சமீபத்தில் 5 நாள் பயணமாக இலங்கைக்குச் சென்று வர ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. எனது பயணத் திட்டத்தில், துணுக்காய் என்ற இடத்தில் புலிகளின் வதைமுகாம் இருந்த இடத்தைப் போய் பார்ப்பது, அங்கு கொல்லப்பட்ட எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஆகியவை இடம் பெற்றிருந்தது.
புலிகளால், மனிதக் கேடயமாக வலிந்து கொண்டு செல்லப்பட்ட மக்கள்
புலிகளாலும், இராணுவத்தாலும் கொல்லபட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்கு இம்முறை என்னால் செல்ல முடியவில்லை. மறுமுறை. பார்க்கலாம்.
27 மாசி 2018 காலை மாவின் தோழருடன் துணுக்காய் பயணமானோம்.
சிறைச்சாலை அமைந்திருந்த இடத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஊருக்குள் சென்று விசாரித்தோம். 50 வயதுக்கு மேற்பட்ட நாலு பேரிடம் பேசினோம். அவர்களது வழி காட்டலின் படி அந்த இடத்துக்குப் போய் பார்த்தோம். அந்த இடத்தில் கல்லின் மேல் கல்லில்லை. ஏன் இடிபாடுகளையே காணவில்லை. அப்போது அவ்வழியால் வந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவருடன் பேசிப் பார்த்தோம்.
இலங்கை இராணுவத்துடன் சண்டை ஆரம்பித்து சில நாட்களின் பின்னர் புலிகள் இந்தக் கட்டிடத்துக்குக் குண்டு வைத்துத் தகர்த்ததாகவும், பின்னர் இலங்கை இராணுவமும் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் சொன்னார். புலிகள் குண்டு வைத்துத் தகர்த்த போது இதற்குள் சில கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.
இப்போது நோர்வே அரசு அனுசரணையுடன் இரண்டு களஞ்சியச் சாலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது இருப்பது முன்பு இருந்ததிலும் பார்க்க அளவில் சிறியது.
புளொட் தோழர்கள், ரெலோ உறுப்பினர்கள், ஈபிஆர்எல்எவ் மற்றும் ஈஎன்டிஎல்எவ் தோழர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் அங்கு புலிகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். கூட்டமைப்பைச் சேர்ந்த மாவட்டசபை உறுப்பினர் ஒருவர், மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் எனப் பலரும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இங்கு தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட உங்கள் கட்சி உறுப்பினர்களுக்காக இந்தக் கட்சிகளின் தலைமைகள் என்ன செய்யப் போகிறார்கள். குறைந்த பட்சமாக ஒரு நினைவுச் சின்னமாவது?????????