ஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய நாட்கள் கடற்கரைப் பகுதியான புதுமாத்தளன், அம்பலவன், பொக்களை என்ற இடங்கள் படையினர் வசமாயின. சனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையினரிடம் தப்பிச் செல்லப் புலிகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கடலிலும் உச்ச பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டிருந்தது. இந்தக் காலப்பகுதியிலும் இதன் முன்னரும் புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய நாடுகளில் தொடர் போராட்டங்களை நடத்தினர். உண்மையில் உயிர்த்துடிப் போடும் உணர்வெழுச்சியோடும் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரித்தானியா, நோர்வே, சுவிஸ், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்திய போராட்டங்கள் முக்கியமானவை. ஆனால் இந்தப் போராட்டங்களை வன்னி மக்களில் பெரும்பான்மையானோர் விரும்பவில்லை.
காரணம் இந்தப் போராட்டங்கள் தங்களைப் பாதுகாக்கும் வகையில் இவற்றைச் சுருக்கி புலிகள் தமக்கு வாய்ப்பை உருவாக்கும் முறையில் மாற்றிக்கொண்டனர். போராட்டங்களை நடத்திய முறையும் புலிகள் புலம்பெயர் தமிழர்களையும் அமைப்புகளையும் பயன்படுத்திய முறையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு வலுசேர்ப்பதாக அமையவில்லை. மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்குப் புலம்பெயர் மக்களால் முடியாமல் போனதையிட்டு இதை யாரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
இன்னும் சற்று விளக்கமாகச் சொன்னால் புலிகளின் ஜனநாயக மறுப்பைப் பற்றிப் புலம்பெயர் தமிழர்கள் போதுமான அளவு பேசியதில்லை. புலிகளின் பகுதியில் அல்லது இலங்கைத் தீவில் புலிகளின் மீது விமர்சனங்களை யாரும் வைக்க முடியாது. அதற்கான வெளியை புலிகள் விட்டுவைக்கவில்லை. ராஜினி திரணகம செல்வி, ‘புதியதோர் உலகம்’ நாவலை எழுதிய கோவிந்தன் உட்பட ஏராளமானவர்களின் படுகொலைகள் இதற்கு உதாரணம். எனவே புலம்பெயர் மக்களால் மட்டும்தான் ஓரளவுக்குப் புலிகளின் ஜனநாயக மறுப்பையும் அரசியல் பார்வையற்ற தன்மையை யும் சர்வதேச மற்றும் போராடும் மக்களின் மனநிலை சூழ்நிலை என்பவற்றைக் கணக்கில் கொள்ளாத போர்முனைப்பையும் இன்னும் பலவாறான எதிர்மறை அம்சங்களைப் பற்றியும் பேசியிருக்க முடியும். அவர்களுக்குத்தான் இந்தப் பொறுப்பு அதிகமுண்டு.
ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் எந்தவிதமான விமர்சனங்களுமற்று பிரபாகரனை வழிபட்டனர். புலிகளை நிபந்தனைகளற்ற முறையில் ஆதரித்தனர். ஆனால் இதைப் புலிகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியதும் புலம்பெயர் தமிழர்கள் இதற்குப் பலியானதும் ஒன்றாகவே நடந்தன. புலிகள்மீதான விமர்சனத்தை வைத்து ஈழப் போராட்டத்தை விரிந்த தளத்தில் ஜனநாயக உள்ளடக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்ற புலம்பெயர் தமிழர்களும் புத்திஜீவி களும் ஏற்கனவே புலிகளின் ஆதரவுச் சக்திகளால் ஓரங்கட்டப்பட்டு மௌனிக்கப்படுத்தப்பட்டிருந்தனர். ஒரு நண்பர் சொல்வதைப் போலப் பிரபாகரன் எல்லாவற்றையும் தியாகம் – துரோகம் என்ற பிரிகோட்டைப் போட்டுப் பிரித்து வைத்திருந்தார். புலிகளின் சிந்தனை முறைக்கு எதிராகச் சிந்திப்பவர்களும் செயல்படுபவர்களும் துரோகிகளாகவும் எதிர்நிலை யாளர்களாகவும் பார்க்கப்பட்டனர். வெகுஜனத் தளத்தில் இலகுவில் பதிந்துவிடக்கூடிய இன உணர்வு, மொழி உணர்வு போன்றவற்றை ஆதாரமாகக்கொண்டு பிரபாகரன் இதை வெற்றிகரமாகச் செய்துகொண்டார்.
எனவே ஜனநாயக உள்ளடக்கமற்ற புலிகளின் போராட்டத்தை – இந்தப் போராட்டங்களை நடத்திய மக்கள் தங்களின் கைகளில் பிரபாகரனின் படத்தையும் தமிழ் ஈழப் படத்தையும் வைத்திருந்ததை நினைவில் கொள்க –மேற்குலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எப்படியும் யுத்தத்தை நிறுத்திவிட வேண்டும், மக்களைக் காப்பாற்ற வேண்டும், ஈழத்தில் ஒரு அமைதிச் சூழலை கொண்டுவரத் தாம் பாடுபட வேண்டும் என்று இந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் விசுவாசமாகவே முயன்றனர். அதற்காக அவர்கள் இரவு பகலாகத் தொடர்ந்து போராடினர்.
(அருண் நடேசன்)
(தொடரும்….)