ஊருக்கு நூறு பேர்.இது ஜெயகாந்தனின் நாவல்.
ஒருவன் நக்கல்பாரி இயக்கத்தில் பயிற்சி பெற செல்கிறார்.அவரை ஆயுதங்கள் சகிதம் சிலர் வந்து வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள்.பயிற்சிக்காக செல்பவர் கொஞ்சம் யோசித்துவிட்டு நீங்கள் என்னை கடத்திச் செல்வது போல உணர்கிறேன் என்றார்.அதைக் கேட்ட மற்ற தோழர்கள் சிரித்துவிட்டு ஒருவர் தனது துப்பாக்கியை பயிற்சிக்கு வந்தவரிடம் கொடுத்தார்.அவரும் வாங்கிப் பார்த்தார்.அவரையே வைத்திருக்கும்படி கூறுகிறார்கள்.அவரும் புன்னகையோடு வைத்திருக்கிறார்.வாகனம் தொடர்ந்து பயணிக்கிறது.இப்போது தோழர்கள் கேட்டார்கள்.இப்போது எப்படி உணருகிறீர்கள்.என் தோழர்களோடு தோழர்களோடு தோழர்களாக பயணிக்கிறேன் என்றார்.
ஒரு போராளியைப் பார்த்து ஒரு போராளி அச்சப்படவோ சந்தேகப்படவோ கூடாது.மக்களுக்கும் சஅக தோழர்களுக்கும் நம்பிக்கையைக் கொடுப்பவனே உண்மையான போராளி.அதுவே மக்கள் போராளிக்கு உள்ள அழகு.இப்படியா எமது இயக்கங்கள் கட்டி அமைக்கப்பட்டன.மக்கள் தங்களைக் கண்டு பயப்படுவதையே ரசித்தார்கள்.
இ.எம்.எஸ். நம்பூதிரி பாத் அரசியலில் ஓய்வு பெற்றதும் இ.கே.நாயனார் அரசியல் தலைமைப் பொறுப்பேற்றார்.1986 இல் சட்டசபை தேர்தலை அவர் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி எதிர் கொண்டது.அவர் பீடி குடிக்கும் பழ்க்கம் உள்ளவர்.இதை பகிரங்கமாக பீடி புகைப்பார்.அதை ஒரு பத்திரிகையாளர் ஒரு தலைவராகிய நீங்கள் பகிரங்கமாக மக்கள் முன் பீடி புகைக்கலாமா?கேள்வி எழுப்பினார்.அதற்கு அவர் எனது இந்த பழக்கத்தை மறைத்தால் மக்களுக்கு தெரிய வராதா? இதையே மறைத்தால் இந்த உண்மையை மக்கள் அறிந்தால் மேலும் சந்தேகப்பட மாட்டார்களா? எனவே எனது இந்தப் பழக்கத்தை மக்களுக்கு மறைக்க விரும்பவில்லை என்றார்.
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து போராடுபவர்களிடம் நேர்மை இருக்கவேண்டும்.ஒழிவு,மறைவு,பொய்கள் இருக்கக்கூடாது.ஆனால் போராளிகள் என வந்த நமது அமைப்பினர்களிடையே இந்த நேர்மைகள் இருக்கவில்லை.
புலிகளைப் பொறுத்தவரை தமிழரின் உரிமையின் பெயரால் போராடிய அனைத்து அமைப்புகளையும் ஆயுத முனையில் அழித்தவர்கள்.போராட்டம்,விடுதலை,மக்களுக்கான பாதுகாப்பு அனைத்தையும் பொறுப்பெடுத்தவர்கள்.எனவே 1986 மே இற்கு பின்னதான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவர்களே பொறுப்பாளிகள்.
இலங்கை இராணுவமாகட்டும்,இந்திய இராணுவம் அல்லது ஏனைய உதிரிக் குழுக்கள் சகலதையும் மக்களின் எதிரிகளாக சித்தரித்தார்கள்.அதை மக்களில் ஒரு பகுதியினர் ஆதரித்தார்கள் .எனவே அவரகள் எத்தனை கொடுமைகள் செய்திருந்தாலும் பொது விமர்சனத்துக்கு அல்லது கண்டனங்களுக்கு அப்பாற்பட்டவை.அவர்களுக்கு எதிரான விமர்சனங்கள் இன்னொரு கோணத்தில் ஆராயப்படவேண்டியவை.விமர்சிக்கப்பட வேண்டியவை.
பொது மக்களின் நேச சக்திகள் செய்யும் தவறுகளை பொது எதிரியின் தவறுகளோடு ஒப்பிட முடியாது.நியாயப்படுத்தவும் முடியாது.ஒரு அண்ணன் தம்பி என்னை ஏமாற்றுவதற்கும் அடுத்தவன் என்னை ஏமாற்றுவதற்குமான வித்தியாசம் என்னவோ அதுவே புலிகள் செய்த கொடுமைகளுக்கும் அரச படைகள் அல்லது அவர்களோடு சார்ந்தவர்கள் செய்த கொடுமைகளுக்கு இடையேயான வித்தியாசம்.
இந்த வகையில்தான் புலிகளுக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன.அவர்களுக்கு எதிரான விமர்சனங்கள் அரச படைகளின் அல்லது ஏனைய அமைப்புகளின் கொடுமைகளை நியாயப்படுத்துகிறது என அர்த்தம் கொள்ள முடியாது.
தவறுகள் யார் விட்டாலும் தவறுதான்.ஆனால் தமிழ் மக்களின் உரிமைகளை ஆயுத பலத்தால் அபகரித்த புலிகள் மட்டுமே சகல தரப்பினர் விட்ட தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய அமைப்பாக உள்ளது.அவரகளது தவறுகளின் எதிர்வினைகளே மற்றவர்களின் தவறாக அமைந்தது.
எனது விமர்சங்களோ மற்றவர்களின் விமர்சனங்களோ புலிகளை வசைபாட வைக்கப்படவில்லை.இராணுவத்தையோ ஏனையவர்களை நியாயப்படுத்தும் நோக்கமும் இல்லை.மற்றவர்களின் தவறுகளை பெரிதாக்கி புலிகளை புனிதர்களாக போராளிகளாக நியாயப்படுத்துவதை நிராகரிக்கின்றோம்.புலிகளின் தவறுகள் மக்களுக்கு தெரியவேண்டும்.
(Vijay Baskarn)