பீடம் தீர்மானித்துள்ளது.’

செல்வியின் கவிதையொன்று…

அர்த்தமற்ற நாள்களில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்
அவலத்திலும் அச்சத்திலும்
உறைந்து போன நாள்கள்…..

காலைப் பொழுதுகளில்
பனியில் குளிக்கும் ரோஜாக்களை விட
பக்கத்தில் இளமொட்டு முகையவிழ்க்கும்
தொட்டாற் சிணுங்கி|யில்
கண்கள் மொய்க்கின்றன
இன்னுமெப்படி களையெடுப்பவன்
இதனைக் காணாது போனான்?
கேள்வியில் கனக்கும் மனது

விரிவுரைக்காய் வகுப்பறைக்குப் போனால்
அவிழ்க்கப்படும் பொய்கள்
விசிறிகளில் தொங்கிச் சுழல்கின்றன
அவை என் மீது விழுந்து விடும் பயத்தில்
அடிக்கடி மேலே பார்த்துக் கொள்கின்றேன்
மின்சாரம் அடிக்கடி நின்று போவதும்
நன்மைக்குத் தான்
செவிப்பறைமென் சவ்வுகள்
கொஞ்சம் ஓய்வெடுக்கின்றன.

திட்டங்களில் புதைந்து போன மூளைகள்
திட்டமிட்டுத் திட்டமிட்டே
களைத்த மூளைகள்
முகில்களில் ஏறியிருந்து சவாரி செய்கின்றன…
மூச்சுத் திணறும் இரத்தவாடை பற்றிய
சிந்தனையில்லாதது

நான் களைத்துப் போனேன்
புகை படிந்த முகத்துடன்
வாழும் நாள்கள் இது.

இறுதிக் கவிதை
—————————-

இராமனே இராவணனாய்

நான் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ளேன்.
என்னை யாரும் கேள்வி கேட்டுத்
தொந்தரவு செய்யாதீர்கள்
றூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கின்றது எனது இதயம்.

எந்த நேரமும்
விழுந்து வெடித்து விடக்கூடும்.

அசோகவனங்கள் அழிந்து போய்விடவில்லை.
இந்த வீடே
எனக்கான அசோகவனமாயுள்ளது.
ஆனால்
சிறைப்பிடித்தது இராவணனல்ல, இராமனே தான்.

இராமனே இராவணனாய்
தனது அரசிருக்கையின் முதுகுப்புறமாய்
முக மூடிகளை மாற்றிக் கொண்டதை
பார்க்க நேர்ந்த கணங்கள்..
இதயம் ஒருமுறை அதிர்ந்து நின்றது.

இந்தச் சீதையைச் சிறை மீள வருவது யார்?
அசோக வனங்கள்
இன்னும்
எத்தனை காலத்திற்கு?
(படம்: தமிழகத்தில் நாட்டுக்கூத்து கலைஞர் முத்துசாமி அவர்களோடு ஈழத்தில் கலப்படம் இல்லாத கலை வளர்க்க உன்னிப்பாக கேட்டுக்கொண்டு இருக்கும் செல்வி)