ஆகஸ்ட் ஆரம்பப் பகுதியில் ஜந்து கைதிகளை சுதா எழுந்து நிற்கச் சொல்லி அவர்களை விடுதலை செய்வதாகக் கூறினார். கால் விலங்குகளின் பூட்டைத் திறப்பதற்காக காலையிலிருந்து மதியம் பன்னிரண்டு மணி வரை காவலர்கள் முயற்சி செய்தனர். திறப்புகள் முதலில் வேலை செய்யவில்லை. துருப்பிடித்த பூட்டுக்களைத் திறப்பதற்கு அவற்றை அடித்தும், மண்ணெண்ணெய் ஊற்றியும் பூட்டுகள் திறக்கும்வரை அவர்கள் முயற்சித்தனர். மேலும் மூன்று வாரங்கள் இன்னொரு முகாமில் வேலை செய்ய வைக்கப்பட்டபின் பவளம்மா இறுதியில் முத்திரைச்சந்தையில் வைத்து விடுவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது உடுத்திருந்த அதே சேலை அவர் விடுதலையான போது உக்கிக் கிழிந்து கந்தலாகி முழங்கால் வரை தான் நின்றது. அவரது சங்கில மட்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டது. அவரது பணம் (54.000 ரூபா) மோதிரம் ஆகியவை ஒப்படைக்கப் படவில்லை. அது களவெடுத்த பொருட்களென கைது செய்தவர்கள் கூறிக்கொண்டனர்.
பிற்குறிப்பு: தனக்கு நடந்த அநுபவங்கள் பற்றி வெளியே சொல்ல கூடாதென பவளம்மா விடுதலையாகும் போது எச்சரிக்கை செய்யப்பட்டார். அதே சமயம் அவரது வீடு விடுதலைப் புலிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. வடக்கில் இருநஇது வெளியேறுவதற்கான விசாவை புலிகளிடமிருந்து அவர் பெற்றிருக்கவே முடியாது. மிகுந்த மனஉறுதி வாய்ந்த பெண்ணாயிருந்ததனால் அவர் 1992 இல் சில உதவிகளுடன் புலிகளுக்கு தெரியாமல் வழமைக்கு மாறான பாதையொன்றால் வடக்கிலிருந்து தெற்கையடைந்தார்.
1990 அக்டோபரில் சாவகச்சேரியிலிருந்து உடமைகள் பறிக்கப்பட்டு பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களே பவளம்மாவுக்கு இன்று அடைக்கலம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இம்முஸ்லிம் மக்களின் ஒருபகுதியினர் தற்போது வவுனியாவின் தென்பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் மிகவும் ஆதரவாகவும் அன்பாகவும் தன்னுடன் நடப்பதாயும் தனது நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாயும் பவளம்மா கூறினார். தான் எங்காவது சென்று நேரம் கழித்து வர நேரின் அவர்களில் யாராவது ஒருவர் சைக்கிளில் வந்து தான் ஆபத்தின்றி வீடு சேர்ந்ததை உறுதிப்படுத்தியே போவரென்றும் கூறினார்.
ஒருமுறை பவளம்மா வவுனியாவில் இருந்த கோவில் ஒன்றுக்கு வணங்கச் சென்றவிடத்தில் மட்டுவிலைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்தார். அவர், பவளம்மாவின் மூத்த மகன், இளைய மகன் (மெக்கானிக்) ஆகியோர் பற்றிய செய்திகளை தெரிவித்தார். புலிகள் கைதியாக வைத்திருந்து விடுவித்த ஒரு நபரிடமிருந்து பவளம்மாவைச் சந்தித்தவர் செய்தி அறிந்திருந்தார். மூத்த மகன், புலிகளால் கொழும்பிலிருந்து துணுக்காய் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, வழமையான சித்திரவதைகளுக்காளாகி கண் கட்டப்பட்டு, கால் விலங்கிடப்பட்டு பங்கருக்குள் சுமார் 300 பேர்களுடன் மூன்று மாதம் சிறை வைக்கப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது. இளைய மகன் முகாமொன்றில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மெக்கானிக் மகனின் தொழில் நுட்பத்திறனை புலிகள் தங்களுக்காக பயன்படுத்துவதாகவே கருதலாம். இரு மகன்மாரிடமிருந்தும் பவளம்மா இன்னும் எந்ததகவலையும் பெறவில்லை.
புலிகளின் அதீத இயல்பைத் தெரிந்து கொண்டும் தமது குடும்பங்களை விட்டுவிட்டு இந்திய இராணுவத்துடன் பின்வாங்கிய ஈபிஆர்எல்எவ் இனரை பவளம்மா சாடினார். இறுதியாக அவர், “நான் எனது அநுபவங்களின் ஒரு சிறு பகுதியை உங்களுக்கு கூறினேன். எந்த ஒரு சுயமரியாதையுடைய ஒரு பெண்ணும் தான் கேட்டவைகளையும், பார்த்தவைகளையும் அநுபவித்தவைகளையும் மீண்டும் வெளியில் சொல்ல முன்வரமாட்டார். எந்தவொரு பெண்ணுக்கும் இவ்வாறான அனுபவங்கள் ஏற்படக்கூடாது” என கூறினார். (சமூகத்தில் பொதுவாக பேசத்தடையான வார்த்தைகள் வரும் போது இவர் தனது தன்னடக்கத்தின் நிமித்தம் அவ்வாறான பதில்களைத் தவிர்த்து வந்தார். தன்னைப் பிடித்து வைத்தவர்களின் குணஇயல்புகளைப் பற்றியும் கூறுவதைத் தவிர்த்துக் கொண்டார்.)
அவர் மேலும் தெரிவித்ததாவது. இவ்வனுபவமானது தொடர்ந்து எனக்கு வேதனையை அளிக்கிறது. ஒரு சாதாரண குடும்பப்பெண்ணும் தாயுமான எனக்கு இத்தகைய அனுபவம் ஏன் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இது ஒரு பயங்கர கனவோ என்று கூட நான் நினைப்பதுண்டு.
மற்றும் சில கைதிகள்
புலிகளால் சிறையிலடைக்கப்பட்ட பெண்கள் சிலர்
மாலினி: மானிப்பாயைச் சேர்ந்த இவர் ஈபிஆர்எல்எவ் சிறியின் மனைவி. கைது செய்கையில் பலத்த தலைக்காயத்துக்கு உள்ளானார். மூளை குழம்பிய நிலை. சிறி ஒளித்து வைத்த ஆயத மறைவிடங்களை காட்டுமாறு கூறப்பட்டு சித்திரவதைக்காளானார். ஆனால் அவருக்கு ஆயுத மறைவிடங்கள் தெரியாது. ஊசிகளால் குத்தப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளார்.
தாவடியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்: மூத்த தமையன் ஈபிஆர்எல்எவ் இனருடன் சிநேகமாயிருந்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டார். வழமையான சித்திரவதைக்கு ஆட்பட்டார். இரத்தம் சிந்தும் வரை முட்கள் கொண்ட பொருட்களால் முதுகில் தாக்கப்பட்டார். பின்னர் இவர் விடுதலையானார்.
1990ம் ஆண்டு ஆரம்பத்தில் கல்முனை சந்தையில் வைத்து கைது செய்யப்பட்ட பெண். ஜந்து பெண்களுக்கு மூத்த சகோதரி. விவசாயியான இவரது தகப்பனார் குடித்து விட்டு புலிகளைத் திட்டுவார். இதனால் புலிகளால் சுடப்பட்டவர். இவ்விளம்பெண், ஆண்களால் கைது செய்யப்பட்டு 10 நாட்கள் காட்டுக்குள் இருந்த ஒரு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். இரண்டு மாதங்களாக பெரிய முகாமொன்றில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் யாழ் குடாநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். நன்கு நம்பிக்கையான கைதிகள் சிலரிடம் தான் புலிகளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். இதனால் இவர் விடுதலை பெறுவாரா என்பது ஜயத்துக்குரியது.
யாழ்ப்பாணம் பெரிய கடையிலுள்ள வீடியோ கடையில் வேலை பார்த்த இளம்பெண்: இந்திய சமாதானப் படையினர் இருந்த கால கட்டத்தில் ஈபிஆர்எல்எவ் இனர் வந்து இவர் வேலை செய்த கடையில் வீடியோ படங்கள் எடுப்பர். இவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து வாந்தியெடுத்த நிலையில் இருந்தார். முட்டை அடிக்கும் மின்சார உபகரணம் காதில் இரு நிமிடங்களுக்கு வைக்கப்பட்டது. பெரிய இரும்பு உருளை காலில் கட்டப்பட்டது.
விக்டர் அனா மேரி. (50)- பாட்டியொருவர்: இந்திய சமாதான படையின் முகாமொன்றுக்குப் போனதாக குற்றம் சாட்டப்பட்டவர். கடுமையான சித்திரவதைக்காளானார். கப்பியில் தலைகீழாகக் கட்டப்பட்டு தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்டு சித்திரவதைக்காளானார்.
(தொடரும்…..)