முன்னாள் புலிப் போராளி ஒருவர், தனது குடும்பத்துடன் முஸ்லிமாக மதம் மாறியுள்ளார்! இது ஒன்றும் புதினம் அல்ல. ஏற்கனவே நூற்றுக் கணக்கான முன்னாள் புலிப் போராளிகள் (பெந்தெகொஸ்தே) கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர். அதற்குக் காரணம் ஆதரவின்மை, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை.லண்டன் IBC தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆவணப் படத்தில் காட்டப் பட்ட அந்தத் தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். இதைக் காண நேரும் போலித் தமிழ்த்தேசியவாதிகள், “கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள்” என்று சொல்லிக் கொண்டு கம்பு சுற்றக் கிளம்புவார்கள். அந்த ஆவணப் படத்தை ஒளிபரப்பிய அறிவிப்பாளரே “இது ஒரு நுணுக்கமான இனவழிப்பு” என்று பிதற்றினார்.
வாய் நிறைய தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டே, தமது சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் இரக்கப் படாத கயவர்கள் இவர்கள். தமது இனத் துரோகத்தை மறைப்பதற்காக எந்த பித்தலாட்டத்தையும் செய்யத் தயங்காதவர்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் வசதிபடைத்த புலி ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும், ஒரு முன்னாள் புலிப் போராளிக்கு உதவி செய்தாலே போதும். அதையும் இந்த ஆவணப் படமே கூறுகின்றது.
ஈழத் தமிழர் மத்தியில் உள்ள ஏற்றத் தாழ்வை மூடி மறைத்துக் கொண்டே “எல்லோரும் தமிழர் என்று ஒரே இனமாக சிந்திக்கிறார்கள்” என்று பிதற்றிக் கொண்டிருக்கும் வீணர்கள் உண்மைகளை பேசப் போவதில்லை. இன்று கைவிடப் பட்ட முன்னாள் புலிப் போராளிகள் வறுமையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள்.
ஈழப் போர் முடிந்தவுடன், வறிய குடும்பங்களை சேர்ந்த போராளிகள், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக ஒதுக்கப் பட்டனர். எந்த நேரமும் சந்தேகப் படும் புலனாய்வுத்துறையினரின் கெடுபிடி ஒரு பக்கம். வேலை வாய்ப்பில்லாத படியால் தொடர்ந்தும் வறுமைக்குள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் மறுபக்கம். அதேநேரம், போர் அனுபவங்களால் ஏற்பட்ட மன அழுத்தங்களால் மனநிலை பாதிக்கப் பட்டுமுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்கு, எந்தவொரு இந்து மத அமைப்போ அல்லது தமிழ்த் தேசிய அமைப்போ முன்வரவில்லை. அப்படியான நிலையில் அவர்கள் மதம் மாறுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. மத மாற்றத்தை எதிர்ப்பவர்கள் முதலில் வறுமையை ஒழிக்க முன்வாருங்கள். அதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆராயுங்கள். இல்லாவிட்டால் அங்கு நடக்கும் மதமாற்றத்திற்கு, நீங்களும் ஒரு வகையில் உடந்தை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
(Kalai Marx)