புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 7)

பின்னர் புதுமாத்தளன் பகுதி கடற்கரையிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சையும் மேலதிக மருத்துவத்துக்காகக் கப்பல் மூலம் திருகோண மலைக்கும் காயமடைந்தவர்களும் நோயாளிகளும் எடுத்துச் செல்லப்பட்டனர். ஒவ்வொரு கப்பலிலும் 400க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டனர். கை கால் இழந்தவர்கள், கண் பறிபோனவர்கள் உறவுகளை இழந்தவர்கள் என்றே இவர்கள் இருந்தனர். தினமும் தெருவிலும், ஆஸ்பத்திரியிலும், தார்ப்பாலின் கூடாரங்களின் மத்தியிலும் சாவடைந்த பிணங்கள் தொகை தொகையாகக் கிடந்தன. மரணம் எல்லோருடனும் குதித்து விளையாடியது. தாம் உயிர் பிழைப்போம் என்று அந்த நாட்களில் எவரும் நம்பியிருக்கவில்லை. சாவு அந்தக் கணம்வரைத் தங்களை நெருங்கவில்லை என்பது மட்டுமே உண்மை. மற்றபடி கொலை வலயத்தினுள்ளேதான் எல்லோரும் இருந்தனர். 

ஒரு சிறு அமைதியோ இடைவெளியோ வராதா; இந்தியாவோ தமிழகமோ ஐ.நாவோ பிற சர்வதேசச் சமூகமோ சிறியதொரு அமைதிச் சூழலை உருவாக்கித் தரமாட்டாதா என்ற ஏக்கம் எல்லோர் மனதிலுமிருந்தது. இதேவேளை புலிகளின் கடுமையான கண்காணிப்பையும் மீறிப் பொதுமக்கள் எப்படியோ வன்னியைவிட்டு வெளியேறிக்கொண்டேயிருந்தனர். ஆனால் அந்தத் தொகை பெரியதல்ல. புதிய புதிய காட்டுவழிகள், கடல்வழிகள், சதுப்பு நிலப்பாதைகளினூடாக மிக உச்சமான அபாயங்களின் மத்தியில் சனங்கள் ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர். 

வன்னியிலிருந்தால் மரணத்தைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்ற நிலை. ஆனால் வன்னியை விட்டு எளிதில் வெளியேற முடியாது. அப்படிச் சுழித்துக்கொண்டு வெளியேறும்போது புலிகளின் கண்களில் சிக்கினால் அவ்வளவுதான். நெற்றிப்பொட்டுச் சிதறும். சுட்டுக் கொன்றுவிடுவார்கள் கொல்லப்படுவோர் தவிர இளவயதுடைய பெண்களையும் ஆண்களையும் பிடித்துச் செல்வார்கள். குழந்தைகளும் சிறுவர்களும் மட்டும் விடுவிக்கப்படுவார்கள். இளவயதினர் போருக்காகப் பிடித்துச் செல்லப்படுவர். இதைவிடப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஏதாவது வழியில் செல்லத் தொடங்கினால் கண்டமேனிக்குத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களும் காயப்படுத்தப்பட்டவர்களும் அதிகம். என்றாலும் சனங்கள் தப்பியோடுவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சில சந்தர்ப்பங்களில் புலிகள் சுடச்சுடப் பலர் தப்பியோடி இராணுவத்தினரிடம் சரணடந்தார்கள். சிலர் தப்பியோடும்போது அவர்களுடைய குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். சிலர் கைதுசெய்யப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். புலிகள் தடுக்கத் தடுக்கப் பொதுமக்கள்மீதான இராணுவத்தின் தாக்குதல்களும் அதிகரித்தன. மருந்துத் தடை, உணவுப்பொருட் தடை என்பனவும் தீவிரமடைந்தன. சனங்களின் கையில் பணமில்லை, உற்பத்திகளில்லை வருமானமில்லை, சேமிப்பில்லை. வங்கிகள், பாட சாலைகள் எதுவுமில்லை. தூங்குவதற்கோ சமைப்பதற்கோ குளிப்பதற்கோ அவகாசமில்லாமல் எரிகணைகள் வீழ்ந்து வெடித்தன. சனங்களை இலக்குவைத்து இரண்டு தரப்புகளும் தாக்குதல்களை நடத்தின. புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குக் கொல்லப்படும் சனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு. அப்படி என்றால்தான் இந்தப் படுகொலைகளை முன்னிட்டு ஐ.நாவோ இந்தியாவோ சர்வதேசச் சமூகமோ தலையிடக்கூடிய வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் நம்பினார்கள். அதை அவர்கள் முழுதாகவே எதிர்பார்த்தார்கள். எனவே கொலைப்பட்டியலை நீட்டிக் காட்டுவதற்கேற்ற முறையில் இராணுவத்தைச் சீண்டும் விதமாகக் கோப மூட்டும் வகையில் தமது தாக்குதல்களைத் தொடுத்தனர். படைத்தரப்புக்குத் தப்பியோடித் தங்களிடம் வரும் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம். சனங்களைப் புலிகளிடமிருந்து பிரித்துவிட்டால் புலிகளால் ஒரு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவர்கள் சரியாக மதிப்பிட்டிருந்தனர். எனவே சனங்களை மையமாக வைத்து, சனங்களின் உயிரைப் பணயமாக வைத்து இரண்டு தரப்பும் தமது தாக்குதல்களைத் தொடுத்தன. 

ஒரு கட்டத்தில் இதுதான் உண்மை நிலைமை என்று சர்வதேச அமைப்புகளும் சர்வதேச ஊடகங்களும் கண்டுபிடித்திருந்தன. படைத்தரப்பு முன்னேற முன்னேற நிலைமை மோசமடையவே தொடங்கியது. இப்போது பங்கர்களும் பாதுகாப்பாற்றவையாகின. வெளியே நடமாட முடியாத அளவுக்கு ஓய்வில்லாத தாக்குதல். பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்ளேயே தாக்குதல்கள். புலிகளும் இந்தப் பகுதிக்குள் இருந்தே தாக்குதல்களைத் தொடுத்தனர். எதிரியைச் சினமடைய வைக்கும் வகையிலான தாக்குதல்கள். புலிகளின் இந்த மாதிரியான பொறுப்பற்ற நடவடிக்கைகளைச் சனங்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஏனெனில் தாக்குதல் எந்தப் பகுதியிலிருந்து வருகின்றதோ அந்தப் பகுதியை நோக்கி பதிலடியைப் படையினர் கொடுப்பார்கள். இதன்போது கொல்லப்படுவது சனங்களே. 

முன்னரே குறிப்பிட்டுள்ளதைப் போலச் சனங்களின் சாவுப் பட்டியலில்தான் தமது எதிர்கால அரசியல் நலன் தங்கியிருக்கிறது எனப் புலிகள் நம்பினார்கள். இதற்கு ஏற்றமாதிரி அவர்கள் தம் வசமிருந்த இணைய தளங்களையும் செய்மதிற் தொலைபேசிகளையும் பயன்படுத்தினார்கள். அக்காலப் பகுதியில் வன்னியின் குரலாக வெளிப்பட்ட மருத்துவர்களின் வாக்கு மூலங்களில் பாதி உண்மைகள் மட்டுமே வெளிவந்தன. அதற்காக மற்றதெல்லாம் பொய் என்று பொருளல்ல. அவர்கள் மீதி உண்மையைச் சொல்லவில்லை. புலிகள் தரப்பு நடவடிக்கையைப் பற்றிப் பேசவில்லை. வெளி ஊடகங்கள் எதுவும் இல்லாத சூழலில் தாம் சொல்வதே வேத வாக்கு எனப் புலிகள் நிரூபிக்க முயன்றனர். 

(தொடரும்….)